முஸ்லிம்களுக்கு எதிரான பொய் பிரசாரங்கள் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அமைச்சர் மங்கள சமரவீரவைத் தவிர எந்தவொரு ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களும் எமக்கு உதவ முன்வரவில்லை என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டினர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்வதற்கு முன்னர் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஆளும் தரப்பு முக்கியஸ்தர்களை சந்தித்தபோதே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விபரிக்கையில்,
முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் பாரிய சவால்கள் தொடர்பில் அனைவருமாக இணைந்து சுட்டிக்காட்டினோம். அத்துடன் வேண்டுமென்றே பாதுகாப்பு கெடுபிடிகள் முன்னெடுக்கப்படுகின்றமை மற்றும் சிறு குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதிகள் போல் சித்திரிக்கப்படுவது குறித்து பிரதமரை தெளிவுபடுத்தினோம்.
இதன்போது ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாசிம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கதைத்தார். நாம் வெறுமனே இராஜினாமா செய்யக் கூடாது. எமது இராஜினாமா நாட்டுக்கு நல்லதொரு பாடத்தை சொல்ல வேண்டும் என்பதை பிரதமரிடம் தெளிவுபடுத்தினார். அத்துடன் பயங்கரவாதத்தை தடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையை தான் முன்னெடுத்தபோது தடை ஏற்பட்டது. எனினும், விசாரணைகளுக்கான ஆரம்பப் புள்ளியை நான் காட்டியிருந்தும் நடவடிக்கை பொறுப்புடன் மேற்கொள்ளப்படாததையும் சுட்டிக்காட்டினார்.
மு.கா. தலைவர் ஹக்கீம் அநாவசிய கைதுகள் மற்றும் அப்பாவிகள் சிறு சிறு குற்றங்களுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் இருப்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.
தான் நிரபராதி என்பதை அரசியல்வாதிகளே, அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளே ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை என்பதை இதன்போது அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார். மட்டுமன்றி, தன்னை தான் குற்றமற்றவன் என்பதை விபரிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் ஐ.தே.க. அமைச்சர்கள் தருவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, அமைச்சர் மங்கள சமரவீர முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறப்பதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார். அப்படியானால் முதலில் தான் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதாக ஆவேசத்துடன் கூறினார். அமைச்சர் மனோ கணேசனும் இவ்வாறு கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது எமக்கு உதவ முன்வரவில்லை என ஐ.தே.க.வின் முஸ்லிம் உறுப்பினர்கள் இதன்போது குற்றச்சாட்டை முன்வைத்தனர். அமைச்சர் மங்கள சமரவீர மட்டுமே துணிந்து எமக்காகப் பேசினார். அவரைப் போன்ற அமைச்சர்கள் இருந்திருந்தால் இனவாதிகளுக்கு நல்ல பாடத்தை கற்பித்திருக்கலாம். முஸ்லிம்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும், ஆனால் எமது தரப்பினர் அதனை செய்யத் தவறி விட்டனர் என்பதை சுட்டிக்காட்டியதாக இம்ரான் மஹ்ரூப் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
-Vidivelli