ஆட்சி மாற்ற நடவடிக்கையானது ஒருபுறம் நாட்டுக்கு பெரும் நெருக்கடியையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், மறுபுறம் சம்பந்தப்பட்ட தரப்பினர் தமது குறைகளை மறைப்பதற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்துவதும் மிக ஆபத்தானதாகும். இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனிக்கத்தக்கவையாகும்.
நாட்டின் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக அழித்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என்றும் சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போதும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கும் போதும் ரணில் விக்ரமசிங்க ஏன் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்வரவில்லை எனவும் அநுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தின் போலி காவலாளி எனத் தெரிவித்த அநுரகுமார, மூன்றரை வருட மோசமான வரலாற்றை மூடி மறைக்கும் முயற்சிகளில் ரணில் ஈடுபட்டதாகவும் சுட்டிக்காட்டினார். இதேவேளை, ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் காணப்படும் வழக்கு தொடர்பிலும் அவர் முக்கிய விபரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
” இந்த மாத நடுப்பகுதியில் இருந்து பெப்ரவரி வரையிலான 3 மாத காலப்பகுதிக்குள் அதிகளவிலான வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன. பசிலுக்கு எதிராக இரண்டு வழக்குகள் வரவுள்ளன. 2 கோடி ரூபா சமுர்த்தி நிதியை மோசடி செய்த வழக்கு, மள்வானை வீடு தொடர்பிலான வழக்கு, கோத்தபாயவிற்கு எதிராக இரண்டு வழக்குகள் உள்ளன. ஒன்று அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 1140 கோடி ரூபா தொடர்பான அவன்ட் கார்ட் வழக்கு. தாய், தந்தையரின் நினைவிடங்களை அமைப்பதற்காக மக்களின் பணத்தை பயன்படுத்திய வழக்கும் உள்ளது. அந்த வழக்கு விசேட நீதிமன்றத்தில் உள்ளது. நாமலுக்கு எதிராகவும் இரண்டு வழக்குகள் உள்ளன. ஒன்று கவர்ஸ் எனப்படும் நிறுவனத்தில் எவ்வாறு 3 கோடி ரூபா முதலீடு செய்தார் என்பது தொடர்பான வழக்கு. மற்றையது மற்றுமொரு நிறுவனத்தில் ஒன்றரைக் கோடியை முதலீடு செய்தது எவ்வாறு என்பது தொடர்பிலான வழக்கு. அந்த இரண்டு வழக்குகளும் டிசம்பர் மாத ஆரம்பத்தில் வரவுள்ளன. இந் நிலையில்தான் இந்த ஆட்சி மாற்ற சதி இடம்பெற்றுள்ளது. இதன் பின்னணி கள்வர்களை காப்பாற்றுவதற்கா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்றுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கடந்த மூன்று வருட காலங்களில் இடம்பெற்ற பல ஊழல்களுக்குத் துணை போயுள்ளதாகவும் அவர் பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவின் கருத்துகளின்படி மைத்திரி, மஹிந்த மற்றும் ரணில் ஆகிய மூவரும் தத்தமது குற்றங் குறைகளை மறைப்பதற்கான போராட்டத்திலேயே ஈடுபட்டு வருகிறார்களா எனும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ராஜபக்ச குடும்பத்தினர் தமது வழக்குகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருவதையும் பல குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் எழுந்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டியில் நடந்த கூட்டத்தில் கூறியதைப் போன்று, இன்று திகன சம்பவ சூத்திரதாரிகளும் பிணையில் வெளிவந்துள்ளனர்.
இவ்வாறான நிலை தொடர்வது மிகவும் ஆபத்தானதாகும். ஆட்சி அதிகாரத்துடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் தமது தனிப்பட்ட நலன்களுக்காகவும் தாம் சம்பந்தப்பட்ட குற்றங்களை மறைப்பதற்காகவும் அரசியலமைப்புடனும் சட்டத்துடனும் விளையாடுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும். இதற்கு முற்றுப் புள்ளி வைக்காவிடின் நாடு மேலும் மேலும் பின்னோக்கிச் செல்வதை ஒருபோதும் தடுக்க முடியாது போய்விடும்.
-Vidivelli