சவூதியில் ரமழானிற்கு பின்னர் மூன்று முன்னணி மிதவாத அறிஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது
மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்
பல்வேறு பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சவூதி அரேபியாவின் முன்னணி மிதவாத சுன்னி அறிஞர்கள் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதோடு ரமழான் முடிந்தவுடன் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக இரண்டு அரசாங்க வட்டாரங்களும் குறித்த அறிஞர்களுள் ஒருவரின் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிஞர்களுள் மிகவும் முன்னணியில் இருப்பவர் ஷெய்க் சல்மான் அல்-அவ்தாஹ் ஆவார். இவர் ஷரீஆ மற்றும் ஒருபாலுறவு தொடர்பில் இஸ்லாமிய உலகில் ஒப்பீட்டுரீதியில் முன்னேற்றகரமான கருத்துக்களை முன்வைத்தமைக்காக சர்வதேச ரீதியாக அங்கீகாரத்தைப் பெற்ற அறிஞராவார்.
சவூதி அரேபியாவுக்கும் அதன் வளைகுடாவின் அண்டை நாடான கட்டாருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படப் பிரார்த்திப்பதாக டுவிட்டர் பதிவொன்றை இட்டதையடுத்து கட்டார் மீது றியாத் தடைகளை விதித்து மூன்று மாதங்களின் பின்னர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவ்தாஹ் கைது செய்யப்பட்டார்.
சுன்னி பிரசாரகரும் கல்வியியலாளரும் எழுத்தாளருமான அவாட் அல்-கர்னி மற்றும் பிரபல ஒளிபரப்பாளரான அலி அல்-ஒமரி ஆகிய இருவருமே மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஏனைய இரு அறிஞர்களுமாவர். இவர்களும் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
இம் மூவரையும் இணையத் தளங்களில் ஏராளமானோர் பின்பற்றுகின்றனர். அல்அவ்தாஹ்வின் அரபுமொழி டுவிட்டர் கணக்கினைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மாத்திரம் 13.4 மில்லியனாகும். அவரது கைதின் பின்னர் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது.
அல்-ஒமரியின் போ யூத் (இளைஞர்களுக்கான) என்ற தொலைக்காட்சி அலைவரிசை ஏராளமான இரசிகர்களைக் கொண்டுள்ளது.
றியாதில் விஷேட குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைகளை எதிர்கொண்டுள்ள இம் மூவருக்கும் மரண தண்டனை வழங்குவது என்ற திட்டமுள்ளதனை இரண்டு சவூதி அரேபிய வட்டாரங்கள் சுதந்திரமாக உறுதிப்படுத்தியுள்ளன. மே மாதம் 1 ஆம் திகதி என நிர்ணயிக்கப்பட்டிருந்த விசாரணை, தினம் குறிப்பிடப்படாது பிற்போடப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டதும், அதனை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தாமதிக்க மாட்டார்கள் என வட்டாரமொன்று தெரிவித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 37 சவூதி நாட்டவர்களுக்கு பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது, இவர்களுள் பெரும்பாலானவர்கள் ஷீஆ செயற்பாட்டாளர்களாவர். இதன்போது சர்வதேச கண்டனம் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதும் அளவீடு செய்யப்பட்டது.
சர்வதேச ரீதியாக மிகச் சிறிய அளவிலான பிரதிபலிப்புக்களை அவதானித்ததும், குறிப்பாக அரசாங்க மற்றும் அரச தலைவர்கள் மட்டத்திலான பிரதிபலிப்புக்களை கவனத்திற்கொண்ட அவர்கள் முன்னணி நபர்களுக்கு மரண தண்டனை வழங்கும் தமது திட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்தனர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத குறித்த வட்டாரம் தெரிவித்தது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பதற்றநிலை தற்போது அதிகரித்துள்ள நிலையில் மரண தண்டனை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
விஷேடமாக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றம் இதனைச் செய்வதற்கு அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் சவூதி அரேபியாவை வொஷிங்டன் மகிழ்ச்சிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதனைக் கணக்கீடு செய்த சவூதி அரசாங்கத்தினால் அதிலிருந்து விடுபடுவதற்கு முடிந்துள்ளது என முதலாவது வட்டாரம் தெரிவித்தது.
அவர்கள் மரண தண்டனையினை நிறைவேற்றுவார்களாயின் அது மிகவும் பாரதூரமான விடயமாக இருக்கும். அது மிகவும் ஆபத்ததான கட்டத்திற்கு இட்டுச் செல்லும் என அறிஞர்களின் குடும்பங்களின் அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தார்.
மூன்று அறிஞர்களையும் தடுத்து வைத்துள்ளமையினை ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதேபோன்று மனித உரிமைக் குழுக்களான மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை என்பன கண்டித்துள்ளன.
கைது செய்யப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக உள்துறை அமைச்சினால் உருவாக்கப்பட்ட நீதிமன்றமான விஷேட குற்றவியல் நீதிமன்றத்தில் இரகசிய விசாரணைகளுக்காக அல்-ஓதாஹ் ஆஜர்படுத்தப்பட்டார். பயங்கரவாதம் தொடர்பான 37 குற்றச்சாட்டுக்கள் விசேட சட்டவாதியினால் அல்-ஓதாஹ் மீது சுமத்தப்பட்டுள்ளது.
முன்னணி சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்களான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் பத்வா மற்றும் ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சபை போன்ற பெயர்களிலான பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அல்-ஓதாஹ் மீதான இரண்டாவது தொகுதி குற்றச்சாட்டுக்களில் கைதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் கருத்துக்களை வெளிப்படுத்தியமை, அரசாங்கத்தின் அடைவுகள் தொடர்பில் எதிர்மறை மற்றும் கேலிசெய்யும் கருத்துக்களை வெளியிட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
அல்-ஓதாஹ் மீதான மூன்றாவது தொகுதி குற்றச்சாட்டுக்களில் கட்டாரின் அரச குடும்பத்துடன் தொடர்புகளைப் பேணியமை மற்றும் கட்டார் மீதான சவூதி தலைமையிலான புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பகிரங்கமாக மறுப்புத் தெரிவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இவ்வாறான 37 குற்றச்சாட்டுக்களும் மறைமுக ஆட்சியாளரான பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் கீழ் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக இஸ்தான்பூலில் சவூதி அரேபிய துணைத்தூதரகத்தில் வைத்துக் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக லண்டனில் தனது நண்பர்களிடம் ஊடகவியலாளர் ஜமால் கஷேக்ஜி தெரிவித்திருந்தார்.
என்ன விலை கொடுத்தாவது மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்களை அவர் நசுக்கி விடுவார் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என அந்த நேரத்தில் கஷேக்ஜி தெரிவித்திருந்தார்.
தீவிரப்போக்குக் கொண்டவர் என்பதற்காக அல்-அவ்தாஹ்வுக்கு மரண தண்டனை வழங்கப்படவுள்ளது என்பதல்ல, அவர் மிதவாதபோக்குக் கொண்டவர் என்பதே காரணமாகும். அதனால்தான் அவரை அவர்கள் அச்சுறுத்தலாகப் பார்க்கின்றனர்.
அரசியல் மாற்றுக்கருத்துக்கொண்டவர்களுக்கு மேலும் ஏதேனும் மரண தண்டனை வழங்கப்படுமானால் அதற்கான சூழலை ஏற்படுத்தியமைக்காக ட்ரம்ப நிருவாகத்தின் நேரடி விளைவுகளை ஏற்படுத்தும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கிற்கான பணிப்பாளர் சாரா லேஹ் விட்சன் தெரிவித்தார்.
பரவலானதும் திட்டமிட்ட வகையிலானதும் கவலைதரும் விதத்திலானதுமான சமயத் தலைவர்கள், எழுத்தளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கைதுகளும் தடுத்து வைப்புக்களும் நிறுத்தப்பட வேண்டுமென தொடராக விடுக்கப்படும் கோரிக்கைகளை றியாத் புறந்தள்ளி வருவதாக கடந்த வருடம் ஜனவரி மாதம் மனித உரிமைகள் பேரவையின் ஒரு பகுதியான ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு குற்றம்சாட்டியிருந்தது.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழான சவூதி அரேபியாவின் கடப்பாடுகள் எந்த அளவிற்கு ஒத்துப்போகின்றன என்பது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவுபடுத்தலைக் கோரும் அதேவேளை, மனித உரிமைகள் பேரவையில் இணைந்து கொள்வதற்கு எதிர்பார்க்கும் போது தன்னார்வரீதியான வாக்குறுதிகள் மற்றும் அர்ப்பணிப்புக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துவோம் என ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு முடிவில் மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தபோதிலும் மனித உரிமைக் காவலர்கள் மற்றும் விமர்சகர்களை மௌனிக்கச் செய்தல், பலவந்தமாக கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் குற்றம் சுமத்துதல் என்பனவற்றை சவூதி அரேபியா தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
அல்-அவ்தாஹ் மற்றும் ஏனைய இரு அறிஞர்களின் விசாரணை தொடர்பில் இவ் வருடத்தின் ஆரம்பத்தில் மனித உரிமைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாற்றுக்கருத்துடை யவர்களுக்கான அவரது வெளிப்படையான ஆதரவுக்கு மேலதிகமாக அல்-ஓதாஹ்வுக்கு எதிராக அரச சட்டவாதி 37 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு கட்டார் அரசாங்கத்துடனான தொடர்புகளே இதில் பெரும்பான்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வன்முறைச் செயற்பாடுளில் ஈடுபட்டதாகவோ அல்லது வன்முறைகளைத் தூண்டியதாகவோ எவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என கடந்த செப்டம்பர் 12 ஆந் திகதிய மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
vidivelli