முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வாகமுஸ்லிம் அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும், பிரதியமைச்சர் ஒருவரும், மேல் மாகாண மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களும் நேற்று தங்களது பதவிகளை இராஜினாமாச் செய்தனர்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ. ஹலீம், ரிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா மற்றும் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரே தங்களது பதவிகளை இராஜினாமா செய்து கொண்டவர்களாவர்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன், மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவரும் அடிப்படைவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் ஆதரவு வழங்கியுள்ளார்கள், உதவி செய்துள்ளார்கள். அதனால் அவர்களை பதவிகளிலிருந்தும் நீக்கி குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும் என ஜனாதிபதியைக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் கடந்த வெள்ளிக்கிழமை கண்டி தலதாமாளிகை வளாகத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அவர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி உடனடியாகப் பதவி விலக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அத்துரலிய ரதன தேரரின் கோரிக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஆதரித்தனர். அவர்கள் பதவி விலக வேண்டும் என அழுத்தங்கள் பிரயோகித்தனர்.
பதவி விலக்கக் கோரும் சுவரொட்டிகள் நாட்டில் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டன.
இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் நாடெங்கும் எதிர்ப்புகள் மேலோங்கி மக்களின் சமாதானமும், சகவாழ்வும் பாதிக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க அறிக்கையொன்றினையும் வெளியிட்டிருந்தார்.
இதேவேளை அமைச்சர் ரிஷாத் பதியுதீனும், ஆளுநர்கள் அசாத்சாலியும், ஹிஸ்புல்லாஹ்வும் திங்கட்கிழமை (நேற்று) பகல் 12 மணிக்கு முன்பு பதவி நீக்கப்பட வேண்டும் அல்லது அவர்களாகவே பதவி விலகவேண்டும். 12 மணிவரையுமே காலக்கெடு இல்லையேல் நாடு முழுவதும் திருவிழாவை காணவேண்டி நேரிடும் என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்திருந்தார்.
அவர் நேற்றும், நேற்று முன்தினமும் கண்டிக்கு விஜயம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலிய ரதன தேரரைச் சந்தித்து கலந்துரையாடினார். இது நியாயமான போராட்டம். சிறை சென்ற எனக்கு மரணம் ஒரு பொருட்டல்ல. எனது உயிரைக் கொடுத்தேனும் நாட்டை முஸ்லிம் அடிப்படைவாதத்திலிருந்தும் மீட்டெடுப்பேன் எனத் தெரிவித்திருந்தார். இதேவேளை எனது உயிரைக் கொடுத்தேனும் நாட்டைக் காப்பாற்றத் தீர்மானித்து விட்டேன். அடிப்படைவாதிகளான அமைச்சர் ரிஷாத் பதியுதீனும், ஆளுநர்களான அசாத் சாலியும், ஹிஸ்புல்லாஹ்வும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யும் வரை ஓய மாட்டேன் என அத்துரலிய ரதன தேரர் தெரிவித்திருந்தார்.
கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளான மகாநாயக்க தேரர்களும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தனர். அத்துரலிய ரதன தேரரின் கோரிக்கை தொடர்பில் உடன் தீர்வு வழங்குமாறு அவர்கள் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர். நேற்று மதியம் கண்டி நகரை அண்மித்த நகரங்களிலும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. கண்டி, கட்டுகஸ்தோட்டை, அக்குறணை, மடவளை நகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான பெரும்பான்மை யினத்தவர்கள் பல பகுதிகளிலிருந்தும் கண்டிக்கு வருகை தந்திருந்தனர். டயர்கள் எரிக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பொலிஸாரும், இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியும், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வும் இராஜினாமா செய்து விட்டதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவினால் அத்துரலிய ரதன தேரரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.
நேற்றுக் காலை முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸியின் இல்லத்தில் ஒன்று கூடி கலந்துரையாடலொன்றினை நடாத்தியதன் பின்பே தங்களது பதவிகளை இராஜினாமா செய்வதாகத் தீர்மானித்தனர்.
-Vidivelli