முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை தொடரட்டும்

0 855

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழு­வொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் சோத­னைக்கு உள்­ளாக்கி விட்­டன.

முஸ்­லிம்கள் தமக்கு எந்த நேரத்தில், என்ன நடக்­குமோ என்ற அச்­சத்தில் நாட்­களைக் கடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

முஸ்­லிம்கள் அனை­வரும் அடிப்­ப­டை­வா­திகள், தீவி­ர­வா­திகள் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றார்கள். தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து 2289 பேர் சந்­தே­கத்தின் பேரில் அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டனர். இவர்களில் 1665 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 211 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

முஸ்­லிம்கள் இந்­நாட்­டுக்குச் சொந்­தக்­கா­ரர்கள் அல்­லர். அவர்கள் அரபு நாட்­டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என இன­வாதக் கருத்­துகள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த மாதம் குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன.

நூற்­றுக்­க­ணக்­கான வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டன. வர்த்­தக நிலை­யங்கள் எரிக்­கப்­பட்­டன. 27 பள்­ளி­வா­சல்கள் தாக்கி உடைக்­கப்­பட்­டன. குர்ஆன் பிர­திகள் நாச­மாக்­கப்­பட்­டன.

முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் கூட தீவி­ர­வா­தத்­துக்கு துணை போனார்கள் என கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்கள். முஸ்லிம் பெண்­களின் கலா­சார ஆடைக்கும் நாட்டில் பலத்த எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது. சில பாட­சா­லைகள், அரச நிறு­வ­னங்­களில் அபா­யா­வுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டது.

ஜனா­தி­ப­தி­யினால் அரச வர்த்­த­மானி மூலம் புர்­கா­வுக்கு தடை விதிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து முஸ்லிம் பெண் டாக்டர் ஒருவர் தன்னால் புர்­காவை தவிர்க்க முடி­யாமல் தனது பத­வி­யையே இரா­ஜி­னாமா செய்தார்.

முஸ்லிம் ஆசி­ரி­யைகள் புர்கா மாத்­தி­ர­மல்ல அபா­யாவே அணிந்து பாட­சா­லைக்கு நுழைய முடி­யாது தடை செய்­தார்கள். கண்டி அந்­தோ­னியார் மகளிர் கல்­லூ­ரி­யிலும், புவக்­பிட்­டிய தமிழ் வித்­தி­யா­ல­யத்­திலும் இவை அரங்­கேற்­றப்­பட்­டன.

இந்த நிலை­யிலே பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சின் செய­லாளர் அர­சாங்க ஊழி­யர்களின் ஆடை தொடர்பில் திடீ­ரென சில தினங்­க­ளுக்கு முன்பு சுற்று நிரு­ப­மொன்­றினை வெளி­யிட்டார். இந்தச் சுற்று நிருபம் முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் அபாயா அணிந்து செல்­வ­தற்குத் தடை­வி­திக்கும் வகையில் அமைந்­தி­ருந்­தது.

அரச பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் சாரி அல்­லது கண்­டியச் சீலை (ஒஸரி) அணிந்து வர வேண்­டு­மெ­னவும் ஆண் உத்­தி­யோ­கத்­தர்கள் காற்­சட்­டையும் மேற்­சட்­டையும் அல்­லது தேசிய உடையும் அணிய வேண்டும் எனவும் அச்­சுற்று நிரு­பத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சுற்று நிருபம் தற்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இவ்­வா­றான கெடு­பி­டிகள் தொடர்ந்த வண்­ண­மே­யுள்­ளன. முஸ்லிம் பெண்கள் அபா­யா­வுடன் தலையை மூடி வெளியில் பய­ணிப்­பதை இன்று அரி­தா­கவே காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. அவர்கள் அச்­சத்தில் வீடு­க­ளுக்குள் அடங்கிப் போயி­ருக்­கி­றார்கள்.

இந்த சூழ்­நி­லையில் நேற்று அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், மேல்­மா­காண ஆளுநர் அசாத்­சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் ஆகிய மூவ­ரையும் பதவி விலக்கக் கோரி அழுத்­தங்கள் வலுப்­பெற்­றன. பெரும்­பான்­மை­யின இன­வாத குழுக்­களும், இன­வாத அர­சி­யல்­வா­தி­களும் களத்தில் இறங்­கி செயற்பட்டார்கள்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் கண்டி தல­தா­மா­ளிகை வளா­கத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் இறங்­கினார். குறிப்­பிட்ட மூவரும் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்கள், அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு உத­வி­ய­வர்கள் என்று குற்­றம்­சாட்­டியே இப்­போ­ராட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

நேற்று பகல் 12 மணி வரை ஞான­சார தேரர் அர­சாங்­கத்­துக்கு காலக்­கெடு விதித்­தி­ருந்தார். மூவரும் பதவி விலக்­கப்­ப­டா­விட்டால் நாடு திரு­விழா காண வேண்­டி­யேற்­படும் என அச்­சு­றுத்­தி­யி­ருந்தார். இதனால் முஸ்­லிம்கள் மேலும் பீதிக்­குள்­ளா­கினர். நேற்று கண்­டியில் ஆயிரக் கணக்­கான பெரும்பான்மை இனத்தவர்கள் ஒன்று கூடி­னார்கள்.

அங்கு அசா­தா­ரண நிலை உரு­வாகும் நிலைமை ஏற்­பட்­டது. இந்­நி­லை­யிலே ஆளு­நர்கள் அசாத்­சா­லியும், ஹிஸ்­புல்­லாஹ்வும் தங்கள் பத­வி­களை நேற்று காலை இரா­ஜி­னாமா செய்­தனர். இத­னை­ய­டுத்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்ட முஸ்லிம் அமைச்­சர்கள் சமூ­கத்தின் பாது­காப்பு மற்றும் நலன் கருதி தங்கள் பத­வி­களையும் இரா­ஜி­னாமா செய்து கொண்­டனர். அமைச்­சர்­க­ளான ரிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ. ஹலீம், கபீர் ஹாசிம், இராஜாங்க அமைச்சர்களான அலிசாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், பைசல்காசிம், எம்.எஸ்.எம். அமீர் அலி மற்றும் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் பதவிகளைத் துறந்தனர்.

இனவாதிகளின் நீண்டகால இலட்சியம் நேற்று நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது. பதவிகள் இல்லாது விடினும் அவர்கள் சமூகத்துக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.