பெரும்பான்மை சமூகத்தில் வாழ்தல் முஸ்லிமல்லாதவருடனான உறவாடல்

0 1,913

எம்.என்.இக்ராம் M.Ed (Reading)

இஸ்லாத்தில் முஸ்­லி­மல்­லா­தா­ரு­ட­னான உறவு குறித்த பார்வை தொடர்பில் பிழை­யான ஒரு விம்பம் தோற்­று­விக்­கப்­பட்­டி­ருக்­கின்ற ஒரு சூழலை நாம் இன்று எதிர் கொண்­டுள்ளோம். இது மிகவும் ஆபத்தான ஒரு நிலை­யாகும். இஸ்லாம் அதனை ஏற்றுக் கொள்­ளாத அனை­வ­ரையும் அத­னது எதி­ரி­யாக நோக்­கு­கின்­றது என்ற கருத்து முஸ்­லி­மல்­லா­தா­ரிடம் திட்­ட­மிட்டு பரப்­பப்­பட்டு வரு­கின்­றது. இது இஸ்­லாத்தைப் பற்­றிய பிழை­யான கண்­ணோட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­ப­தற்கு அப்பால் முஸ்­லிம்­களின் வாழ்­விற்­கான அச்­சு­றுத்­த­லா­கவும் இன்று அமையப் பெற்­றுள்­ளது. எனவே, இது குறித்த தெளிவை நாம் சரி­யாக பெற்று, அதனை பொது­மைப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும்.

முஸ்லிம் – முஸ்­லி­மல்­லா­தா­ரு­ட­னான உறவு தொடர்பில் அல்-­குர்­ஆனின் கருத்தை நாம் நோக்கும் போது ஸூரா அல் – மும்­த­ஹி­னாவின் 8, 9 ஆவது வச­னங்கள் முஸ்லிம் – முஸ்­லி­மல்­லாதார் உறவு தொடர்பில் அடிப்­ப­டை­யான மூல­மாக கொள்­ளத்­தக்க வச­னங்கள் என கலா­நிதி யூசுப்அல் -கர்­ளாவி  தனது “இஸ்­லா­மிய சமூ­கத்தில் வாழும் முஸ்­லி­மல்­லாதார்” என்ற நூலின் ஆரம்­பத்­தி­லேயே தனி­யான ஒரு பகு­தி­யாக குறிப்­பிட்டு விளக்­கு­கி­றார்கள்.

“அல்லாஹ்; மார்க்க விவ­கா­ரத்தில் உங்­க­ளுடன் போரா­டாத, உங்­க­ளது வசிப்­பி­டங்­க­ளி­லி­ருந்து உங்­களை வெளி­யேற்­றாத -முஸ்­லி­மல்­லா­தா­ருடன்- நீங்கள் நீதி­யாக நடப்­ப­தையும் அவர்­க­ளுடன் நல்­லு­றவு பாராட்­டு­வ­தையும் உங்­க­ளுக்கு தடுத்­து­வி­ட­வில்லை. அல்லாஹ் நீதி­யா­ளர்­களை விரும்­பு­கிறான். அல்லாஹ் மார்க்க விவ­கா­ரத்தில் உங்­க­ளுடன் போரா­டு­ப­வர்­க­ளு­டனும் உங்­களை உங்­க­ளது வசிப்­பி­டங்­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றி­ய­வர்­க­ளு­டனும், உங்­களை வெளி­யேற்ற உத­வி­ய­வர்­க­ளு­டனும் நீங்கள் நெருக்­க­மாக சிநேகம் பாராட்­டு­வதை விட்­டுத்தான் உங்­களை தடுக்­கிறான். யார் அத்­த­கை­யோ­ருடன் நெருக்­க­மாக சிநேகம் பாராட்­டு­கி­றார்­களோ அவர்­கள்தான் அநி­யா­யக்­கா­ரர்கள்.” (அல்-­மும்­த­ஹினா:8, 9)

இந்த வசனம் குறிப்­பி­டு­கின்ற ‘அல்-­பிர்ரு’ (நல்­லு­ற­வு­பா­ராட்டல்), ‘அல்-கிஸ்த்’ (நீதி­யாக நடத்தல்) என்­பன பொது­வா­கவே மனி­தர்­க­ளு­ட­னான உறவில் ஒரு முஸ்லிம் பேண­வேண்­டிய இரு அடிப்­ப­டை­க­ளாகும். இதில் முஸ்லிம், முஸ்­லி­மல்­லாதார் என்ற வேறு­பாடு பார்க்­கப்­ப­டக்­கூ­டாது. இங்கு அவர்கள் எதிர்ப்பு மனப்­பாங்­குடன் செயற்­ப­டு­கி­றார்­களா இல்­லையா என்ற விட­யம்தான் முக்­கி­ய­மா­னது. ஒருவர் இஸ்­லாத்தை பின்­பற்­றா­தவர் என்­பது மாத்­திரம் அவர் எதிர்க்­கப்­ப­டு­வ­தற்கும் அவ­ருடன் போரா­டு­வ­தற்­கு­மு­ரிய கார­ணி­யாக அமை­ய­மாட்­டாது. இந்த வச­னத்­துடன் “மார்க்­கத்தில் நிர்ப்­பந்­த­மில்லை, நேர்­வழி வழி­கேட்­டி­லி­ருந்து தெளி­வாக பிரித்து விளங்கும் நிலை­யி­லுள்­ளது..”-பகரா: -256- என்ற வச­னத்­தையும் இணைத்து; ‘முஸ்­லி­மல்­லா­தா­ருடன் உற­வா­டு­வ­தற்­கான அடிப்­ப­டைகள்’ என்ற நூலில் விளக்கும் உஸ்தாத் ஸாலிம் பஹன்­ஸாவி; “முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை அடிப்­ப­டை­யி­லேயே இவ்­வி­வ­கா­ரத்தில் அவர்­க­ளுக்குப் பிரச்­சினை கிடை­யாது. இஸ்லாம் முஸ்­லி­மல்­ல­தா­ரையும் அவர்­க­ளது உரி­மை­க­ளையும் ஸூரா பக­ராவின் இவ்­வ­ச­னத்­தி­னூ­டாக அங்­கீ­க­ரித்­து­வி­டு­கி­றது. இஸ்­லாத்தில் ஒருவர் நுழை­வ­தாயின் திருப்­தி­யோடும் தெளி­வோ­டுமே இணைய வேண்டும். அங்கு நிர்ப்­பந்தம் கிடை­யாது. அத்­தோடு இஸ்லாம் முன்­னைய வேதங்­க­ளையும் மார்க்­கங்­க­ளையும் அங்­கீ­க­ரிக்­கி­றது. ஏனைய சமூ­கங்­க­ளுடன் கூட அது நல்­லு­ற­வையே அடிப்­ப­டையில் வலி­யு­றுத்­து­கி­றது” என விளக்­கு­கிறார்.

ஸூரா மும்­த­ஹி­னாவின் 8,9 வது வச­னங்­களை விளக்­க­வரும் ஷஹீத் செய்யித் குதுப், “இஸ்­லாத்தின் சர்­வ­தேச உற­வு­களின் அடிப்­ப­டை­யாக சமா­தா­னமே இருக்கும். அடிப்­ப­டையில் ஒரு முஸ்­லி­முக்கும் ஏனைய மனி­தர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான நிரந்­தர உற­வாக சமா­தா­னமே இருக்கும். அவனின் மீதான ஏதா­வதோர் அத்­து­மீ­றலே தவிர வேறு எதுவும் அதனை பாதிக்­க­மாட்­டாது. அத்­து­மீறல் என்­பது அவ­னுக்­கெ­தி­ரான போரா­கவோ, உடன்­ப­டிக்கை மீற­லா­கவோ, சிந்­தனை சுதந்­தி­ரத்தை தடுப்­ப­தா­கவோ இருக்­கலாம். அப்­ப­டி­யேதும் நடக்­கா­த­வரை சமா­தா­னமும் அன்பும் நீதியும் நல்­லு­ற­வுமே அடிப்­ப­டை­யா­னதாய் இருக்கும்” என விளக்­கு­கிறார்.

முஸ்­லி­மல்­லா­தா­ரு­ட­னான தொடர்­பின்­போது ஒரு­வ­கை­யான ஒதுங்­குதல் மனோ­நி­லை­யுடன், தவிர்க்­க­மு­டி­யாத நிர்ப்­பந்த சூழலில் வைக்கும் உறவு போன்ற ஒரு தொடர்பை பேணுதல் இஸ்­லாத்தின் பார்­வையில் எத்­துனை பிழை­யா­னது என்ற கருத்தை நாம் இங்கு புரிந்­து­கொள்­கிறோம். இந்த குர்ஆன் வச­னத்தில் வரும் ‘அல்-­பிர்ரு’ என்ற சொல்­லுக்கு இமாம் கராபி குறிப்­பிடும் விளக்கம் இதனை இன்னும் தெளி­வாக எமக்கு விளக்­கு­கி­றது.  “அவர்­க­ளி­லுள்ள பல­வீ­னர்­க­ளுடன் சாந்­த­மாக நடத்தல், ஏழை­க­ளது தேவை­களை நிறை­வேற்றல், பசித்­தோ­ருக்கு உண­வ­ளித்தல், ஆடை­யற்­றோ­ருக்கு ஆடை­ய­ளித்தல், அவர்­க­ளுடன் நளி­ன­மாக நடக்கும் வகையில் மென்­மை­யா­கவும் இரக்­க­மா­கவும் உரை­யாடல், இது அவர்­க­ளுக்கு பயந்தோ, அவர்­க­ளி­ட­மி­ருந்து ஏதா­வது அடைந்­து­கொள்ளும் நோக்­கு­டனோ இடம்­பெ­றக்­கூ­டாது. அவர்­க­ளுக்கு நேர்­வழி கிடைக்­க­வேண்டும், அவர்கள் சிறப்­பாக வாழ­வேண்டும் என பிரார்த்­திக்­க­வேண்டும். அவர்­க­ளது உலக, மார்க்க விவ­கா­ரங்கள் என அனைத்­திலும் உதவி ஒத்­தா­சை­யுடன் நடத்தல், அவர்­க­ளி­ட­மி­ருந்து ஏதா­வது தொந்­த­ரவு ஏற்­பட்­ட­போ­திலும் அவர்­க­ளது குறை­களை மறைத்தல்,  அவர்­க­ளது சொத்­துக்கள், குடும்பம், மானம் என அவர்­க­ளது அனைத்து உரி­மைகள், நலன்­க­ளையும் பாது­காத்தல், அவர்­க­ளு­க­ளுக்கு அநீதி இடம்­பெ­று­மாயின் அதற்­கெ­தி­ராக அவர்­க­ளுக்கு உத­வுதல் அவர்­க­ளது அனைத்து உரி­மை­க­ளையும் பெற்றுக் கொடுத்தல்.” (அல்-­பு­ரூக்-­ஷி­ஹா­புத்தீன் அல்-­க­ராபி)

இங்கு பரந்த அடிப்­ப­டை­யி­லான மனித சகோ­த­ரத்­துவம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டி­யதன் அவ­சியம்  வலி­யு­றுத்­தப்­ப­டு­வதைக் காணலாம். நல்­லு­றவு என்­ப­துடன் நீதி என்­பதும் முஸ்­லி­மல்­லா­தா­ரு­ட­னான உறவில் விரி­வாக விளங்கிக் கொள்­ளப்­பட வேண்­டிய ஒரு விட­ய­மாகும். இதனை அல்-­குர்­ஆனே ஸூரா மாஇதா: 8 இல் விளக்­கு­கி­றது  “உங்­க­ளுக்கு ஒரு சமூ­கத்­துடன் இருக்கும் குரோ­தமும் எதிர்ப்பும் நீங்கள் நீதி­யாக நடக்­காது தவ­றி­விட உங்­களை தூண்­டி­வி­டா­தி­ருக்க வேண்டும். நீங்கள் நீதி­யாக நட­வுங்கள் அது தக்­வா­வுக்கு மிகவும் நெருக்­க­மா­னது…” இது மனித சமூ­கத்தில் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான அழைப்பு, இது நாம் வெறுக்­கின்­ற­வர்­க­ளுடன் கூட நீதி­யாக நடக்­கு­மாறு வேண்­டப்­ப­டு­கின்ற கட்­டளை என விளக்கும் உஸ்தாத் பஹ்­மி­ஹு­வைதி அவர்கள் (முவா­தினூன் லா திம்­மிய்யூன்) இவ் வச­னத்­துக்­கான ஷெய்க் றஷீத் றிழாவின் விளக்­கத்தை நீதி என்­பது எவ்­வ­கையில் அமைய வேண்டும் என்­பதை விளக்­கு­வ­தற்­காக கொண்­டு­வ­ரு­கிறார்.  “ஒரு முஃமி­னுக்கு நீதியை விடு­வ­தற்கோ, அதனை அநீ­தி­யையும் பக்­கச்­சார்­பையும் பார்க்­கிலும் மேலாக கரு­தாது இருக்­கவோ எந்த நியா­யமும் கிடை­யாது. அவன் நீதியை மனோ இச்­சைக்கும் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கும் அப்பால் நோக்க வேண்டும். எத்­த­கைய கார­ண­மா­யினும் ஒரு சாரா­ரு­ட­னான சிநேகம், எதிர்ப்பு என்­ப­வற்றை தாண்டி அதனை நோக்க வேண்டும். யாரும் ஒரு காபி­ரிற்­காக சாட்சி சொல்­வதில் நீதியாய் நடக்கத் தேவை­யில்லை அல்­லது ஒரு முஃமி­னுக்கு எதி­ராக காபிரின் உரி­மை­யொன்றை பெற்றுக் கொடுப்­பதில் நீதியாய்  இருக்கத் தேவை­யில்லை என தவ­றாக எண்­ணி­வி­டா­தி­ருக்க வேண்டும் எனத்தான் அல்-­குர்ஆன் இங்கு இதனை விளக்­கு­கி­றது”

ஒரு யூத­னு­டைய விட­யத்தில் அநீதி இடம்­பெறப் போவதை தடுப்­ப­தற்­காக நபி­ய­வர்­களை அல்லாஹ் ஸூரா நிஸாவின் 105-–113 வரை­யான வச­னங்­களை இறக்கி கண்­டித்­த­மையும் நீதி என்ற பெறு­மானம் குறிப்­பாக முஸ்­லி­மல்­லாதார் விட­யத்தில் எவ்­வ­ளவு தூரம் பேணப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­கி­றது. என­வேதான் நபி­ய­வர்­க­ளது காலம் முதல் அண்­மைய காலங்கள் வரை இதில் முஸ்­லிம்கள் மிகக் கவ­ன­மாக நடந்­தி­ருக்­கி­றார்கள். இதனை விரி­வாக வர­லாற்று நிகழ்­வு­க­ளுடன் உஸ்தாத் பஹ்மி ஹுவைதி  தனது ‘முவா­தினூன் லா திம்­மிய்யூன்’ என்ற நூலில் விளக்­கு­கிறார்.

முஸ்­லி­மல்­லாதார் என்று வரு­கின்ற போது அஹ்லுல் கிதாப்­களை இஸ்லாம் விஷே­ட­மாக நோக்­கு­கி­றது. அஹ்லுல் கிதாப்கள் என்போர் அல்­லாஹ்­வி­ட­மி­ருந்து இறங்­கிய வேதத்தை பின்­பற்­றுவோர். அந்த வேதம் இப்­போது திரி­பு­ப­டுத்­தப்­பட்டு மாற்­றப்­பட்­டி­ருக்­கலாம். (அய்ருல் முஸ்­லிமீன் பீ முஜ்­த­மஇல் இஸ்­லாமி). இவர்­க­ளுடன் குடும்ப உறவை வைத்­துக்­கொள்ள இஸ்லாம் அனு­ம­திக்­கி­றது. அதா­வது அவர்­க­ளது பெண்­களை திரு­மணம் செய்ய அனு­ம­திக்­கி­றது. அத்­தோடு அவர்கள் அறுத்­த­வற்றை சாப்­பிட அனு­ம­திக்­கி­றது (மாஇதா: 05).

இஸ்லாம் அன்­பிலும் இரக்­கத்­திலும் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டு­மெனக் கருதும் குடும்ப வாழ்வை அவர்­க­ளுடன் ஒரு முஸ்லிம் பகிர்ந்­து­கொள்ள அனு­ம­திக்­கி­றது. தனது சந்­த­தியின் தாயாக அப்­ப­டி­யான ஒரு­வரை ஏற்­கி­றது என்றால் முஸ்­லி­மல்­லா­தா­ரு­ட­னான தொடர்பு பற்­றிய இஸ்­லாத்தின் பார்வை எத்­துணை விசா­ல­மா­னது. அஹ்லுல் கிதாப்­க­ளுடன் மார்க்க விட­யத்தில் வாதி­டு­வ­தா­யினும் சிறந்த முறையில் (அன்­கபூத்-46) அது இடம் பெற வேண்­டு­மென குர்ஆன் கரு­து­கி­றது.

இவை எல்­லா­வற்­றுக்கும் மேலாக வாழ்வு, பிர­பஞ்சம், உயிர்கள், பொருட்கள், மனிதன் பற்­றிய இஸ்­லாத்தின் சம­நி­லை­யான பார்வை இந்த உலகில் ஒரு முஸ்­லி­முக்கும் இவை அனைத்­துக்கும் இடையே அழ­கிய தொடர்­பொன்றை ஏற்­ப­டுத்­து­கி­றது. இதனை சுருக்­க­மாக குறிப்­பிட்டால் இஸ்­லாத்தின் பார்வை இவற்­றுக்­கி­டையே சுமு­க­மான உறவை ஏற்­ப­டுத்­து­கின்­றது, இவற்­றுக்­கி­டையே அழ­கான பிணைப்பை உண்­டு­பண்­ணுகி­றது. இவற்­றுக்­கி­டையே மோதலை உண்டு பண்­ண­வில்லை. சுமூ­க­மான உறவு, சமா­தானம் என்­ப­னவே இஸ்­லாத்தின் அடிப்­படை உறவு.

இந்த வகையில் மனி­தர்கள் அனை­வரும் ஒரு ஆன்­மா­வி­லி­ருந்து தோன்­றி­ய­வர்கள் (நிஸா-01). அவர்­க­ளுக்­கி­டையே அடிப்­ப­டையில் எவ்­வித வேறு­பாடும் கிடை­யாது. அவர்கள் அனை­வரும் மனி­தர்கள் என்ற வகையில் கண்­ணி­ய­மா­ன­வர்கள் (இஸ்ரா-70, தீன்-04). இந்த கண்­ணி­யமே அவனை பூமியில் அல்­லாஹ்வின் பிர­தி­நி­தி­யாக மாற்­றி­யது.

இந்த கண்­ணியம் அவன் மனிதன் என்­ப­தற்­காக கிடைத்­தது. இது அவன் முஸ்லிம், யூதன், கிறிஸ்­தவன் என மத அடிப்­ப­டையில் கிடைத்­த­தல்ல. இந்த கருத்தை இஸ்­லாத்தின் போத­னை­க­ளுக்கும் ஐ.நாவுக்­கு­மி­டையே மனித உரி­மைகள் என்ற ஷெய்க் முஹம்மத் அல்-­கஸ்­ஸா­லியின் நூலில் அவர் விரி­வாக விளக்­கு­கிறார். அடுத்து அவர்கள் அனை­வரும் நபி­ய­வர்கள் கூறுவது போல் (படைப்­புகள் அனைத்தும் அல்­லாஹ்வின் குடும்­பத்­தினர்) அல்­லாஹ்வின் குடும்­பத்­தினர் என்­ற­வ­கையில் அனைத்து வேறு­பா­டு­க­ளுக்­கு­மப்பால் ஒன்­றாக சந்­திக்க முடி­யு­மா­ன­வர்கள். நபி­ய­வர்கள் மதீனா சாச­னத்தில் மதீ­னா­வி­லி­ருந்த யூதர்கள் உட்­பட அனைத்து தரப்­பையும் ஒரு உம்­மத்­தாகக் குறிப்­பிட்­டது போன்று ஒரு பிர­தே­சத்தில் குறிப்­பிட்ட ஒரு உடன்­பாட்டின் கீழ் ஒன்­றாக வாழும் வாய்ப்பு மார்க்க எல்­லை­க­ளுக்­கப்பால் மனிதன் என்ற பெறு­மா­னத்தில் சாத்­தி­ய­மா­னது.

நீதி, சமத்­துவம், சிந்­தனை, செயல் சுதந்­திரம், நலன் பேணல், தீய­ன­வற்­றி­லி­ருந்து பாது­காத்தல், நல்­ல­ன­வற்­றுக்கு உத­வுதல், பொது­வான அம்­சங்­களில் ஒரு­வ­ருடன் ஒருவர் ஒத்­து­ழைத்தல், பரஸ்­பரம் தெளிவு தேவைப்­படும் விவ­கா­ரங்­களில் அழ­கிய முறையில் கலந்­து­ரை­யாடல்… என இப்­ப­ரப்பில் பரந்­து­பட்ட உறவு மானிட அடிப்­ப­டையில் கட்­டி­யெ­ழுப்பப்­பட வேண்டும் என இஸ்லாம் விரும்­பு­கின்­றது.

சிறு­பான்மை முஸ்லிம் சமூ­கத்­திற்கும் முஸ்­லி­மல்­லாத பெரும்­பான்­மைக்­கு மி­டை­யி­லான உறவு

முஸ்­லிம்­க­ளுக்கும் முஸ்­லி­மல்­லா­தா­ருக்­கு­மி­டை­யி­லான உறவு பற்­றிய இஸ்­லாதின் கருத்­தையும் அதன் பிர­யோக வர­லாற்­றையும் வாசிக்கும் போது சிறு­பான்மை என்ற நிலை­யி­லி­ருந்து நாம் இந்த விட­யத்தை அணுக வேண்­டிய தேவை உள்­ளதா என்ற கேள்வி எழு­வதை தவிர்க்க முடி­யா­தி­ருக்­கின்­றது. அவ்­வ­ளவு தூரம் இஸ்­லாத்தின் பார்வை விசா­ல­மா­ன­தா­கவும் இயல்­பா­ன­தாயும் அமைந்து காணப்­ப­டு­கி­றது. என­வேதான் உஸ்தாத் பஹ்மி ஹுவைதி அவர்கள் அவ்­வு­றவைக் குறிக்க  “தஸாமுஹ்“  சகிப்­புத்­தன்மை என்ற சொல்லை பயன்­ப­டுத்­து­வ­து­கூட இது தொடர்­பான இஸ்­லாத்தின் கருத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வ­தாக அமையும் என்­கின்றார். இப்­ப­டி­யான பயன்­பாடு கிறிஸ்­தவ உலகில் காணப்­பட்ட மத அடிப்­ப­டை­வா­தத்தின் பின்­ன­ணியில் இஸ்­லா­மிய உலகை நோக்கி வந்த மிக­வுமே பிற்­பட்ட காலப் பிர­யோகம் என அவர் குறிப்­பி­டு­கிறார்.

எனினும் நாம் வாழும் சூழலை பார்க்­கின்ற போது பெரும்­பான்மை மனோ நிலை­யுடன் இஸ்­லாத்தை பின்­பற்­று­கிறோம் என்று கூறு­வதும் தவ­றா­னது. ஏனெனில் பெரும்­பான்­மை­யாக இருந்து இஸ்­லாத்தை பின்­பற்றும் போது கூட மூடுண்ட அமைப்­பி­லான, கடும்­போக்கு நடை­மு­றை­க­ளுடன் இஸ்லாம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது என்­ப­தற்­கான வர­லாற்றுச் சான்­றுகள் மிகவும் அரிதே. அப்­படி நடந்­த­வைகள் மோச­மான ஆட்­சி­யா­ளர்­க­ளது சில அரி­தான செயற்­பா­டு­க­ளா­கவே இருந்­தன.

அதிலும் அவர்­க­ளது அணு­கு­முறை முஸ்­லி­மல்­லா­தா­ருடன் மாத்­திரம் கடு­மை­யாக இருக்­க­வில்லை முஸ்­லிம்­க­ளுடன் கூட அவர்கள் அப்­ப­டித்தான் நடந்து கொண்­டார்கள்.

முஸ்லிம் பெரும்­பான்­மையே முஸ்­லி­மல்­லா­தா­ருடன் இஸ்­லாத்தின் அடிப்­ப­டை­யான போத­னை­க­ளின்­படி மிக­வுமே திறந்த மனோ நிலை­யுடன் நடந்­தி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளது உணர்­வுகள் புண்­ப­டாத வண்ணம் நடக்க வேண்­டு­மென இஸ்லாம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது என்­றி­ருந்தால் முஸ்­லி­மல்­லாத பெரும்­பான்­மைக்குள் வாழும் முஸ்லிம் சிறு­பான்மை எவ்­வ­ளவு தூரம் நெகிழ்வுத் தன்­மை­யுடன் வாழ­வேண்டும் என்­பது சொல்­லா­ம­லேயே புரிந்­து­கொள்ள முடி­யு­மா­னது.

இந்­த­வ­கையில் சிறு­பான்மை முஸ்­லிம்கள் மானிட சகோ­த­ரத்­துவம் என்ற புள்­ளியில் முஸ்­லி­மல்­லா­தா­ருடன் சந்­திக்க முடி­யு­மான அனைத்துப் புள்­ளி­க­ளையும் இனம்­கண்டு பொதுத்­த­ளத்தில் இணைந்து பணி­யாற்ற வேண்டும். அர­சியல், பொரு­ளா­தாரம், நாட்டின் அபி­வி­ருத்தி, நலன், சமூக ஒழுக்­கங்­களை நிலை­நாட்டல், அநீ­தி­களை இல்­லாமல் செய்தல் என பெரும் பரப்­பு­களுள் அவர்­க­ளுடன் இணைந்து பணி­யாற்­று­வ­தற்­கான வாயில்கள் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக பொரு­ளா­தாரப் பகுதி முஸ்­லி­மல்­லா­தா­ருடன் இணைந்து பணி­யாற்­று­வ­தற்­கான பல இடம்­பா­டு­களை கொண்­டி­ருப்­ப­தாக பல தனி­யான ஆய்­வுகள் குறிப்­பி­டு­கின்­றன.

இங்கு இஸ்­லா­மிய வங்கி தொடர்­பாக நாம் கொண்­டி­ருக்­கின்ற பல கருத்­துக்கள் மீள் பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. அர­சியல் பரப்பும் சமூகப் பரப்பும் கூட இத்­த­கைய பரந்த இடம்­பா­டு­களைக் கொண்ட பகு­தி­க­ளாகும். அத்­தோடு கலை, இலக்­கியம், ஊடகம் என்­ப­னவும் பொது­வாக மனித நலன், மானிட விழு­மி­யங்கள் என இணைய முடி­யு­மான பல இடங்­களை கொண்­டி­ருக்­கின்­றன. இதன்­போது முதலில் நாம் எம்மை தூதை சுமந்த சமூ­க­மாக ஒழுங்­கு­ப­டுத்திக் கொள்­ளுதல் முதன்­மை­யா­னது. இதில் நாம் இஸ்­லாத்தின் மாறாத மற்றும் மாறும் பரப்­புக்­களை சரி­யாக இனங்­கண்டு கொள்­வது அடிப்­ப­டை­யா­னது. அடுத்து நீதி, நல்­லு­றவு என்ற பாலம் எமக்கும் பெரும்­பான்மை சமூ­கத்­துக்­கு­மி­டையே போடப்­பட வேண்டும்.

இங்கு நாம் இனம் என்ற அடை­யா­ளத்­தி­லன்றி, உயர்ந்த பெறு­மா­னங்­களைக் கொண்ட ஒரு தூதை சுமந்த சமூகம் என்ற வகையில் எமது உறவை அமைத்துக் கொள்­ள­வேண்டும்.  இந்த இடத்தில் நீதி என்ற பெறு­மா­னத்தின் முன்னால் அனை­வரும் சம­மாக நோக்­கப்­படும் நிலை உரு­வாக வேண்டும். ஒரு பெரும்­பான்மை சகோ­தரர் சிறு­பான்மை முஸ்லிம் ஒரு­வ­ருக்கு இழைக்கும் அநீதி, அதன் பிர­தி­ப­லிப்­பாக அவர்­க­ளுடன் அநீ­தி­யாக நடந்து கொள்­வ­தற்­கான வாய்ப்பை வழங்­க­மாட்­டாது.

அந்­நி­கழ்­வுகள் குறிப்­பிட்ட தனி­யான நிகழ்­வு­க­ளாக பார்க்­கப்­பட்டு உரிய தீர்­வுகள் எட்­டப்­ப­டு­கின்ற முறை­மை­களை நாம் உரு­வாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த விடயம் சரி­யாகப் புரி­யப்­ப­டா­மையே நிறைய இனக் கல­வ­ரங்­களின் வாயி­லாக அமைந்­து­வி­டு­கின்­றன. குறித்த ஒரு பிர­தே­சத்தில் குறித்த இரு சாரா­ருக்­கி­டையில் பிரச்­சினை ஏற்­ப­டு­மாயின் அது அங்கே தீர்க்­கப்­பட வேண்டும். அது நீதி என்ற பெறு­மா­னத்தில் குறித்த விட­யத்­துக்கு தீர்வு காண்­ப­துடன் முடி­வ­டைய வேண்டும். அது ஏனைய பிர­தே­சத்­த­வர்­க­ளது உற­வு­களை பாதிப்­ப­தற்கு எத்­த­கைய வாய்ப்பும் வழங்­கப்­படக் கூடாது. உலகில் சிறு­பான்­மை­க­ளுக்­கெ­தி­ராக இடம்­பெறும் அநீ­தி­க­ளுக்கு பெரும்­பான்மை மாத்­தி­ரம்தான் காரணம் எனக் கூற முடி­யாது. சிறு­பான்­மை­யி­னரின் செயற்­பா­டு­களும் அதற்கு கார­ணமாய் அமைந்து விடு­வதைக் காண்­கிறோம். எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரை­யிலும் அதற்கு முஸ்­லிம்கள் தவ­றாக இஸ்­லாத்தை பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்­தி­ய­மையும் ஒரு முக்­கிய கார­ணமாய் அமைந்­துள்­ள­மையை அவ­தா­னிக்­கின்றோம். இந்த வகையில் பெரும்­பான்­மை­யுடன் சரி­யான உறவை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின் பிக்ஹின் புவி­யியல், வர­லாற்று, சமூகப் பல்­வ­கை­மைகள் உள்­வாங்­கப்­பட்டு அதி­லி­ருந்து எமக்­கான பல்­வ­கைமை கொண்ட ஒரு பிக்ஹ் நடை­முறை புழக்­கத்தில் விடப்­பட வேண்டும். இங்கு மாலிகி, ஹனபி மத்ஹப் சார்ந்த பிக்ஹ் பாரம்­ப­ரி­யங்­களும், மேற்­கிலும் மற்றும் புவிப் பல்­வ­கை­மை­க­ளிலும் உரு­வா­கிய பிக்­ஹு­களும் கவ­னத்­தி­லெ­டுக்­கப்­பட வேண்டும்.

ஐரோப்­பிய அமெ­ரிக்க நாடு­களை வைத்து உரு­வாக்­கப்­பட்ட பிக்ஹை கற்­ப­தற்­கான வாய்ப்பு எமது நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். அது எமது வாழ்­வ­மைப்பை இஸ்­லாத்தின் இலகு நடையில் ஒழுங்­க­மைத்துக் கொள்­வ­தற்­கான வாய்ப்­பை வழங்கும். அந்த பிக்ஹை படிக்கும் போது ஷெய்க் கர்­ளாவி குறிப்­பி­டு­வது போல்  “இஜ்­திஹாத் இன்­தி­காயி“ எனப்­படும் பிக்ஹின் பல்­வ­கை­மையுள் எமக்குப் பொருத்­த­மா­னதை தெரிவு செய்­தால்தான் அதில் அதிகம் என்­பதைக் காண்­கிறோம்.

இது பிக்ஹுல் அகல்­லிய்யாத் என்ற வடி­வத்தின் ஒரு பரப்­பாகும். அடுத்த பரப்­புத்தான் எமக்குப் பொருத்­த­மான சட்ட ஒழுங்­கு­களை இஸ்­லாத்தின் மூலா­தா­ரங்­களில் நின்று உரு­வாக்கிக் கொள்தல்.

இந்த விடயம் மிகவும் விரி­வாக கலந்­து­ரை­யா­ட­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு எமது வாழ்வை மீள் ஒழுங்­க­மைப்­பது என்­பது எமது நாட்டைப் பொருத்­த­வரை இஸ்­லாத்தை சரி­யாக பிர­தி­நித்­து­வப்­ப­டுத்­து­வதில் மிக முக்­கிய அம்­ச­மாக இருக்கும் என்­பதை இஸ்­லாத்தின் விரிந்த தன்­மை­யையும் எமது வாழ்­வையும் சரி­யாக படித்துப் பார்க்கும் யாரும் மறுக்­க­மாட்­டா­ர்கள். பல­போது எமது முன்­னைய இமாம்­களின் கருத்­தின்­படி எமது நாடு இன்­றைய சர்­வ­தேச சூழலில் தாருல் இஸ்­லா­மா­கவே பார்க்­கப்­பட முடி­யு­மாக இருக்­கின்­றது. உண்­மையில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் நாடுகள் கூட இந்த வகைப்­பாட்­டுக்குள் வர­மு­டி­யாத சூழல்தான் இன்று காணப்­ப­டு­கி­றது. எனினும் அல்­லாஹ்வின் அந்த அருளை நாம் துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ளோம்.

நாம் இலங்கை தீவுக்குள் இன்னோர் தீவாய் வாழ்­கிறோம். உண்­மையில் முஸ்­லி­மல்­லா­தா­ரு­ட­னான உறவு பற்றி பேசும் போது பாவிக்­கின்ற நிர்ப்­பந்தம் நிர்ப்­பந்தம் என்ற சொற்­க­ளெல்லாம் நாம் தக­வ­மைத்துக் கொண்ட பிக்ஹில் உள்ள நிர்ப்­பந்­தங்­களே தவிர இஸ்­லாத்­தி­லுள்ள நிர்ப்­பந்­தங்­க­ளல்ல. இங்கு இலங்கை முஸ்­லிம்­களைப் பார்த்து நீங்கள் சில மஞ்சல் தாள்­க­ளை­யு­டைய பிக்ஹ் நூல்களுக்குள் உங்களது வாழ்வை சிறைப்படுத்தியுள்ளீர்கள் என உறத்துக் கூவ வேண்டும் போலிருக்கிறது. குறைந்தது ஷாபி மத்ஹபையாவது சரியாக கற்றுத் தேறாமலேயே எமது வாழ்வுக்கு சட்டம் சொல்கிறோம்.

இந்த வரையறைகளிலிருந்து வெளிவர வேண்டியது இன்றைய  சூழலில் முதன்மையான மார்க்கக் கடமையாகும்.

கோடிகள் கொடுத்து நாம் அமைத்து வைத்துள்ள, அமைத்துக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்கள், வருடா வருடம் கோடிகளுக்கு அறுத்துப் பலியிடும் மிருகங்கள், இஸ்லாம் வலியுறுத்தும் சுன்னாவான பலபோது பர்ளான உற்பத்தியை விட்டு விட்டு அடுத்தவனது உற்பத்திக்கு ஹலால் கொடுப்பது பற்றிய எமது சிந்திப்பு, முன்பு ஊருக்கு ஊர் என்றிருந்தது மாறி வீட்டுக்கு வீடு என மத்ரஸாக்களை அமைத்து, கோடிக் கணக்கில் செலவு செய்து கட்டிடங்களை அமைத்து நாலு தாளை மனனமிட்டு ஒப்புவிக்கும் அறிஞர்களை உருவாக்குகிறோம் என இஸ்லாத்தை வளர்ப்பதாக வீராப்புப் பேசுதல் என, இந்த நாட்டின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்காது ஒதுங்கியிருந்து கொண்டு வெறும் தோற்றத்திலும் கிரியைகளிலும் பகட்டுக் காட்டும் எமது இஸ்லாம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது தான் விடை காணமுடியாத புதிராக உள்ளது.

இந்த நாட்டிலுள்ள அஹ்லுல் கிதாப்களுடனான உறவு எனத்துவங்கி நமக்கு நெருக்கமானவர்கள் யார்? எம்மை எதிர்ப்பவர்கள் யார்? என துல்லியமாக இனங்காணப்பட்டு எமது உறவுகளை பேணுவதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமைகள் உருவாக்கிக் கொள்ளப்பட வேண்டும். அதனுடன் சேர்த்து சிறுபான்மையாய் கட்டுண்டு போயுள்ள மனோ நிலையை உடைக்கும் வகையில் இஸ்லாத்தை அதன் பரந்த தன்மையுடன் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்களுடனான புத்திஜீவித்துவ உறவு முதல் திருமண உறவு வரை சமூக சாளரத்தை திறக்க வேண்டும். இது உள் நோக்கியும் அஹ்லுல் கிதாப்களில் துவங்கி மற்ற சாராரை நோக்கியும் விரிவடைய வேண்டும்.

இப்படி இத்துறை சார்ந்து ஆழமாக சிந்திக்கும் வாயில்களை திறந்து விடும் வகையில் அதற்கான ஒரு நிபுணத்துவ சபையின் உருவாக்கம் இவற்றின் முதல் படியாக அமையும். இங்கு இந்த கட்டுரை இவ்விவகாரம் தொடர்பாக மிகவும் சிறிய பரப்புக்குள் தொகுக்கப்பட்டதாகும். இதன் தொடர்ச்சி விரிந்த வாசிப்புக்களையும் ஆய்வுகளையும் வேண்டிநிற்கிறது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.