தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மஹியங்கனை -ஹஸலக பிரதேசத்தைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்ணை பிணையில் விடுவிக்க மஹியங்கனை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. பாத்திமா மஸாஹிமா எனும் குறித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல இதன்போது மஹியங்கனை நீதிவான் ஏ.ஏ.பி. லக் ஷ்மன் அனுமதித்தார்.
குறித்த பெண் சார்பில் மன்றில் கடந்த தவணையின் போதும் நேற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சரூக் மற்றும் சட்டத்தரணி நுஸ்ரா ஆகியோர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்திற்கொண்டும், அதனை மையப்படுத்தி ஹசலக பொலிஸார் நீதிவான் நீதிமன்றுக்கு பிணை வழங்க முடியாத ஐ.சி.சி.பி.ஆர். எனப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பட்டு சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்களை அகற்றிக்கொண்டதாலும் பிணையில் செல்ல இந்த அனுமதி வழங்கப்பட்டது.
தர்மச் சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து பெளத்த மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதன் ஊடாக இரு சமூகங்களுக்கிடையில் இன முறுகலை ஏற்படுத்த முயற்சித்ததாக குறித்த பெண் மீது ஹஸலக பொலிசார் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். நேற்றைய தினம் அந்த குற்றச்சாட்டை திருத்திய ஹசலக பொலிசார், குற்றச்சாட்டை தண்டனை சட்டக் கோவையின் 291 பீ பிரிவின் கீழ் மட்டும் பதிவு செய்தனர். மத நிந்தனை தொடர்பிலான குறித்த குற்றச்சாட்டு பிணை வழங்கத்தக்க குற்றச்சாட்டு என்பதை சட்டத்தரணிகள் நீதிவானுக்குத் தெளிவுபடுத்திய நிலையிலேயே குறித்த பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக கடந்த தவணையில் பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க தர்ம சக்கரம் பொறிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட குறித்த ஆடையை பௌத்த சமய ஆணையாளர் திணைக்களத்திற்கும் தர நிர்ணய சபைக்கும் அறிக்கைக்காக அனுப்பி வைக்கவும் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. எனினும் நேற்று அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
எனினும், நேற்று மன்றுக்கு கருத்து தெரிவித்த ஹசலக பொலிசார், பெளத்த அலுவல்கள் ஆணையாளருக்கும் தரநிர்ணய சபைக்கும் அனுப்பப்பட்ட ஆடையிலுள்ள வடிவத்தை ஒப்பிட்டு நோக்குவதற்கு தங்களிடம் சரியான தர்மச்சக்கரத்தின் வடிவம் இல்லை என அறிவித்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தைச் சொல்வதால் நாம் சரியான முடிவுக்கு வரமுடியாமலிருப்பதால் ஆடையின் வடிவம் தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்கு குறிப்பிட்ட இரு தரப்பினரும் தர்மச்சக்கரம் தொடர்பான சட்டமா அதிபரின் பரிந்துரையை எதிர்பார்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என குறிப்பிட்டனர்.
இதனையடுத்து சந்தேக நபரான பெண் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், சட்டமா அதிபரின் வேலை வழக்கை தொடர்ந்து நடத்துவதா? இல்லையா? என முடிவெடுப்பதே!
குறிப்பிட்ட ஆடையிலிருக்கும் வடிவம் தர்மச்சக்கரமா ? இல்லையா என முடிவெடுப்பது பெளத்த சமய அலுவல்கள் ஆணையாளரே! என சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்தே பொலிசார் குற்றச்சாட்டை திருத்திய நிலையில் பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டு குறித்த பெண்ணுக்கு பிணை பெற்றுக்கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட வடிவம் பௌத்த மதத்தின் புனித சின்னமாகிய தர்மசக்கரம் அல்ல, அது கப்பலின் சுக்கானாகுமென இப்பெண் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டதுடன் பிணை வழங்குமாறும் அந்த கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆடையிலிருக்கும் வடிவம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதிக்கு இதன்போது நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-Vidivelli