மியன்மாரில் கைதான இலங்கையருக்கு குண்டுத்தாக்குதலுடன் தொடர்பில்லை
அந்நாட்டு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு
இலங்கையில் சுமார் 250 பேரின் உயிரைப் பலியெடுத்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டு தேடப்பட்டு வந்த உண்மையான சந்தேக நபர் தொடர்ந்தும் மியன்மாரில் இல்லை என மியன்மார் ஜனாதிபதியின் செயலகம் அறிவித்துள்ளது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவரென்று நம்பப்படும் இலங்கையர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை மியன்மாரில் கைது செய்யப்பட்டதன் பின்பே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை மியன்மார் சுற்றுலாப் பயணிகள் பொலிஸார் அந்நாட்டின் ஹோட்டல் மற்றும் சுற்றுலா திணைக்களத்திடம் அப்துல் சலாம் மஹ்மூத் இர்சாத் (29) என்பவர் தொடர்பில் விபரங்களைக் கோரியிருந்தனர். அவர் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல் அல்லது உல்லாசப் பயணிகள் விடுதிகளில் தங்கியுள்ளாரா? என்பது தொடர்பில் அறிவிக்குமாறும் வேண்டியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அப்துல் சலாம் இர்ஷாத் மஹ்மூத், யன்கூனிலுள்ள குடிவரவு, குடியகல்வு காரியாலயத்தில் ஆஜரானபோது பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற 250 பேரை பலிகொண்ட குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர் என மஹ்மூதை சந்தேகிப்பதாக இலங்கை அரசாங்கம் மியன்மாருக்கு அறிவித்திருந்ததுடன், அவர் பற்றிய விபரங்களைக் கோரியிருந்தது என மியன்மார் ஜனாதிபதி செயலக பேச்சாளர் யுசோ ஹட்டே தெரிவித்தார்.
மஹ்மூதை விசாரணைக்குட்படுத்தியதையடுத்து உண்மையான சந்தேக நபர் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
யுசோ ஹட்டே (Uzaw Htay) மேலும் தெரிவிக்கையில், அப்துல் சலாம் இர்ஷாத் மஹ்மூதும் உண்மையான சந்தேக நபரும் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஒரே விமானத்தில் மியன்மாருக்கு வருகை தந்துள்ளனர். மஹ்மூத் அன்றிலிருந்து இங்கு தங்கியிருந்துள்ளார்.
அப்துல் சலாம் இர்ஷாத் மஹ்மூத் மாணிக்கக்கல் வர்த்தகர். அவர் யன்கூன் மற்றும் மன்டலாய்க்கு பயணங்களை மேற்கொள்பவர். கடந்த வியாழக்கிழமை மியன்மார் சுற்றுலாப் பயணிகள் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது இந்த இலங்கையர் தானாகவே யன்கூன் குடிவரவு, குடியகல்வு காரியாலயத்தில் ஆஜராகி தனக்கு குண்டுத் தாக்குதல்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார். என்றாலும் பொலிஸார் அவரைத் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது பொலிஸார் அவரால் வழங்கப்பட்டுள்ள வாக்குமூலத்தினை மீளாய்வு செய்து வருகின்றனர் எனவும் மியன்மார் ஜனாதிபதி செயலக பேச்சாளர் தெரிவித்தார்.
யன்கூனிலுள்ள இலங்கை தூதரகம் இது தொடர்பில் எந்த கருத்தினையும் வெளியிடவில்லை.
-Vidivelli