ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் டாக்டர் ஒருவர் நிகாப் அணிந்து கடமைக்குச் சென்ற போது நிகாபை கழற்றி விட்டு கடமைக்கு வரும்படி அறிவிக்கப்பட்டதால் அவர் தனது வைத்திய தொழிலிலிருந்தும் விலகிக் கொள்வதற்குத் தீர்மானித்து தனது இராஜினாமா கடிதத்தை ஹோமாகமை வைத்தியசாலை அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் ஹோமாகமை வைத்தியசாலை அதிகாரியொருவர் விளக்கமளிக்கையில், குறிப்பிட்ட முஸ்லிம் பெண் டாக்டர் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் ஒரு நாள் நிகாப் அணிந்து கடமைக்கு வந்துள்ளார். அன்று அவர் வெளிநோயாளர் பிரிவில் கடமையை ஆரம்பிக்க முற்பட்டபோது அங்கிருந்த நோயாளர்கள் அந்த டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர். அத்தோடு வைத்தியசாலையில் கடமையிலிருந்த ஊழியர்களும் நிகாப் அணிந்து கடமையாற்றுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
பின்பு வைத்தியசாலை பிரதம அதிகாரியினால் குறிப்பிட்ட டாக்டரின் தந்தை வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதனையடுத்து டாக்டர் தந்தையின் பொறுப்பில் விடப்பட்டார். பின்பு டாக்டர் தந்தையுடன் வெளியேறிச் சென்றார்.
அவ்வாறு தந்தையுடன் சென்ற குறிப்பிட்ட டாக்டர் எந்தவித அறிவித்தலுமின்றி மே மாதம் 2 ஆம் திகதி வரை கடமைக்கு சமுகமளிக்கவில்லை. மே மாதம் 2 ஆம் திகதி தொலைபேசி தொடர்பினை ஏற்படுத்தி தான் சுகயீனமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
பின்பு குறிப்பிட்ட டாக்டர் தான் வைத்திய சேவையிலிருந்தும் விலகிக் கொள்வதாகக் குறிப்பிட்டு இராஜினாமா கடிதத்தை ஹோமாகமை வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஹோமாகமை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. ஹெட்டி ஆரச்சியைத் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
இவ்வாறான ஒரு சம்பவம் எமது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தின் பின்பு குறிப்பிட்ட டாக்டர் இதுவரை கடமைக்கு சமுகமளிக்கவில்லை. பின்பு அவர் தனது சேவையிலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்து கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். என்றாலும் அவரது இராஜினாமா கடிதம் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்றார்.
-Vidivelli