ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்பாராத விதங்களிலெல்லாம் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த வாரம் மடிகே மிதியாலை பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுட்டிக்காட்டியது போல, ஈமான் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கும்பல் செய்த பாவத்தை நாம் எல்லோருமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது ஏராளமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இவர்களில் நேரடியாக பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 மாத்திரமே. இதற்கப்பால் தேசிய தௌஹீத் ஜமாஅத் அல்லாத ஏனைய ஜமாஅத்துகளுடன் தொடர்பு வைத்திருந்த பலரும் தீவிரவாதிகளாக சித்திரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
வீட்டில் இஸ்லாமிய சஞ்சிகை, பத்திரிகை நறுக்குகளை வைத்திருந்தோர், கத்திகள், வாள்களை வைத்திருந்தோர், வங்கிக் கணக்கில் அதிக நிதியைக் கொண்டிருந்தோர், தர்மச் சக்கரம் போன்ற வடிவத்தைக் கொண்ட ஆடையை அணிந்த அப்பாவிப் பெண், முகநூலில் பதிவிட்டவர், முகத்திரை அணிந்து சென்ற பெண்கள் எனப் பலரும் இவர்களுள் அடங்குவர். தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருந்த, அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தவர்கள் கூட தீவிரவாதத்துக்கு துணை போனதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள துரதிஷ்டமும் நமது நாட்டில் நடந்தேறியுள்ளது.
இங்கு கவலைக்குரிய விடயம் என்னவெனில் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பயன்படுத்தி தமது தனிப்பட்ட, அரசியல் மற்றும் மார்க்க ரீதியான குரோதங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக, தமக்கு விரோதமானவர்களை பாதுகாப்புத் தரப்பினரிடம் சிக்க வைக்கின்ற கைங்கரியத்தில் நமது சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாரார் செயற்பட்டு வருகின்றனர் என்பதேயாகும். இதற்கு ஆதாரமாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
முஸ்லிம்கள் மீது சந்தேகம் கொண்டு, பிற சமூகத்தவர்கள் பொலிசாரிடம் முறையிடுகின்ற நிலைமை ஒருபுறமிருக்க, முஸ்லிம்களே முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்கின்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றமையானது கண்டனத்துக்குரியதாகும். இதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் மார்க்க கொள்கை விவகாரங்களில் கருத்து முரண்பாடுகளைக் கொண்டோர், தமது கொள்கைக்கு எதிரானவர்களை தீவிரவாத முத்திரை குத்தி சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் உயர்மட்டங்களில் முறையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து படையினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளதுடன் பலரை நீண்ட நேரம் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூட, முஸ்லிம் சமூகத்திலுள்ளவர்கள் இவ்வாறு பழிவாங்கல்களில் ஈடுபடுகின்றமை எமக்கே கவலையைத் தருவதாக உள்ளது என எம்மிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
வரலாற்றில் முன்னெப்போதுமில்லாதவாறு சவால்களைச் சந்தித்துள்ள இலங்கை முஸ்லிம் சமூகம் ஓரணியாக நின்று ஒற்றுமைப்பட்டு அந்த சவால்களை எதிர்கொண்டு பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதா? அல்லது இந்த சந்தர்ப்பத்திலும் அரசியல், மார்க்க, தனிப்பட்ட குரோதங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு தலைப்படுவதா? என்ற கேள்விகளுக்கு நாம் உடன் விடை காணத் தலைப்பட்டுள்ளோம்.
ஆகவேதான் தயவு செய்து இந்த பழிவாங்கும் மனோ நிலையிலிருந்து முஸ்லிம் சமூகம் வெளிவர வேண்டும். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுக்கும் இந்தளவுதூர சீரழிவுகளுக்கும் காரணம் இந்த அரசியல் மற்றும் மார்க்கப் பிளவுகளேயாகும். இதன் சிறந்த பாடமாகவே அல்லாஹ் கடந்த ஏப்ரல் 21 சம்பவத்தை நமக்குத் தந்துள்ளான். இதிலிருந்தும் நாம் பாடம் படிக்கவில்லையாயின் இதன் பிறகும் நமது சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான வாயில்கள் திறக்கப்படாது.
எனவேதான் அல்லாஹ்வுக்காக, இந்தப் புனித மாதத்தில் சமூக ஒற்றுமையைப் பேணுகின்ற விதத்தில் நடந்து கொள்ளுமாறும் பிறருக்கு அநியாம் இழைக்கின்ற தீய மனப்பாங்கிலிருந்து வெளிவருமாறும் வினயமாக வேண்டுகோள்விடுக்க விரும்புகிறோம்.
vidivelli