இலங்கையில் தீவிரவாதத்தை முற்றாக ஒழித்து பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கும் நோக்கில், நாட்டில் நடக்கும் பயங்கரவாத செயற்பாடுகளை உடனுக்குடன் தெரியப்படுத்த இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் தொடர்பு இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய ஷுரா சபை, வை.எம்.எம்.ஏ மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள், வர்த்தக சமூகம் மற்றும் ஏனைய பங்காளர்களையும் உள்ளடக்கியே இந்த தொடர்பு இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம் சமூகமானது தீவிரவாத அச்சுறுத்தல்களை தோற்கடிக்கும் முகமாக உறுதியான ஒத்துழைப்புடன் அதிகாரிகளுக்கு உதவியுள்ளதன் அடிப்படையில் நாட்டில் இருந்து தீவிரவாதத்தை ஒழிக்க அனைவரும் தொடர்ந்து உதவ வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஏதேனும் கடும்போக்கான அல்லது தீவிரமான செயற்பாடுகளை அவதானித்தால் அல்லது எவரேனும் ஒருவர் பள்ளிவாசலிலோ சமூகத்திலோ சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்டால் இந்த இலக்கத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும்.
கடும்போக்கினை அறிவிக்கும் 011 7021477 எனும் துரித அழைப்பின் ஊடாக குறித்த விடயங்களை தெரிவிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வர். இந்த இலக்கத்தை தொலைபேசி அழைப்புப் பட்டியலில் சேமித்துக் கொள்வதன் மூலம் எந்த ஒரு நேரத்திலும் குறித்த தரப்பினரை தொடர்பு கொள்ள முடியும்.
vidivelli