போலிச் செய்திகளுக்கு முட்டுக் கொடுக்கலாமா?

0 722

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல முஸ்லிம் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஏதுமிருப்பின் தமக்கு அறியத் தருமாறு பொலிசார் பொது மக்களை வேண்டியுள்ளனர்.

உண்மையில் இது மிகவும் வேடிக்கையானதாகும். ஒருவரை கைது செய்து தடுத்து வைத்துவிட்டு, அவர் தொடர்பான குற்றச்சாட்டுக்களைத் தாருங்கள் என பொலிசார் கூறுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அப்படியானால், பொலிசார் தம்மிடம் எந்தவிதமான போதிய ஆதாரங்களுமின்றியே அவரைக் கைது செய்துள்ளனர் என அர்த்தம் கொள்ள வேண்டி வரும்.

குறித்த வைத்தியர் ஷாபி, சுமார் 4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு சட்டவிரோத கருத்தடை அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர் எனவும் கடந்த வியாழக்கிழமை வெளியான சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இச் செய்தி வெளிவந்த உடனேயே குறித்த பத்திரிகை கடும் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியேற்பட்டது. சாத்தியமற்ற உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்றை, அதாவது போலிச் செய்தியொன்றையே குறித்த பத்திரிகை வெளியிட்டுள்ளதாக இதன் பின்னணியையும் யதார்த்தத்தையும் உணர்ந்த பலரும் கருத்து வெளியிட்டனர். சபாநாயகர் கரு ஜயசூரியவும் இச் செய்தி பொய்யானது எனக் குறிப்பிட்டிருந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் இந்தச் செய்தியின் நம்பகத் தன்மை குறித்து பாராளுமன்றில் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந் நிலையில் குறித்த பத்திரிகையின் செய்தி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது. அதேபோன்று போலியான செய்தியை வெளியிட்டு இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை தோற்றுவிக்க முனைந்ததாக சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு எதிராக பொலிஸ் நிலையத்திலும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.

இப் பின்னணியில்தான் தற்போது, வைத்தியர் ஷாபி 8000 மகப்பேற்று அறுவைச் சிகிச்சைகளைச் செய்துள்ளதாக மீண்டும் அதேபத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஏலவே குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக செய்தி வெளியிட்ட அப் பத்திரிகை, தற்போது மகப்பேற்று அறுவைச் சிகிச்சையே செய்ததாக கூறுகிறது.

மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் தனது சேவைக்காலத்தில் ஆயிரக் கணக்கான மகப்பேற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வார். அது சட்டரீதியாக மேற்கொள்ளப்படுவதாகும். தாயையும் சேயையும் காப்பாற்றும் நோக்கிலேயே இயற்கையான பிரசவத்தை தவிர்த்து சிசேரியன் எனப்படும் இந்த மகப்பேற்று சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை ஒரு குற்றமாக இலங்கைப் பொலிசார் கருதுவார்களாயின் நாட்டிலுள்ள சகல மகப்பேற்று வைத்தியர்களையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டி வரும்.

குறித்த பத்திரிகை வெளியிட்ட செய்தி பொய்யெனில் அப் பத்திரிகைக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யாத பொலிசார் இன்று வைத்தியரை கைது செய்து வைத்துக் கொண்டு, அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றனர். இது பொலிஸ் துறைக்கே அவமானத்தைக் கொண்டு வருகின்ற செயற்பாடாகும்.

குறித்த வைத்தியர் மீது அளவுக்கதிகமாக சொத்துக் குவித்ததாக மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிசார் தாராளமாக விசாரணைகளை முன்னெடுத்து அவர் குற்றவாளியெனின் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். மாறாக அவர் ஒரு முஸ்லிம் வைத்தியர் என்பதற்காக, இன்னுமொரு இனத்தின் ஆயிரக் கணக்கான பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தார் என பிரசாரம் மேற்கொண்டு பெரும்பான்மை சிங்கள மக்களை தவறாக வழிநடாத்தும் செயற்பாட்டை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுவும் நாட்டின் சமகால நிலைமையில், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரசாரங்கள், தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள காலப்பகுதியில் போலிச் செய்திகளுக்கு முட்டுக் கொடுக்க பொலிசார் முற்படுவது கவலைக்கும் கண்டனத்துக்குரியதுமாகும்.

வைத்தியர் ஷாபி விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அந்த நீதியானது ஒரு சமூகத்தையும் அந்த சமூகத்திலுள்ள வைத்தியர்களையும் பாதுகாப்பதாக அமைய வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பக்கச்சார்பின்றி ஆராயப்பட வேண்டும். போலியான செய்திகளைப் பரப்பியோரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.