சிரியாவில் எதிர்த்தரப்பின் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் மாகாணத்தில் பஷர் அல்-அசாத்தின் அரசாங்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக வெள்ளைத் தலைக்கவச சிவில் பாதுகாப்பு முகவகரகம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அரசாங்கப் படையினரும் ஈரான் ஆதரவுடனான ஆயுததாரிகளும் கான் ஷயக்குன், கப்ர் நப்ஸல், அல்-ஹொபைத் மற்றும் லதாமினாஹ் உள்ளிட்ட இட்லிப் மற்றும் ஹாமா மாகாணங்களின் கிராமியப் பகுதிகளை இலக்கு வைத்ததாக அம் முகவகரகம் தெரிவித்தது.
இத் தாக்குதலில் வைத்தியசாலையொன்றும் சுகாதாரப் பராமரிப்பு மத்திய நிலையமொன்றும் சேதமடைந்துள்ளன.
எவ்வாறெனினும், வான் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சூனியப் பிரதேசத்தில் இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
துருக்கியும் ரஷ்யாவும் கடந்த செப்டம்பர் மாதம் இட்லிப் பகுதியினை சூனியப் பிரதேசமாக மாற்றுவதற்கு இணக்கம் கண்டன. இதன் மூலம் தாக்குதல்கள் அங்கு தடை செய்யப்படும்.
எவ்வாறெனினும், சிரிய அரசாங்கம் சூனியப் பிரதேசத்தில் அடிக்கடி தாக்குதல் நடத்துவதன் மூலம் யுத்த நிறுத்த விதிமுறைகளை மீறி வருகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறையினை அசாத் அரசாங்கம் மேற்கொண்டதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஏற்பட்ட அழிவினை ஏற்படுத்தும் முரண்பாடுகளில் இருந்து தற்போது சிரியா மீண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli