முஸ்லிம்கள் எவ்வித கொள்கை முரண்பாடுகளுமின்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டலுக்கமைய ஒரே தினத்தில் நோன்புப் பெருநாளை நாடுமுழுவதும் கொண்டாட வேண்டுமென அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கு நாட்டில் ஒரு சில பிரிவினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன. எனவே இவ்வாறான சூழ்நிலைகளில் முஸ்லிம்கள் கொள்கை வேறுபாடுகளை மறந்து தூரநோக்குடன் செயற்பட வேண்டும். முஸ்லிம்கள் இனவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோன்புப் பெருநாள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“கடந்த நோன்புப் பெருநாள் தினங்கள் நாட்டில் ஒரே தினத்தில் கொண்டாடப்படவில்லை. ஒருசாரார் கொள்கை ரீதியில் பிரிந்து செயற்பட்டார்கள். இந்நிலைமை இவ்வருடம் தவிர்க்கப்பட வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நோன்புப் பெருநாள் தினத்தை எவ்வாறு கொண்டாட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. அந்த அறிவித்தல்கள் பேணப்படவேண்டும்.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து பிரகடனப்படுத்தும் தினத்திலேயே முஸ்லிம்கள் அனைவரும் பெருநாளைக் கொண்டாடவேண்டும். வரலாற்றில் என்றுமில்லாத ஒரு காலகட்டத்திலேயே நாம் பெருநாளைக் கொண்டாடவேண்டியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 250 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். பலர் அங்கவீனர்களாகியுள்ளார்கள். அந்த மக்களது மனநிலை இன்னும் சீராகவில்லை. குருணாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம் களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்கள் காரணமாக முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அப்பாவி முஸ்லிம்கள், சிறு சிறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதனால் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் இன்னல்களுக்குள்ளாகியுள்ளன.
எனவே பெருநாளை ஆடம்பரமில்லாமல் அமைதியாகக் கொண்டாடுங்கள். பெருநாள் தினத்தில் நாட்டின் அமைதிக்காகவும் முஸ்லிம்களின் கண்ணியத்துக்காகவும் துஆ பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.
முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பிலும் அரச ஊழியர்களின் ஆடை தொடர்பிலும் எமக்கு பாதகமான தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. நோன்பு பெருநாள் தினத்திலும் முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாபைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். இல்லையேல் வீணான சிரமங்களுக்குள்ளாக வேண்டியேற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
-Vidivelli