- மொஹமட் பஸ்லான்
அரசறிவியல் துறை – கொழும்பு பல்கலைக்கழகம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு நெருக்குதல்களுக்கும், வன்முறைகளுக்கும் மற்றும் அச்சத்துக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். சுமார் 10 வீதமான சனத்தொகையைக் கொண்ட இலங்கை முஸ்லிம்கள், 0.1 வீதத்துக்கும் குறைவானவர்களின் பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதலினால் பெறும் அவமானத்துக்கும் அச்சத்துக்கும், வன்முறைகளுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். முஸ்லிம்கள் அரசியல், பொருளாதார, சமூக, சமய மற்றும் தொழில்வாண்மை ஆகிய துறைகளில் நெருக்குதல்களை சந்திக்கின்றனர். முஸ்லிம்களுக்குள் பிளவுகள் மற்றும் பிரிவுகளின் போக்கு மற்றும் போட்டியின் அதி உச்ச வன்முறைப் பிரயோகமே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலாகும். இலங்கை முஸ்லிம்களுடைய அடையாளம் எவ்விதம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது? முஸ்லிம்களுக்கிடையில் பல்வேறு குழுக்கள் தோன்றியதன் வரலாறும் முஸ்லிம்களுடைய அரசியல் ஆகியவற்றை இக்கட்டுரை விளக்குகின்றது. ஏற்கனவே முஸ்லிம் உள்ளக மோதல்கள் பற்றி எழுதப்பட்ட ஆய்வினைத் தழுவியாகவும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அடையாளம் என்பது பற்றி சமூக விஞ்ஞானத் துறைகளில் அதிகளவில் விவாதிக்கப்படுகின்ற ஓர் எண்ணக்கருவாகும். இந்த அடையாளம் என்பதை அடிப்படையாக வைத்தே உலகில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. அரசியலின் முக்கியமானதொரு ஒன்றுதிரட்டும் சக்தியாக ‘அடையாளம்” காணப்படுகின்றது.. இவ்வகையில் இனத்துவம், இனம், பால்நிலை, மதம் மற்றும் கலாசார பின்னணிகளைக் கொண்ட குறிப்பிட்ட மனிதர்களை உள்ளடக்கிய குழுவினர், தங்களது அரசியல் நலனுக்காக கூட்டிணைவது ‘அடையாள அரசியல்’ எனப்படுகின்றது. இவ்விதமாக அரசியல் நலனை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாமிய மதம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களை ஒன்றுதிரட்டி, பிறிதொரு இனக்குழுவாக அடையாள அரசியலில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்கலாம். இந்த அடையாள அரசியலின் வரலாற்றுப் போக்கினை சுருக்கமாகப் பார்க்கலாம்.
இலங்கை முஸ்லிம்கள் பிறிதொரு இனத்துவ மதச் சமூகமாக, தங்களுடைய அடையாளத்தை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளுக்கமைய மாற்றியமைத்துள்ளார்கள். டெனிஸ் மகில்விரே என்ற ஆய்வாளரின் கருத்துப்படி, தென்னிந்திய முஸ்லிம்களைப் போன்று இலங்கை முஸ்லிம்களும் அராபிய மற்றும் பாரசீக கடல்சார் வியாபாரிகளின் வழித்தோன்றல்களினால் தோற்றம் பெற்றதொரு கலப்பு இனமாகும். இவ்விதமாக நீண்ட கடல் பயணங்களை மேற்கொண்ட அரேபிய வியாபாரிகள் இலங்கையில் தங்கியிருந்து, இலங்கைப் பெண்களை திருமணம் செய்ததினூடாகவே இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றங்கள் ஆரம்பித்தன. இதன் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கு இந்நாட்டு சுதேச மக்களுடனான இரத்தத் தொடர்பு உள்ளதை உறுதிப்படுத்தலாம். கலாநிதி சுக்ரியின் கருத்துப்படி, 9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில், முஸ்லிம்களுடைய அடையாளமாக அரபு மொழியும் இஸ்லாமிய மதமும் காணப்பட்டன.
அராபிய வர்த்தகமானது 13ஆம், 15ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் வியாபித்ததுடன், இலங்கைக்கு அதிகளவான தென்னிந்திய வர்த்தகர்களின் பிரசன்னமும் அதிகரித்தது. இதனால் இலங்கையில் அதிகளவான தென்னிந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் குடியேற்றங்களும் ஏற்பட்டதுடன் அது இலங்கை முஸ்லிம்களுடைய கலாசாரத்திலும் அடையாளத்திலும் மாற்றங்களைக் கொண்டுவந்தது. குறிப்பாக இதுவரை காணப்பட்ட அராபிய அடையாளம் இந்திய அராபிய அடையாளமாகப் பரிணமித்ததுடன், மொழி ரீதியாக அராபியத் தமிழும் இலங்கை முஸ்லிம்களிடத்தில் தோற்றம் பெற்றது.
போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்தர்களின் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் பல துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டதுடன், கரையோர துறைமுக வர்த்தகங்களை முஸ்லிம்கள் இழந்ததுடன், கரையேராப் பிரதேசங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அதன் பின்னரே கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் குடியேறினர். இக்காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்களுடைய அராபிய உலகினுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுடன், மதம் மற்றும் கலாசார விடயங்களில் தென்னிந்தியாவில் தங்கியிருக்க வேண்டி ஏற்பட்டது. இதன்மூலம் தென்னிந்திய சூபிக் கலாசாரம் இலங்கையில் பரவ ஆரம்பித்தது.
பிரித்தானியரின் ஆக்கிரமிப்புக்குப் பின்னர், முஸ்லிம்களுக்கு சாதகமான கொள்கை கொண்டு வரப்பட்டதுடன், முஸ்லிம்களுடைய வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புக்களும் ஒத்தாசைகளும் வழங்கப்பட்டன. இக்காலத்தில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் முன்னேற்றமடைந்தமை 1915 சிங்கள – முஸ்லிம் கலவரத்துக்கு ஒரு முக்கிய காரணம் எனக் குறிப்பிடலாம். பிரித்தானியர் காலத்தில் முஸ்லிம்களின் சமூக சீர்திருத்தத்துக்கு ஒராபி பாஷா தலைமை தாங்கினார். இவருடன் சேர்ந்து சித்திலெப்பையும் முஸ்லிம்களுடைய கல்வி வளர்ச்சிக்காகவும் சமூக சீர்திருத்தத்துக்காகவும் சேவை செய்தார். குறிப்பாக அரபு மத்ரஸாக்களில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தல் மற்றும் முஸ்லிம் பெண்களுக்கான பாடசாலை ஆரம்பிக்கப்பட்டன. இக்காலத்தில் முஸ்லிம்களுடைய அடையாள அரசியல் தனியான கல்வி மற்றும் பத்திரிகை வெளியீடாகக் காணப்பட்டது.
மேற்கூறிய கல்வி அபிவிருத்தி மற்றும் பத்திரிகை ஆகியன முஸ்லிம்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் தோற்றம் தென்னிந்தியாவுடன் தொடர்புபட்டதாகவும் அவர்கள் மதம் மாறிய தமிழர்கள் என்ற பொன்னம்பலம் இராமநாதனின் கருத்தை ஐ.எல்.எம் அஸீஸ் முற்றாக எதிர்த்ததுடன், முஸ்லிம்கள் தனியான சமூக மற்றும் அரசியல் அடையாளத்தை உடையவர்கள் என்றும் முஸ்லிம்களுடைய அடையாளமானது இஸ்லாம் மற்றும் அரபு உலகத்துடன் தொடர்புடையது எனத் தெரிவித்தார். மேலும், முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசினாலும் கலாசாரம் மற்றும் மதத்தின் அடிப்படையில் வேறுபட்டவர்கள் என்பதையும் எடுத்துரைத்தார். இதன் பின்னர் முஸ்லிம்கள் தங்களது இஸ்லாமிய தொடர்பினை தென்னியாவிலிருந்து, மத்திய கிழக்கை நோக்கி நகர்த்த முற்பட்டனர். இந்த அடையாள அரசியல் போராட்டம் பிற்காலத்தில் முஸ்லிம்களிடையே மதரீதியான உள்ளக (சூபி–வஹாபி) மோதல்கள் ஏற்பட காரணமாயிற்று எனக் கருதலாம்.
இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் தங்களது அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்காக, முஸ்லிம் பாடசாலைகளுக்கான தனியான கல்வியாண்டு, முஸ்லிம் ஆசிரியர்களுக்கான தனியார் ஆசிரிய பயிற்சி நிலையங்கள், வக்பு சபை, முஸ்லிம் மற்றும் தனியார் சட்டம் என்பன முஸ்லிம்களை மதரீதியான தனியான அடையாளத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் வெற்றிகள் எனக் குறிப்பிடலாம்.
இது மாத்திரமல்லாமல் முஸ்லிம்கள் தங்களை பிறிதொரு இனக்குழுவாக அரசியல் ரீதியாக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக, தமிழ் அரசியல் போராட்டத்திலிருந்து வேறுபட்டு, தென்னிலங்கை சிங்கள அரசியலை ஆதரிக்கும் போக்கினை தென்னிலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் பின்பற்றினர். இவ்விதமான அரசியல் போக்கினை மையமாக வைத்து முஸ்லிம்களுடைய நலன்களை சிங்கள அரசியல்வாதிகளிடம் பெற்றுக் கொண்டனர். தமிழ் அரசியல் போராட்டத்தை வன்முறையைக் கொண்டு இலங்கை அரசு கட்டுப்படுத்த எடுத்த முயற்சியானது, முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள அரசியல் கட்சிகளுடன் இணைவதற்கு காரணமாகியிருக்கலாம்.
1980 களின் பின்னரான விடுதலைப் புலிகளின் போராட்டமானது, 1990 களின் பின்னர், சிங்கள எதிர்ப்பு மாத்திரமல்லாமல் முஸ்லிம் எதிர்ப்பாகவும் பரிணமித்தது. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற முஸ்லிம் படுகொலைகள், தமிழ் பேசும் மக்களின் போராட்டம் தமிழ் போராட்டமாக நோக்குவதற்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர். சிங்கள அரசியல்வாதிகளுடனான முஸ்லிம் அரசியல்வாதிகளின் நெருக்கம் ஒரு காரணமெனத் தெரிவிக்கப்பட்டாலும், முஸ்லிம்கள் தனியானதொரு இனக்குழுமம் என்பதே இவ்விதமான தாக்குதல்களுக்கு முக்கிய காரணியாக இருக்கலாம்.
தென்பகுதி முஸ்லிம் அரசியல் உயர்குழாம், வடக்கு கிழக்கு முஸ்லிம்களை பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க முடியவில்லை மற்றும் முஸ்லிம்களுடைய உரிமைகளை பெற்றுக் கொடுக்கவும் முடியவில்லை என்ற அடிப்படையில், கிழக்கில் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தோற்றுவித்து இலங்கை முஸ்லிம் வரலாற்றில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தினார். இந்த அரசியல் போராட்டம் தக்பீர் முழக்கத்துடனான முஸ்லிம் தனித்துவமான அடையாள அரசியல் போராட்டமாக எழுச்சி பெற்றது. பாராளுமன்ற ஆசனங்களை வைத்துக்கொண்டு பேரம்பேசும் அரசியலினூடாக, (குறிப்பாக கிழக்கு) முஸ்லிம்களுடைய உரிமைகளையும் நலன்களை விருத்தி செய்வதாகக் காணப்பட்டது. கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் கிராமங்கள் தங்களைத் தனியாக அடையாளம் காட்டுவதற்காக அரேபிய கட்டடக்கலை, அரேபிய எழுத்துக்கள் மற்றும் பேரீச்சம் மரங்களை நடுதல் என்பன தமிழர்களிடமிருந்து முஸ்லிம்களை பிரித்துக் காட்டுவதற்கான முயற்சியாகவும் கருதமுடியும். மேலும் இது மத்தியகிழக்கு நாடுகளின் நிதியுதவிகளின் வெளிப்பாடு எனவும் கருதலாம்.
அஷ்ரபுடைய மறைவுக்குப் பின்னர், மு.கா. பிளவுபட்டதுடன் அதன் பேரம்பேசும் பலன் 2001 இலிருந்து 2005 வரை குறைவடைந்தே வந்தது. 2005 இற்குப் பின்னர் முஸ்லிம் அரசியலில் பல தலைமைகள் தோற்றுவிக்கப்பட்டனர். அதேபோல் முஸ்லிம் இயக்கங்களும் பல பிரிவுகளாகப் பிரிந்து வன்முறைகளில் ஈடுபட ஆரம்பித்தன. முஸ்லிம் இயக்கங்களுடைய அரசியலை சற்று நோக்குவோம்.
ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல், முஸ்லிம்கள் தங்கள் அடையாளத்தை அராபிய உலகத்தின் பக்கம் திருப்பியமை பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் தோன்றவும் முஸ்லிம் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படவும் வழிவகுத்தது. தப்லீக் ஜமாஅத் மற்றும் ஜமாஅதே இஸ்லாமி ஆகிய இயக்கங்கள் 1950 களில் முறையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. இவ்விரண்டு இயக்கங்களும் இஸ்லாமிய அரசு என்ற கோட்பாடுகளை இலங்கையில் திணிக்காது காலதேவைக்கு ஏற்றாற்போல் செயற்பட்டன. தப்லீக் ஜமாஅத்தின் வருகை இலங்கை முஸ்லிம் ஆண்களின் உடையில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. ஜுப்பா மற்றும் தொப்பி ஆகியன முஸ்லிம் (தப்லீக்) ஆண்களிடத்தே கவரப்பட்டன. பிற்காலத்தில் பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயம் என்பதையும் வலியுறுத்தியது இந்தத் தப்லீக் இயக்கமாகும். ஜமாஅதே இஸ்லாமி இயக்கம், படித்த நடுத்தர வர்க்கத்தினை கவர்ந்ததொரு இயக்கமாகும்.
1970 களின் பிற்பகுதி மற்றும் 1980 களில் இலங்கை முஸ்லிம் மாணவர்களுக்கு மார்க்க அறிவைப் பெற்றுக்கொள்ள மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இஸ்லாமிய கல்லூரிகளில் புலமைப் பரிசில்கள் கிடைக்கப்பெற்றன. அதேவேளை பலர் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காகவும் செல்ல ஆரம்பித்தனர். இவ்விதமாகச் சென்றவர்கள் அவர்கள் அங்கு கற்ற மற்றும் பார்த்த இஸ்லாமிய பழக்கவழக்கங்கள், இலங்கையில் காணப்படும் இஸ்லாமிய பழக்கவழக்கங்களுக்கு மாற்றமாக இருப்பதை உணர்கிறார்கள் மற்றும் இலங்கைக்கு திரும்ப வந்ததும் அராபிய இஸ்லாத்தை இலங்கையில் பரப்புவதற்கு அல்லது இலங்கையில் இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதற்காக அரேபிய நிறுவனங்களின் நிதியுதவிகளும் கிடைக்கப்பெற்றன. இவ்வாறே தௌஹீத் இயக்கங்களின் செயற்பாடுகள் இலங்கையில் தடம்பதிக்கின்றன.
இவ்விதம் தோற்றம்பெற்ற இயக்கங்களுக்கு, உள்ளூர் சூபித்துவ இயக்கங்கள் (தக்கியா மற்றும் தரீக்காவாதிகள்), தப்லீக் ஜமாஅத் மற்றும் ஜமாஅதே இஸ்லாமி ஆகிய இயக்கங்களினால் எதிர்ப்புக்கள் ஏற்பட்டன. அதிலும் குறிப்பாக சூபித்துவ இயக்கங்களே பெரிதும் எதிர்த்தன. ஆரம்பத்தில் உருவான தௌஹீத் இயக்கங்கள் காலம் செல்லச் செல்ல, தலைமைத்துவப் போட்டி, கொள்கை வேறுபாடு, நிதிப் பங்கீடு மற்றும் புவியியல் (ஊர்) வேறுபாடு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு பல இயக்கங்களாகப் பிரிந்தன. 2000 ஆம் ஆண்டுகளில் இயக்க வேறுபாடுகள் பொது இடங்களில் வன்முறைத் தாக்குதல்களுக்கு இட்டுச் செல்கின்றன. மேலும் இலங்கையில் புதிதாக பள்ளிகள் மற்றும் மத்ரஸாக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்கள் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்பதற்காக எந்தவொரு இயக்கத்தையும் விமர்சிக்கவில்லை. அதேபோல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்குள் காணப்படும் இயக்க அரசியல், இப்புதிய இயக்கங்களை அங்கீகரிக்க மறுப்பதுடன் ஒதுக்கவும் செய்கின்றது. அத்துடன் இலங்கையின் அரசியலைமப்பில் காணப்படும் மதச் சுதந்திரமும் புதிய இயக்கங்கள் உருவாவதை ஊக்குவிப்பதாக காணப்படுகின்றது.
முஸ்லிம்கள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குள்ளே போட்டி போட்டுக் கொண்டு மார்க்க அடையாளங்களில் குறிப்பாக ஆடைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தமை முஸ்லிமல்லாதவர்களிடத்தே பல தப்பெண்ணங்களை வளர்க்க காரணமாயிற்று. இதற்கு 2009 ஆம் ஆண்டின் பின்னரான அரசியல் நிலைமையும் சாதகமாக அமைந்தது. எதுவாக இருந்தாலும், முஸ்லிம்கள் தாம் இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினுள் சிறுபான்மையாக வாழ்கின்றோம் என்பதை மறந்து செயற்பட்டமை முஸ்லிம் எதிர்ப்புக்கு காரணமாயிற்று என்பதை மறுக்க முடியாது.
ஆரம்பகால தௌஹீத் இயக்கங்கள் இளைஞர்களைக் கவர்ந்தாலும் அவை வயதான அனுபவமுள்ளவர்களால் வழிநடாத்தப்பட்டன. இலங்கையில் முஸ்லிம் இளைஞர்களை தீவிரப் போக்குடையதாக்கும் (ரெடிகல்) செயன்முறையை ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (தற்போது சிலோன் தௌஹீத் ஜமாஅத் ஆகவும் பிளவுபட்டுள்ளது) ஆரம்பித்தது எனக் குறிப்பிடலாம். முஸ்லிம் இளைஞர், யுவதிகளை பாதைக்கு அழைத்து போராட்டம் நடத்தியது இவ்வியக்கமே ஆகும். இவ்வியக்கத்தின் வழித்தோன்றலே தேசிய தௌஹீத் ஜமாஅத்தாகும்.
இவ்வளவு காலமாக முஸ்லிம்கள் இஸ்லாமிய அடையாளத்துக்கு கொடுத்துவந்த முக்கியத்துவங்கள் அல்லது அடையாள அரசியலானது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் சாவாலுக்குட்பட்டு வருகின்றதை அவதானிக்கலாம். முஸ்லிம் அரசியல் கட்சிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள், இஸ்லாமியப் பெண்களின் ஆடை, பள்ளிகள், மத்ரஸாக்கள், முஸ்லிம் தனியார் சட்டம், முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் பாரிய அரசியல் ரீதியான நெருக்குதல்களை சந்தித்து வருகின்றன. பெரும்பான்மை சமூகத்தினால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் விடயங்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு தனியாக நின்று முகம்கொடுக்க இயலுமையற்ற நிலையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனால் ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல் கட்சிகளும் முன்வந்துள்ளதை அவதானிக்கலாம். அத்துடன் பயங்கரவாதிகளைக் காட்டிக் கொடுப்பதிலும் முஸ்லிம்கள் முன்னிற்கின்றனர்.
முஸ்லிம் விரோதம் மற்றும் காழ்ப்புணர்வு முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகளாகக் காட்ட முயற்சிக்கின்றது. இதனால் முஸ்லிம்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுதல், அநீதியான கைதுகள் மற்றும் பாரபட்சத்துக்குள்ளாதல் ஆகியவற்றுக்கு எதிராக முஸ்லிம்கள், நடுநிலைப் போக்குள்ள பேரின அரசியல்வாதிகளுடனும் சிவில் சமூக அங்கத்தவர்களுடனும் சேர்ந்து அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் இயக்கங்கள் வன்முறைப் போக்கிற்கு இட்டுச் செல்வதைத் தடுப்பதற்கான அறிவூட்டல்களை மேற்கொள்வதுடன் நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்கக் கற்றுக்கொடுக்கவும் வேண்டும். இதனூடாகவே முஸ்லிம்களுடைய அடையாள அரசியலைப் பாதுகாக்கலாம். அடையாளமில்லாமலாக்கப்பட்டால், அந்த சமூகத்தின் அரசியலும் வீழ்ச்சியடையும் என்பதையும் மனதில் வைத்துச் செயற்பட வேண்டும்.
-Vidivelli
மிக முக்கியமான கட்டுரை. சில விவாதங்கள் இருந்தாலும் முஸ்லிம் மக்கள் வரலாற்றை அறிவியல்பூர்வமாக ஆராயும் ஒருசில கட்டுரைகளில் மொகமட் பஸ்லானின் கட்டுரையும் ஒன்றாகும்.
விவாதங்களில் இரண்டு முக்கிய விடயங்கள் முஸ்லிம் அடையாள அரசியலின் ஆரம்பநிலையில் அரேபிய செல்வாக்க துருக்கிய செல்வாக்கா தென் இந்திய முஸ்லிம்களின் செல்வ்வாக்கா ஆரம்பகாலங்களில் நேரடி அரபு செல்வாக்கா முதன்மையானது என்கிற கேழ்வி எனக்கும் உள்ளது. ஆய்வாளர்கள் பலருக்கு தெளிவில்லாத பகுதி இது. 2. கிழக்கில் 1980 களின் பின்னர் நிகழ்ந்த வன்முறை வகாபி மற்றும் தமிழ் போராட்டக்குழுக்களுக்குமிடையிலான இருதரப்பு வன்முறையா அல்லது ஆசிரியர் சொல்வதுபோல தனித்து தமிழர் தரப்பு வன்முறையா என்பது. 1985ம் ஆண்டு அம்பாறைமாவட்ட தமிழ் பகுதிகள் எரியூட்டபட்டபின் தோழர் அஸ்ரப் வெளியிட்ட “முஸ்லிம் என்று சொல்ல வெட்க்கி தலை குனிகிறேன்” அறிக்கைய ஆசிரியர் வாசிக்க வேண்டும். உயிரைப் பணயம் வைத்து புலிகளுடன் முஸ்லிம்கள் தொடர்பாக நான் தர்கம் செய்த எல்லா தருணங்களிலும் அவர்கள் தந்த வாக்குறுதிகளின் சுருக்கம் “அம்பாறையில் முஸ்லிம்கள் தமிழர்களைத் தாக்கினால் மட்டும் நாம் வடகிழக்கில் முஸ்லிம்களை தாக்க்குவோம். ” என்பதாகவே அமைந்தது. இதுபற்றி நான் தோழர் அஸ்ரப்புக்கும் ஏனைய சில முஸ்லிம் தலைவர்களுக்கும் அறிவித்திருக்கிறேன். இதை குறிப்பிடுவதன் காரணம் மிக சிறந்த ஒரு கட்டுரை இறுதியில் நம்பக தன்மையை இழந்து விடக்கூடாது என்பதனால் மட்டும்தான். ஏனெனில் தமிழ் முஸ்லிம் உறவை உண்மைகளில் இருந்துமட்டுமே கட்டி எழுப்பமுடியும். ஆசிரியருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
நடுநிலைமையாக இருந்து எழுதப்பட்டுள்ள ஆய்வுக்குட்படுத்த வேண்டிய கட்டுரை. அனைவரையும் சிந்திக்க வைக்கக் கூடிய எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது மிகவும் பராரட்டத்தக்கது.
ஆய்வுக்குட்படுத்த வேண்டிய சிறந்த கட்டுரை. அனைவரையும் சிந்திக்கத் தூண்டவல்லது. எளிய நடையில் கனதியான விடயங்களை வரலாறு புரலாது படிப்படியாக நகா்த்தும் விதம் அபாரம். எனது மகனக்கு நல் வாழ்த்துக்கள்.