கண்டி-தெல்தோட்டையில் தாக்குதலுக்கு திட்டமிட்ட அமித்
கைதினால் தடுக்கப்பட்டது வன்முறை; பொலிஸ் உயர் அதிகாரி தகவல்
வடமேல் மாகாண முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து அரங்கேற்றப்பட்ட வன்முறைகளை அடுத்து மஹசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை சிறப்பு பொலிஸ்குழு கைது செய்திருந்தது. அவர் கைது செய்யப்படாது இருந்திருப்பின் வடமேல் மாகாணத்தில் பதிவான வன்முறைகளை ஒத்த வன்முறைகள் கண்டி பகுதியிலும் இடம்பெற்றிருக்குமென முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் வெளிப்படும் சாட்சியங்கள் ஊடாகத் தெளிவாவதாக விசாரணைகளுக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு கண்டி பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளைத் தூண்டி வன்முறைக்கான அடித்தளத்தை அமித் வீரசிங்க, தெல்தோட்டை உட்பட கண்டியின் பல பகுதிகளுக்கு சென்று விகாரைகள் ஊடாக கூட்டங்களைக் கூட்டி முன்னெடுத்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பொலிஸ் அதிகாரி கூறினார். ஏற்கனவே திகன பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க, 7 மாதங்களின் பின்னர் கடும் நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உயிருக்கு முஸ்லிம்களால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவரது வீட்டுக்கு முன்பாக பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் முழு கண்டியிலும் பல இடங்களுக்கு சென்று, கூட்டங்களைக் கூட்டி முஸ்லிம் வெறுப்பு பிரசாரங்களை அமித் வீரசிங்க முன்னெடுத்துள்ளமை தொடர்பில் சாட்சியங்கள் பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொய்ஸாவின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிசார் அமித் வீரசிங்கவைக் கைது செய்ததன் ஊடாக கண்டி பகுதியில் வன்முறைகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக குறித்த உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
-Vidivelli