மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். நேற்று காலை தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவரது இராஜினாமா கடிதங்களையும் ஜனாதிபதி அங்கீகரித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு இடையில் நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது தற்போதைய முக்கிய பிரச்சினையாக தலைதூக்கியுள்ள மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் பதவி நீக்கப்பட வேண்டும் என்ற பெளத்த தேரர்களின் கோரிக்கை குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக கடந்த 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவர்களை பதவி நீக்க வேண்டும் என்ற கடுமையான அழுத்தம் எழுந்துள்ளது.
ஆகவே ஜனாதிபதி இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணைகள் நடத்தப்பட இவர்களின் அதிகாராம் தடையாக உள்ளது என்பதே மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது. ஆகவே விசாரணைகளுக்கு தடைகள் ஏற்படாத வகையில் செயற்பட இவர்களின் பதவிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ஜனாதிபதிக்கும் ஆளுநர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுநர் பதவியை துறக்கத் தீர்மானம் எடுத்துள்ளனர். அதற்கமைய ஜனாதிபதி செயலகத்தில் தமது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளனர். இதனை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் இவ்விரு ஆளுநர்களின் இராஜினாமா தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
-Vidivelli