உலமா சபை அறிவிக்கும் தினத்திலேயே பெருநாள் திடல் தொழுகைக்கு அனுமதி
காத்தான்குடி நகரசபை ஜம்மிய்யதுல் உலமா சம்மேளனம் தீர்மானம்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் நோன்பு பெருநாள் என பிரகடனப்படுத்தப்படும் தினத்தில், காத்தான்குடி கடற்கரையில் ஒரு தரப்புக்கு மாத்திரம் பெருநாள் திடல் தொழுகையை நடாத்துவதற்கு அனுமதி வழங்குவதென காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
எதிர்வரும் நோன்புப் பெருநாள் தொழுகையை காத்தான்குடி கடற்கரையில் நடாத்துவது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று காத்தான்குடி நகரசபை மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எம்.ஹாறூன், செயலாளர் மௌலவி எம்.ஏ.ஹாலித் ஹசன், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் மௌலவி எம்.எஸ்.றமீஸ் ஜமாலி உட்பட காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள், காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது காத்தான்குடியில் எதிர்வரும் நோன்புப் பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரையில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு ஆலோசனை செய்யப்பட்டது.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையினால் நோன்புப் பெருநாள் தினம் பற்றி அறிவிக்கும் தினத்தில் காத்தான்குடி கடற்கரையில் ஒரு தரப்புக்கு மாத்திரம் பெருநாள் தொழுகையை நடாத்துவதற்கு அனுமதி வழங்குவதென இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி நகரசபை என்பன இணைந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எஸ்.அஸ்பர் தெரிவித்தார். அத்துடன் இத்தீர்மானத்தை மீறி வேறு இடங்களில் பிறிதாக தொழுகை நடாத்த முற்படுவோருக்கு அனுமதி வழங்கப்படமாட்டா தெனவும் இதற்கு கட்டுப்படாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
VIDIVELLI