முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் மற்றும் அபாயா அணிந்து வெளியில் கடமைகளுக்காக செல்லும்போதும் வைத்தியசாலைகள், அரச நிறுவனங்களுக்கு செல்லும்போதும் அநாவசிய கெடுபிடிகளிலிருந்தும் தவிர்ந்து கொள்வதற்கு முஸ்லிம் பெண்களின் கலாசார உடை குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் தமிழ், சிங்கள பிரதிகளை தம்முடன் எடுத்துச் செல்லுமாறு முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலாவி, புத்தளத்தை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் குறிப்பிட்ட அரசாங்க வர்த்தமானியின் பிரதிகளை புத்தளம் பிரதேசத்தில் விநியோகித்து வருவதாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் தமிழ், சிங்கள பிரதிகளை விநியோகிப்பதற்கு முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் தலைமைகளும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும் அவ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் தலைவி ஜுவைரியா இது தொடர்பில் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்;
‘புத்தளம் பகுதியில் எமது பெண்களுக்கு மத்தியில் புர்கா, நிகாப் தொடர்பான தடை குறித்த அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் தமிழ், சிங்கள பிரதிகளை விநியோகித்து வருகிறோம். ஹிஜாப், பர்தா என்பனவற்றுக்கு தடையில்லை என்பதை படங்களுடன் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம் பெண்களின் நலன்கருதியும் அநாவசிய கெடுபிடிகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கும் குறிப்பிட்ட அரசாங்க வர்த்தமானியின் பிரதிகள் தமிழ், சிங்கள மொழிகளில் விநியோகிக்கப்பட வேண்டும். ஒவ்வோர் பள்ளிவாசல்கள் மூலமும் இவற்றை விநியோகிக்கலாம். முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் தலைமைகளும் தாமதமின்றி இம்முயற்சியில் இயங்க வேண்டும்’ என்றார்.