கடந்த வருடம் கண்டி – திகன பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களினால் பாதிக்கப்பட்டு இதுவரை காலம் நஷ்டஈடு வழங்கப்படாதுள்ள 174 சொத்துகளுக்கு இன்னும் சில தினங்களில் 17 கோடி ரூபா நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
புனர்வாழ்வு அமைச்சுக்கும் பொறுப்பான அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரில் நஷ்டயீடு வழங்கும் பணிகள் புனர்வாழ்வு அதிகார சபை (இழப்பீடு பணியகம்) யினால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நஷ்டயீட்டினை வழங்குவதற்கான நிதியினை திறைசேரி ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பில் புனர்வாழ்வு அதிகார சபை (இழப்பீடு பணியகம்) யின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.எம். பதூர்தீன் கருத்துத் தெரிவிக்கையில்;
‘கண்டி – திகன பகுதிகளில் கடந்த வருடம் இடம்பெற்ற வன்செயல்களினால் 546 சொத்துக்கள் சேதங்களுக்குள்ளாக்கப்பட்டன. இவற்றில் பல சொத்துக்கள் எரியூட்டப்பட்டன. 546 சொத்துக்களில் 372 சொத்துக்களுக்கு நஷ்டயீடாக ஏற்கனவே 19 கோடி 48 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு விட்டது இவ்வாறு நஷ்டயீடு வழங்கப்பட்ட சொத்துக்கள் ஒவ்வொன்றும் தலா ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவான நஷ்டஈட்டுக்கு உரியவையாகும்.
546 சொத்துகளில் 174 சொத்துகளே இதுவரை காலம் நஷ்டயீடு வழங்கப்படாதிருந்தன. இந்தச் சொத்துகளின் சேதம் ஒவ்வொன்றும் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்டதென்பதால் இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. தற்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கிணங்க 174 சொத்துகளுக்கும் நஷ்டஈடாக 17 கோடி 5 இலட்சத்து 67 ஆயிரம் ரூபா சில தினங்களில் வழங்கப்பட வேண்டியுள்ளது.
வன்செயலினால் பாதிக்கப்பட்ட கெங்கல்ல ஜும்ஆ பள்ளிவாசலுக்கான நஷ்டயீடும் பிரதமரின் பணிப்பின் பேரில் விரைவில் வழங்கப்படவுள்ளது.
மேலும் 16 சொத்துகளின் சேத விபரங்களை மதிப்பீடு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துகளின் சேத விபரங்களை மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பீடு செய்வதற்கு இயலாமல் இருப்பதனையடுத்தே குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சொத்துகளின் களஞ்சியசாலைகளில் இருந்த இருப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட வேண்டியுள்ளது. குழுவின் சிபாரிசுகளுக்கமைய சேதங்கள் மதிப்பீடு பூர்த்தி செய்யப்படும்’ என்றார்.
-Vidivelli