கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரியில் பணிபுரியும் 7 முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கல்லூரிக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறும், ஆசிரியைகள் அபாயா அணிந்து கடமையாற்றுவதற்கு அனுமதிக்குமாறும் மத்திய மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருந்தும் தொடர்ந்தும் குறிப்பிட்ட ஆசிரியைகளுக்கு அபாயா அணிந்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் கடந்த இரு வாரங்களாக அபாயா அணிந்து சென்றதால் அவர்கள் கல்லூரி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பழைய மாணவிகள், பெற்றோர்களால் தடுத்து நிறுத்தப் பட்டார்கள்.
தொடர்ந்து பல நாட்களாக பாடசாலை நேரத்தில் கல்லூரி பிரதான வாயிலில் தரித்திருந்த ஆசிரியைகள் மத்திய மாகாண ஆளுநரிடம் முறையிட்டனர். கண்டி பிரஜைகள் முன்னணியும் இந்தத் தடையை எதிர்த்து முறையிட்டது.
இதனையடுத்து கடந்த வாரம் மத்திய மாகாண ஆளுநர் கல்லூரி நிர்வாகம் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி முஸ்லிம் பெண்களின் உடை தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி மற்றும் சுற்று நிருபத்தைப் பின்பற்றும்படி பாடசாலை நிர்வாகத்தை வேண்டியதுடன் ஆசிரியைகள் அபாயா அணிந்து வர அனுமதிக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவு கல்லூரி அதிபரினால் மீறப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இவ்விவகாரம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை அழைத்து கலந்துரையாடலொன்றினை நடாத்தினர்.
பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகளின் உடை தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அரசாங்க வர்த்தமானி அறிவித்தலைப் பின்பற்றும்படியும், அதனடிப்படையில் தடைகள் விதிக்கக்கூடாதெனவும் பாடசாலை அதிபர்களுக்கு சுற்றுநிருபம் அனுப்பிவைக்கும்படி ஆளுநர் மாகாண கல்விப் பணிப்பாளரை வேண்டிக்கொண்டார். என்றாலும் மாகாண கல்விப் பணிப்பாளர் பாடசாலைகளுக்கு உரிய பணிப்புரை வழங்காததால் கண்டி அந்தோனியார் மகளிர் கல்லூரியில் தொடர்ந்தும் அபாயாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபாயாவுக்கான தடையை கல்லூரியின் அதிபரே பழைய மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மூலம் அமுல்படுத்தி வருவதாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஆசிரியைகள் தெரிவிக்கின்றனர்.
அபாயா அணிந்து கல்லூரிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள 7 முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் கண்டி மாகாண கல்விக் காரியாலயத்தில் இன்று முதல் கையொப்பமிடுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் பணிப்புரை வழங்கியுள்ளதாக கண்டி பிரஜைகள் முன்னணியின் செயலாளர் ரேணுகா மல்லியகொட ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
அபாயா அணிந்து செல்லும் முஸ்லிம் ஆசிரியைகளுக்குச் சார்பாக கண்டி பிரஜைகள் முன்னணி செயற்படுவதாலும், அவர்களுக்கு ஆதரவாக கலந்துரையாடல்களையும் நடத்துவதால் பேராதனையிலுள்ள அவரது வீட்டுக்கு இனந்தெரியாதோர் கல் எறிந்துள்ளார்கள்.
கண்டி பிரஜைகள் முன்னணியின் செயலாளர் ரேணுகா மல்லியகொட இது தொடர்பில் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
-Vidivelli