ஒரே தினத்தில் நோன்பு பெருநாள் கொண்டாட வேண்டும்
பாதிக்கப்பட்டோரை கருத்திற்கொண்டு வீண் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு உலமா சபை வேண்டுகோள்
நாட்டில் ஒரே தினத்தில் நோன்புப் பெருநாளை கொண்டாட வேண்டுமென அகில் இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டோரை கருத்திற்கொண்டு வீண் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக்குழு செயலாளர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல் அறிக்கையை இங்கு முழுமையாக தருகிறோம்:
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்குகின்றது.
- கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து பிரகடனப்படுத்தும் தினத்திலேயே சகல முஸ்லிம்களும் பெருநாளைக் கொண்டாடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
- நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு பெருநாள் தொழுகையை மைதானங்கள், திடல்கள் முதலான பொது இடங்களில் நடத்துவதைத் தவிர்க்குமாறும் மஸ்ஜித்களில் மாத்திரம் தொழுகைகளை நடத்துமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
- பெருநாள் தொழுகைக்காக வருகை தரும்போது வாகனங்களில் வருவதை முற்று முழுதாகத் தவிர்ந்துகொள்ளல் வேண்டும். தவிர்க்க முடியாத இக்கட்டான கட்டத்தில் வாகனங்களில் வருகை தருபவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி வாகனங்களில் வருகை தராமல் பலர் இணைந்து ஒரு வாகனத்தில் வருதல் வேண்டும்.
- பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தத்தமது பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கூடாக மஸ்ஜித்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளவும்.
- பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைக் கவனத்திற் கொண்டு எதிர்வரும் பெருநாளை அடக்கமாக அனுஷ்டிக்குமாறும் பெருநாளுக்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களை சகோதர மதத்தவர்களுடனும், ஏழைகளுடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் வீண்விரயத்தையும் ஆடம்பரத்தையும் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிக் கரம் நீட்டுமாறும் வேண்டுகின்றோம்.
- பெருநாளுக்காக பொருட்கள் மற்றும் துணிமணிகள் வாங்குவதற்காக பெண்கள் செல்வதை முடிந்தளவு தவிர்த்து ஆண்களே அவற்றை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli