ஜம்­இய்­யத்துல் உல­மா தன்னால் சுமக்க முடி­யாத பாரத்தை சுமக்கிறது

யாப்பை திருத்தி புத்திஜீவிகளை உள்வாங்க வேண்டும் என்கிறார் பேரா­சி­ரியர் ஹுஸைன் இஸ்­மாயில்

0 1,095

‘‘ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை தன்னால் சுமக்க முடி­யாத சுமையை தன் தோளில் சுமந்­து­கொண்­டி­ருப்­ப­தாகக் கரு­து­கிறேன். உலமா சபை தானா­கவே இந்த சுமையைத் தன் தலையில் போட்­டுக்­கொண்­டதா? அல்­லது முஸ்லிம் சமூகம் அவர்­க­ளது தலையில் போட்­டதா? அல்­லது முஸ்லிம் சமூ­கப்­பி­ரச்­சி­னைகள் பற்றி பேசு­வ­தற்கு யாருமே இல்­லை­யென்ற யூகத்தில் பொறுப்­பு­களை ஏற்க முன்­வந்­தார்­களா? என்­பது எனக்குத் தெரி­யாது…’’

இப்­படி கவலை தோய்ந்த முகத்­துடன் கருத்துத் தெரி­வித்தார் தென் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் உப வேந்தரும் பிரபல கல்விமானுமாகிய பேரா­சி­ரியர் ஏ.ஜி.ஹுஸைன் இஸ்­மாயில்.

எங்­க­ளது சந்­திப்பில் சம­கால எரியும் பிரச்­சி­னை­களே எமது பேசு­பொ­ரு­ளா­கின.

நேர்காணல்: எஸ்.ஐ.நாகூர் கனி

Q சென்ற வாரம் நடை­பெற்ற ஒரு பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்டில் அமைச்சர் கபீர் ஹாஸிம், முன்னாள் அமைச்­சர்­க­ளான இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார், திரு­மதி பேரியல் அஷ்ரப், சட்­டத்­த­ரணி அலி ஸப்ரி ஆகியோர் கலந்­து­கொண்டு, ‘முஸ்­லிம்கள் தற்­போது தமது நிலை­பற்றி மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும்’ எனக் குறிப்­பிட்­டனர். இது பற்றி உங்கள் கருத்­தினை  சொல்­லுங்­களேன்.

எந்­த­வொரு சமூ­கமும் தான் விட்ட தவ­றுகள் பற்றி பின்­நோக்கிப் பார்க்­காது, இருக்­கின்ற அமைப்­பையே கட்­டிக்­காக்க முன் வந்தால் அந்தச் சமூகம் முன்­னேற மாட்­டாது. அதனை ஒரு தேக்­க­ம­டைந்த சமூகம் என்றே குறிப்­பிட வேண்டும். நம் அல்­குர்ஆன் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கி­றது. ‘எந்­த­வொரு சமூகம் தனது நிலை­பற்றி சந்­தித்து, தன்னை மாற்­றிக்­கொள்­ளா­த­வரை அச்­ச­மூ­கத்­துக்கு அல்லாஹ் உத­வ­மாடடான்; அதா­வது மாற்­றத்தை ஏற்­ப­டுத்த மாட்டான்! ஆகவே சிந்­திப்­ப­தையும் அதன் மூலம் நாம் விட்ட தவ­று­க­ளையும் திருத்­திக்­கொள்ள வேண்டும் என்­பதை யாரும் மறுப்­பார்­க­ளாயின் அன்­ன­வர்கள் முஸ்லிம் சமூ­கத்தை எதிர்­கா­லத்தில் அழிவுப் பாதைக்கு இட்­டுச்­செல்­ப­வர்கள் என நான் நினைக்­கிறேன்…

Q ஈஸ்டர் குண்டு வெடிப்பு அதனைத் தொடர்ந்து வடமேல் மாகா­ணத்தில் சுமார் 30 கிரா­மங்­களில் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­செ­யல்கள் என்­பன தொடர்­பான பின்­னணி – பின்­வி­ளை­வுகள் பற்றி என்ன கூற விரும்­பு­கி­றீர்கள்?

`ஈஸ்டர் குண்­டு­வெ­டிப்பு எதிர்­பா­ராத ஒரு சம்­பவம். அது சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­களின் நிகழ்ச்சி நிரலில் ஒன்று. இருப்­பினும் இலங்கை முஸ்­லிம்­களில் ஒரு சிறு­கு­ழுவே அதனை நிறை­வேற்­றி­யது. இந்த பயங்­க­ர­வா­தி­களை கண்­டு­பி­டித்து தண்­டனை வழங்­கு­வ­தற்கு முஸ்லிம் சமூகம் பெரிதும் ஒத்­து­ழைத்­தது. இல்­லா­விடில் இவர்­களை இவ்­வ­ளவு விரைவில் கைது செய்­யவோ – அழிக்­கவோ முடிந்­தி­ருக்­காது. இதனை பிர­தமர் உட்­பட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், பிவித்­ரு­ஹெல உரு­மய தலை­வ­ரு­மான கம்மன்பில பொலிஸ் பேச்­சாளர் ஆகியோர் உறுதி செய்­துள்­ளனர். அது எமக்கு பெரி­ய­தொரு ஆறுதல். ஆனால், குண்­டு­வெ­டிப்பின் பின் இலங்கை முஸ்­லிம்கள் மீதி­ருந்த நல்­லெண்ணம் (Image) அழிந்து போயிற்று. இதனைத் திரும்­பவும் கட்­டி­யெ­ழுப்­பு­வது தற்­போது நம்­மீ­துள்ள முக்­கிய பொறுப்­பாகும்.

குண்­டு­வெ­டிப்பில் ஈடு­பட்ட இளை­ஞர்­களை முஸ்­லிம்கள் அல்ல எனப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­வதும், அவர்­க­ளது ஜனா­ஸாக்­களை இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்­வதைத் தடை செய்­ததும் இழந்த நல்­லெண்­ணத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு போது­மா­னவை அல்ல. முஸ்லிம் சமூகம் தனது நடத்தைப் போக்­கு­களை மாற்­றிக்­கொள்­வதன் மூலம் ஐந்து அல்­லது பத்து வரு­டங்­களில் இது சாத்­தி­ய­மா­கலாம். இதற்கு எம்­மிடம் சிந்­தனைத் தெளிவும், விட்­டுக்­கொ­டுக்கும் மனப்­பான்­மையும் வ­ர­வேண்டும்.

வடமேல் மாகா­ணத்தில் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளுக்கு ஈஸ்டர் குண்­டு­வெ­டிப்புச் சம்­பவம் ஒரு உட­ன­டிக்­கா­ரணம் மட்­டு­மே­யாகும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளுக்கு பெரும்­பான்மை சமூ­கத்­திற்குள் நீண்­ட­கா­ல­மாக வளர்ந்­து­வரும் வெறுப்­பு­ணர்வே முக்­கிய கார­ண­மாகும். இந்த வெறுப்­பு­ணர்வு பெரும்­பான்மை பெளத்­தர்­க­ளிடம் வளர்ந்து வரு­கி­றது. இந்தச் சூழ்­நி­லையை தனக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி ‘தீவி­ர­வாத குழுக்கள்’ வன்­செ­யல்­களில் ஈடு­பட்­டன. ஆனால், பெரும்­பான்மைச் சமூ­கத்­திடம் முஸ்­லிம்கள் மீது அண்­மையில் வெறுப்­பு­ணர்வு வளர்ந்து வரு­கி­றது என்­பதை முஸ்­லிம்கள் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

Q அண்­மைக்­கா­லங்­களில் முஸ்­லிம்கள் மீது வெறுப்­பு­ணர்வு வளர்­வ­தற்­கான கார­ணங்கள் எவை?

`இதற்கு ஒரு சில முக்­கிய கார­ணங்­களைக் குறிப்­பிட விரும்­பு­கிறேன்.

(அ) அண்­மைக்­கா­லத்தில் இலங்கை முஸ்­லிம்­களின் உடைக் கலா­சா­ரத்தில் ஏற்­பட்ட மாற்றம். பெண்கள் கறுப்பு ஹிஜாப்,  நிகாப், புர்கா அணி­வது. ஆண்கள் ஜுப்பா அணி­வது இவை சவூதி கலாசாரம் என்­பதும் கடந்த 1000 வரு­டங்­க­ளாக முஸ்­லிம்கள் இந்த உடை­களை அணி­ய­வில்லை என்­பதால், அரபு நாடு­களின் ஊடு­ருவல், இலங்கை நாட்­டுக்குள் புகுந்­து­விட்­டதோ என்ற ஓர் அச்சம் இதனால் அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது. அது மட்­டு­மன்றி இந்த உடை­களை அணிந்தோர் பயங்­க­ர­வாத செயல்கள், களவு, கொள்ளை, மனிதப் படு­கொ­லைகள் புரிதல் என்­ப­ன­வற்றில் ஈடு­ப­டு­வதை அவர்கள் ஊட­கங்­களில் பார்ப்­பதால் இந்த அச்ச உணர்வு மேலும் வலுப்­பெற்று வரு­கி­றது.

(ஆ) முஸ்லிம் சமூ­கத்தில் ‘ஒரு சிறு குழு­வினர்’ உணவுப் பொருட்­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் வழங்­கி­யமை. இது அரசு செயல்­ப­டுத்த வேண்­டிய ஒரு நடை­முறை. இலங்­கையில் முஸ்லிம் கலா­சார அமைச்சு அல்­லது முஸ்லிம் அறி­ஞர்­க­ளது ஆலோ­ச­னைப்­படி இலங்கை தரக்­கட்­டுப்­பாட்டு நிர்­ணய சபை இதனை விநி­யோ­கித்­தி­ருந்தால் பெரும்­பான்மை மக்­க­ளிடம் இதற்­கான எதிர்ப்பு வளர்ந்­தி­ருக்­காது. இதில் வியா­பார நோக்­கமும் இருந்­த­தாக பல விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

எது எப்­படி இருப்­பினும், அர­சாங்­கத்­திற்கு செல்­ல­வேண்­டிய வருவாய் தனிப்­பட்ட ஒரு சில­ரிடம் குவி­வதை எந்த நல்ல குடி­ம­கனும் சகிக்­க­மாட்டான். நிலைமை பூதா­க­ர­மாக மாறி நாட்டில் இனக்­க­ல­வ­ரங்கள் வரும் சூழ்­நி­லை­யிலே இந்தக் குழு ஹலால் சான்­றிதழ் வழங்­கு­வதை நிறுத்­திக்­கொண்­டது.

சென்ற பல நூற்­றாண்­டு­க­ளாக இலங்கை முஸ்­லிம்கள் ஹலா­லான உண­வு­க­ளையே புசித்து வந்­தனர். இதற்குப் பெரும்­பான்மை பெளத்த மக்­க­ளிடம் எந்த எதிர்ப்பும் காணப்­ப­ட­வில்லை. அரச அதி­கா­ரத்தை உள்­வாங்கி வரு­மானம் பெறும் நோக்­குடன் ஒரு சிலர் செயற்­பட்­ட­தாலே பெரும்­பான்மை மக்கள் அதனை எதிர்த்­தனர். பெரும்­பான்மை மக்கள் நாங்கள் ஹலால் உண­வுகள் உண்­ப­தற்கு எந்தத் தடையும் போட­வில்லை…. என்­பதை முஸ்­லிம்கள் தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

தற்­போது ஹலால் வழங்கும் நடை­மு­றையை வேறு வடி­வங்­களில் முஸ்­லிம்­களில் சிலர் மேற்­கொள்­வ­தாக நாம் அறி­கிறோம். சமூ­கத்தின் எதிர்­கால நன்மை கருதி, பிரச்­சினை வளர்­வ­தற்­குமுன் அதனைக் கைவிட்டு விடு­மாறு அன்­ன­வர்­களைக் கேட்­டுக்­கொள்­கிறேன். அரச நிறு­வனம் ஒன்றின் மூலம் இந்த சான்­றி­தழ்­களை விநி­யோ­கிப்­பது புத்­தி­சா­து­ரி­ய­மான ஒரு செய­லா­கவே அமையும்.

(இ) இறைச்­சிக்­காக முஸ்­லிம்கள் மாடு­களை அறுப்­பது, இது இந்து நாடான இந்­தி­யா­விலும் வன்­செ­யல்­க­ளுக்குக் கார­ண­மாக உள்­ளது. பெளத்த சமயம் உயிர்­களை (பறவை – ஊர்­வன) கொல்­வதைத் தடை செய்­கி­றது. இந்து மதத்தில் மாடு கட­வு­களின் வடி­வ­மா­கவும், கற்­ப­க­த­ரு­வா­கவும் கரு­தப்­ப­டு­கி­றது. வட மாகா­ணத்தில் மாடு­களை அறுப்­பதை நீதி­மன்றம் தடை­செய்­தி­ருந்­தது. ஆகவே, முஸ்­லிம்கள் ஏனைய மதக்­கோட்­பா­டு­களை மதிக்­க­வேண்டும்.

(ஈ) முஸ்லிம் மக்கள் நாட்டின் சட்­டங்­களை மதிப்­ப­தில்லை என்ற அபிப்­பி­ராயம், பெரும்­பான்­மை­யி­ன­ரிடம் எம்­மீது வெறுப்­பு­ணர்வு வளர்­வ­தற்கு மற்­றொரு முக்­கிய காரணம். எல்லா சமூ­கங்­க­ளிலும் சட்­டத்தை மதிக்­கா­த­வர்கள் உள்­ளனர். ஆனால், அத்­த­கையோர் நீதி­மன்­றங்­களால் தண்­டிக்­கப்­ப­டு­கின்­றனர். ஆனால், ஒரு சில முஸ்­லிம்­களின் செயற்­பா­டு­களை அவ­தா­னிக்­கும்­போது, முஸ்­லிம்கள் தாம் அதி­க­மாக சட்­டத்தை மதி­யாதோர் என்ற உணர்வைத் தோற்­று­வித்­துள்­ளது.

ஓர் உதா­ர­ணத்தை மட்டும் இங்கு கூறிட விரும்­பு­கிறேன். நம் நாட்டின் பாது­காப்பு நிலை மோச­மாக இருப்­பதால் மக்கள் பொது இடங்­களில் கூடு­வதை தவிர்த்துக் கொள்­ளு­மாறு அர­சாங்கம் வேண்­டிக்­கொண்­டது. இதனைத் தொடர்ந்து பெளத்த விகா­ரைகள், ஹிந்து கோயில்கள், கிறிஸ்­தவ தேவா­லங்­களில் பல சமய நிகழ்­வுகள் இரத்துச் செய்­யப்­பட்­டன. முஸ்லிம் சமய, கலா­சார அமைச்­சர்­கூட ஊடகங்கள் மூலம் நாட்டின் பாது­காப்பு நிலை­மையை பொறுத்து பள்­ளி­வா­சல்­களில் அதி­க­மானோர் கூடு­வதை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு வேண்­டினார்.

ஒரு சிலர் மட்­டுமே இதற்கு செவி­சாய்த்­தனர். ஜம்­இய்­யதுல் உல­மாவும் மெளனம் சாதித்­தது. வழ­மைபோல் ஜும்ஆ, தராவீஹ் தொழு­கைகள் கூட்­டாகப் பல பள்­ளி­வா­சல்­களில் நடத்­தப்­பட்­டன. இதன்­மூலம் முஸ்­லிம்கள் சட்­டத்தை மதிப்­ப­தில்லை என்­பதைக் காட்­டி­னார்கள். மறு­புறம் பயங்­க­ர­வா­தி­களால் ஏனைய சம­யங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு மட்­டும்தான் அச்­சு­றுத்தல். முஸ்­லிம்­க­ளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற பிழை­யான எண்­ணத்தை மற்­றைய சமூ­கத்­தி­ன­ரி­டையே இவர்கள் வளர்த்­தார்கள். இது பார­தூ­ர­மான ஒரு செயற்­பாடு என்­பதை இன்னும் இலங்கை முஸ்­லிம்கள் உணர்ந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

சென்ற மே 18, 19 ஆகிய இரு தினங்­களில் (வெசாக் தினங்கள்) பெளத்த விகா­ரை­க­ளி­லி­ருந்து ஒலி­ப­ரப்­பான சுமார் ஒன்­பது சமய உரை­களை நான் வானொ­லியில் கேட்டேன். அந்த உரை­களின் பின் பொது­மக்கள் சில வினாக்­க­ளையும் எழுப்­பினர். அவர்­களில் ஒருவர் இப்­படி ஒரு கேள்­வியைக் கேட்டார்.

‘நாங்கள் இன்று எமது வெசாக் நிகழ்­வு­களை விகா­ரை­க­ளுக்குள் மட்­டுப்­ப­டுத்தி யுள்ளோம். மற்­ற­வர்கள் சுதந்­தி­ர­மாக வழ­மைபோல் சமய நிகழ்ச்­சி­களை நடத்­து­கின்­றனர். பெளத்­தர்­க­ளா­கிய நாம் இப்­போது அடி­மை­க­ளா­கி­விட்­டோமா?’ என வின­வினார். இவ்­வி­னா­வுக்கு பெளத்த குரு மிக புத்­தி­சா­லித்­த­ன­மா­கவும், நிதா­ன­மா­கவும் பதில் கூறினார். இது அவ­ரது அறிவு முதிர்ச்­சியைக் காட்­டு­கி­றது.

Q இந்த வெறுப்­பு­ணர்­வு­களை நீக்­கு­வ­தற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

(1) இந்தக் கேள்­விக்கு முதலில் ஆடைக்­க­லா­சா­ரத்தை எடுத்­துக்­கொள்வோம். தான் விரும்பும் உடையை அணி­வது அவ­ர­வர்க்­கு­ரிய உரிமை. உடை­களைத் தெரி­வு­செய்­யும்­போது சமூக சூழ்­நி­லை­களைப் பற்றிச் சிந்­திப்­பது நமது கடமை. எந்தச் சமூ­கத்தை சேர்ந்­த­வர்­க­ளாக  இருந்­தாலும்.

முகத்தை மூடு­வது, மக்­களின் பாது­காப்­புக்கு பெரி­ய­தொரு அச்­சு­றுத்தல் என்­பதை இன்று எல்­லோரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இருக்கும் காலம் மட்­டு­மல்ல, அது நீக்­கப்­பட்ட பின்­னரும் முகம் மூடு­வதை தடை செய்­வது அவ­சியம்.

“முகத்தை மூடு­வது முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய உரிமை” எனக் கூறு­வது சிறு­பிள்­ளைத்­த­ன­மா­னது. நாங்கள் இந்த உரி­மையை இழந்து விட்டோம் எனக் கூறு­வது, முஸ்லிம் மக்­களின் உணர்­வு­களைத் தூண்டி, அவர்­களைப் பிழை­யான வழியில் திசை திருப்­பு­வ­தற்கு எடுக்­கின்ற ஒரு முயற்­சி­யாகும் என்பேன்.

ஜம்­இய்­யதுல் உலமா ‘உடைக்­க­லா­சாரம்’ பற்றி சிங்­க­ளத்தில் வெளி­யிட்­டுள்ள ஒரு கைநூலில் பின்­வ­ரு­மாறு எழு­தப்­பட்­டுள்­ளது. அதில் “முஸ்லிம் பெண்­களின் உடையைப் பொறுத்­த­வரை பெரும்­பா­லான மார்க்க அறி­ஞர்­களின் அபிப்­பி­ராயம், பெண்கள் முகம், மணிக்­கட்­டுக்கு வெளியே உள்ள பகு­தி­களை தவிர, ஏனைய பகு­தி­களை கட்­டாயம் மறைக்க வேண்டும் என்­ப­தாகும். ஆனால் ஒரு சில மார்க்க அறி­ஞர்கள் முகத்­தையும் மறைக்க வேண்டும் என அபிப்­பி­ரா­யப்­ப­டு­கின்­றனர். இங்கு நாம் பெரும்­பான்மை மார்க்க அறி­ஞர்­களின் கருத்­துக்­களை ஏற்­றுக்­கொண்டு, நாட்டில் ஏற்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத சூழ்­நி­லை­க­ளையும் கருத்­திற்­கொண்டு, முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்­பதை தவிர்த்துக் கொள்­வ­துதான் புத்­தி­சா­லித்­த­ன­மா­னது” என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

“தற்­போது ‘காதை திறப்­பது’ பற்­றியும் மற்­றொரு சர்ச்­சையைக் கிளப்பி விட்­டி­ருக்­கி­றார்கள். முஸ்லிம் பெண்கள் காதை மூட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நானும் இருக்­கிறேன். இதில் பாது­காப்­புக்கு எந்­த­வித அச்­சு­றுத்­தலும் இல்லை. ஆனால் காதை திறப்­ப­தையும் கறுப்பு நிற ஹபாயா அணி­வ­தையும் ஒன்­றாக இணைத்து சிலர் பிரச்­சி­னையை சிக்­க­லாக்­கி­யுள்­ளனர். சல்­வாரி உடை உடுத்து, தலைக்கு ‘ஸ்காப்’ கட்­டு­வதன் மூலமும் காதை மறைக்­கலாம். மணிக்­கட்டு வரை சட்டை அணிந்து, சாரி­யுடன் தலையில் ‘ஸ்காப்’ கட்­டு­வதன் மூலமூம் காதை மறைக்­கலாம். இது போன்று மாற்று உடைகள் பல உள்­ளன.

“காதை மூட கட்­டாயம் கறுப்பு ஹபாயா அணிய வேண்டும் என்­ப­தில்லை. ஹபா­யாக்கள் பர்தா என்ற தோர­ணையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டாலும், அது ஒரு பெரிய வியா­பா­ர­மாக இப்­போது மாறி­விட்­டது. ஒரு ஹபாயா இப்­போது 3000 ரூபா முதல் 25000 ரூபா வரை விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது. ஆகவே காதை மூடு­வ­தற்­கான அனு­ம­தியை கேட்­ப­துடன் நாம் நின்று விட­வேண்டும். அது­வன்றி ஹிஜாப் – ஹபாயா விற்­பனை செய்யும் வர்த்­த­கர்­களை பாது­காக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நான் மற்­றொரு விட­யத்­தையும் குறிப்­பிட விரும்­பு­கிறேன். சில சந்­தர்ப்­பங்­களில் அத்­தி­யா­வ­சிய தேவை கார­ண­மாக, காதைத் திறக்­க­வேண்­டிய சந்­தர்ப்பம் ஏற்­ப­டலாம். அத்­த­கைய வேளை­களில் நாம் விட்டுக் கொடுத்து பிடி­வாதம் பிடிக்­காமல் நடந்து கொள்­ள­வேண்டும். உட­லியல் (Physiology) வரை­வி­லக்­க­ணத்­தின்­படி முகம் என்­பதில், காது உட்­பட, நான்கு புலன்கள் அடங்­கு­கின்­றன. காதில் சில துல்­லி­ய­மான கரு­வி­களை வைப்­பதன் மூலம் வெளி­யி­லி­ருந்து தக­வல்­களைப் பெற முடியும். அத்­துடன்

பரீட்சை மண்­ட­பங்­க­ளிலும் இவ்­வா­றான சில விட­யங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே பொதுப்­ப­ரீட்சை எழு­துவோர் காது உட்­பட, முகத்தை கட்­டாயம் திறக்க வேண்டும் எனப் பரீட்சை விதிகள் குறிப்­பி­டு­கின்­றன. எனவே, பரீட்சை மண்­ட­பத்தில் நுழைந்­த­வுடன் காதை திறந்து விடு­வதும், பரீட்சை முடிந்த பின் காதை மூடிக் கொள்­ளு­மாறும் பெண் பரீட்­சார்த்­தி­களைக் கேட்­டுக்­கொள்­கிறேன்.

எதிர்­வரும் ஆகஸ்டில் க.பொ.த (உயர்­தரம்) பரீட்­சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாண­வியர் இவ்­வாறு நடந்து கொள்­வது, பரீட்சை மண்­ட­பத்தில் அவர்­க­ளுக்கு ஏற்­படும் மன உளைச்­ச­லி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு உதவும். அத்­துடன் பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­க­ளுக்கு ஏற்­படும் வெறுப்­பையும் குறைக்­க­மு­டியும். சென்ற க.பொ.த. (சாதா­ரணம்) பரீட்­சையின் போது ஒரு சில முஸ்லிம் மாண­விகள் ‘முகத்தை திறக்க முடி­யாது’ என அடம்­பி­டித்­ததால், அவர்­க­ளது விடைத்­தாள்கள் திருத்­தப்­ப­ட­வில்லை எனவும் அறி­கிறோம். மேலும், முது­கு­வரை தொங்கும் பெரிய தலைக் கவ­சங்­களைத் தவிர்த்து, தலைக்கு ‘ஸ்காப்’ கட்டிக் கொள்­வதால், பரீட்சை மண்­ட­பங்­களில் ஏற்­படும் சில அசௌ­க­ரி­யங்­களை தவிர்க்க முடியும்.

(2)  அடுத்து நாம் இறைச்­சிக்­காக அல்­லது குர்­பா­னிக்­காக மாடு அறுப்­பதை எடுத்துக் கொள்வோம். மாட்­டி­றைச்சி சாப்­பி­டு­வது இஸ்­லாத்தில் பர்ளோ – சுன்­னத்தோ அல்ல. அல்லாஹ் நமக்கு அனு­ம­தித்­துள்ளான் என்­ப­தற்­காக, அதை கட்­டாயம் செய்ய வேண்டும் என்ற நியாயம் இல்லை. இலங்கை ஒரு பௌத்த நாடு, ஹிந்­துக்கள் அதிகம் வாழும் நாடு. ஆகவே, மாடு அறுப்­பதைத் தவிர்த்து, ஆடு­களை அறுப்­ப­தற்கு நாம் முன்­வ­ர­வேண்டும். “ஆடு விலை கூடி­யது; மாட்டை ஏழுபேர் சேர்ந்து குர்பான் கொடுக்­க­லாமே” என்று சிலர் வாதி­டு­கின்­றனர்.

ஜம்­இய்­யதுல் உலமா மாடு அறுப்­பது பற்றி ஒரு கைநூல் வெளி­யிட்­டுள்­ளது. அது நாம் ஏன் மாட்­டி­றைச்சி சாப்­பி­டு­கிறோம் என்­பதை நியா­யப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. சமூக – வர்த்­தக – பொரு­ளா­தார ரீதியில் நல்ல நியா­யங்­களை அந்நூல் முன்­வைக்­கி­றது.

ஆனால், அறி­வு­ரீ­தி­யாக நாங்கள் செய்­வதை சரி காண்­பது இங்கு முக்­கி­ய­மல்ல. ஏனைய சம­யத்­த­வர்­களின் உணர்­வு­களைப் புரிந்­து­கொள்­வதும், அவர்­க­ளது மதக் கோட்­பா­டு­க­ளுக்கு மதிப்­ப­ளிப்­பதும், அதற்­கேற்ப எம்மை மாற்­றிக்­கொள்­வதும் தான் முக்­கியம். தாம் செய்­வதை சரி கண்டு நியா­யப்­ப­டுத்தும் மனப்­போக்கை முஸ்­லிம்கள் மாற்­றிக்­கொள்ள வேண்டும். அவ்­வா­றில்­லா­விடில் மேலும் பயங்­க­ர­மான பின்­வி­ளை­வு­களை நம் சமூகம் சந்­திக்க வேண்­டி­வரும்.

“இது ஒரு பௌத்த நாடு. அர­சாங்­கத்­திற்கு மாடு அறுப்­பதைத் தடை­செய்ய முடியும். ஆனால் பெரும்­பான்மை மக்கள் முஸ்­லிம்­க­ளி­டையே விட்­டுக்­கொ­டுக்கும் மன நிலையை இன்னும் எதிர்­பார்க்­கின்­றனர். ஆகவே ஜம்­­இய்யதுல் உலமா ஹஜ் பெரு­நா­ளைக்கு முன் இவ்­வி­ட­யத்தில் முன்­கூட்­டியே செயற்­ப­டு­வது நல்­லது.

Q இப்­போது பெரும்­பான்மை மக்­களின் மனங்­களில் சிதைந்து போயுள்ள முஸ்­லிம்கள் பற்­றிய நல்­லெண்­ணத்தை ஜம்­இய்­யதுல் உலமா சபையால் கட்­டி­யெ­ழுப்ப முடி­யுமா?

“ஜம்­இய்­யதுல் உலமா சபை, தன்னால் சுமக்க முடி­யாத ஒரு சுமையை தன் தோளில் சுமந்து கொண்­டி­ருப்­ப­தாக’’ நான் கரு­து­கிறேன். ஜம்­இய்­யதுல் உலமா தானா­கவே இந்த சுமையை தன் தலையில் போட்­டுக்­கொண்­டதா? அல்­லது முஸ்லிம் சமூகம் அவர்­க­ளது தலையில் போட்­டதா?

முஸ்லிம் சமூகப் பிரச்­சி­னைகள் பற்றி பேசு­வ­தற்கு யாரு­மே­யில்லை என்ற யூகத்தில் பொறுப்­புக்­களை ஏற்க முன்­வந்­தார்­களா? என்­பது எனக்குத் தெரி­யாது.

தற்­போது நாட்டில் தோன்­றி­யுள்ள பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள், துறைசார் நிபு­ணர்கள், பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரி­யர்கள், ஜம்­இய்­யதுல் உலமா சபைக்கு உதவ முன்­வ­ர­வேண்டும். ஜம்­இய்­யதுல் உலமா சபை இத்­த­கை­யோரின் ஆலோ­ச­னை­களை உள்­வாங்க வேண்டும். முஸ்லிம் அறி­வு­ஜீ­வி­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிப்­ப­தற்­காக தற்­போ­தைய ஜம்­இய்­யதுல் உலமா சபையின் யாப்பில் சில திருத்­தங்­களைச் செய்­ய­வேண்­டிய தேவை உள்­ளது”

“நான் சுனாமி அனர்த்­தத்தின் பின் இந்­தோ­னே­சி­யாவின் பண்டா ஆச்சே பிராந்­தி­யத்­திற்குப் போயி­ருந்தேன். அந்தப் பிராந்­தி­யத்தின் உலமா சபையின் உப தலை­வ­ராக சம­கொலா பல்­க­லைக்­க­ழ­கத்தின் துணை­வேந்தர் (பேரா­சி­ரியர்) இருந்தார். அவர் அப்­போது முஸ்­லிம்­க­ளது  விவா­கங்­களை அரச காரி­யா­ல­யங்­களில் பதிவு செய்­வது தொடர்­பாக உலமா சபைக்கும் அர­சுக்கும் இடையே ஏற்­பட்­டுள்ள கருத்து முரண்­பா­டுகள் பற்றி என்­னிடம் பேசினார். இலங்கை ஒரு சிறிய நாடு. முஸ்லிம் சிறு­பான்­மை­யாக வாழும்­நாடு. இருப்­பினும் இந்த பிரச்­சி­னையை நாங்கள் சுமு­க­மாகத் தீர்த்­துள்ளோம் என அவ­ரிடம் விளக்­கினேன். அதன் பின் அர­சாங்­கத்­திற்கும் (முஸ்லிம் நாடு) உல­மாக்­க­ளுக்கும் இடையில் நில­விய முரண்­பாடு தவிர்க்­கப்­பட்­டது. ஆகவே இங்­கை­யிலும் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு ஜம்­இய்­யதுல் உலமா சபைக்கு புத்­தி­ஜீ­வி­களின் பங்­க­ளிப்பு அவ­சி­ய­மா­னது.

Q இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை தீர­வேண்­டு­மாயின் இலங்கை முஸ்­லிம்­களின் தாய்­மொழி சிங்­க­ள­மாக மாற­வேண்­டு­மென பேரு­வளை நகர சபைத் தலைவர் குறிப்­பி­டு­கிறார். இது குறித்து உங்­க­ளது கருத்­து­களை அறிய விரும்­பு­கின்றேன்.

“இலங்­கை­யி­லுள்ள சகல முஸ்­லிம்­களும் சிங்­கள மொழி கற்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். 1951  ஆம் ஆண்டு அப்போதைய நகர சபைத் தலைவர் மர்ஹும் எம்.ஏ. பாக்கீர் மாக்கார் ‘‘முஸ்லிம் பாடசாலைகளில் போதனா மொழி சிங்களமாக இருக்கவேண்டும்’’ என்றவொரு பிரேரணையைக் கொண்டு வந்தார். இது தீர்க்கதரிசனமான ஒரு முன்மொழிவு. அப்போது முஸ்லிம்கள் இதை அலட்சியம் செய்தார்கள்.

முஸ்லிம்களின் போதனா மொழியாக – சிங்கள மொழியாக மாற்றுவது காலம் கடந்த ஒரு முயற்சி. இது இப்போது சாத்தியமில்லை. ஏனெனில் தற்போது 750 க்கு மேற்பட்ட தமிழ்மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு நாடு முழுவதும் தமிழ்மொழிக்கு எதிரான போராட்டம் ஏற்பட்டபோதும் முஸ்லிம்கள் தமது தமிழ்மொழி மூலப் பாடசாலைகளைப் பாதுகாத்துக் கொண்டனர். பெரும்பான்மை சிங்கள சமூகம் இதனை எதிர்க்காமல் தொடரவிட்டது. இப்போதைக்கு போதனாமொழி மாற்றம் அவசியமற்றது. ஆனால் முஸ்லிம் பாடசாலைகளில் சிங்கள மொழி பிரிவுகள் ஆரம்பிக்கலாம்.

“பாடசாலைக்கு வெளியிலும் சிங்கள மொழியை வாலிபர், முதியோர் கற்பதற்கான ஒழுங்குகளைச் செய்யமுடியும். மத்ரஸாக்களில் கூட பௌத்த குருமார்களைக் கொண்டு சிங்கள மொழி கற்பிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. இது ஒரு நல்ல முயற்சி.

“ஆனால் நாம் ஒரு விடயத்தை மறந்து விடக்கூடாது. வடக்கு –கிழக்கில் வாழும் முஸ்லிம்கள், நாம் சிங்களவர்களுடன் நெருங்கி வாழ்வது போலவே தமிழ் மக்களுடன் நல்லுறவுகளை வளர்க்க வேண்டியுள்ளது. தமிழ்மொழிதான் இவர்களை இணைக்கும் பாலம்.  தந்தை செல்வநாயகம் போன்றோர் தமிழர் என்ற சொல்லை பிரயோகியாது ‘தமிழ் பேசும் மக்கள்’ என்றே உபயோகித்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் பேசும் மக்களின் சார்பில் மர்ஹும் எம்.இஸட்.எம்.மசூர் மௌலானாவை ‘செனெட்டர்’ஆக நியமித்தது.

“விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் காரணமாக இந்த உறவு முறிவடைந்தது. அத்துடன் அண்மையில் முஸ்லிம் மக்களிடையே அறிமுகமான கலாசார ஊடுருவல்களும் முஸ்லிம்களை தமிழ் மக்களிடமிருந்து அன்னியப்படுத்தியது. இதனால் இரு சமூகங்களும் தனித்தனி நிகழ்ச்சி நிரல்களின் கீழ் செயற்படுகின்றன. இது வரவேற்கத்தக்க விடயமல்ல. தொடர்ந்தும் வடக்கு –கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழி போதனா மொழியாக  அமைவதுடன் முறிந்துபோன உறவுகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.