அரசியல்வாதிகள், அடிப்படைவாதிகள் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பு
விசாரணைகள் மூலம் அம்பலம் என்கிறார் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார
பயங்கரவாதத் தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு நாட்டின் அமைதியை சீர்குலைக்க சில அரசியல்வாதிகளும் அடிப்படைவாதிகளும் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்பில் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் பயங்கரவாதத்துக்கு முகங்கொடுக்கத் தேவையான சட்ட திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கின்றது என அரச நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று ஒருமாத காலம் நிறைவடைந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது நாட்டின் அன்றாட செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. பாடசாலைகள் வழமைபோன்று இடம்பெற்று வருகின்றன.
என்றாலும், ஒருசில அரசியல்வாதிகளும் அடிப்படைவாதிகளும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். பதுரலியவில் பாடசாலை ஒன்றில் கைக்குண்டுகளை மறைத்துவைத்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணையில் அதனை யார் செய்தார் என்பது தற்போது வெளிப்பட்டிருக்கின்றது. அத்துடன் குருநாகல் மற்றும் மினுவாங்கொடை பிரதேசங்களில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற சம்பவமானது, மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே இதனை மேற்கொண்டுள்ளனர் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் சந்தர்ப்பவாத அரசியல் செய்யவேண்டாம் என்று இவர்களை கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசாங்கத்தை வீழ்த்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.
மேலும் பயங்கரவாதத்துக்கு முகம்கொடுக்கத் தேவையான சட்ட திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். குறிப்பாக மத்ரஸாக்கள் மற்றும் அரபுக்கல்லூரிகளை கல்வி அமைச்சின் கீழ்கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதேபோன்று பெயர்ப்பலகைகள் மூன்று மொழிகளில் மாத்திரமே இடம்பெறவேண்டும் என்றும் அரபு மொழியில் அமைந்திருக்கும் பெயர்பலகைகளை அகற்றுமாறும் தெரிவித்திருக்கின்றோம்.
அத்துடன் ஆடை தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். குறிப்பாக ஆள் ஒருவரின் அடையாளம் தெரியாதவகையில் முகத்தை மறைத்து அணியும் புர்கா போன்ற ஆடைகளுக்கு தடை விதித்திருக்கின்றோம். இதுதொடர்பான ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முஸ்லிம் மதத்தலைவர்களுடன் கலந்துரையாடியே எடுத்திருக்கின்றோம். முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த பயங்கரவாதத்துக்கு எதிராகவே இருக்கின்றனர். அவர்களையும் ஏனைய நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையிலே இவ்வாறான தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம் என்றார்.
-Vidivelli