ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக இஸ்லாமிய பீதி தொடர்பாக பல கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னணி ஜேர்மன் -– துருக்கி அரசியல்வாதியொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கடிதங்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் அவமதிக்கும் விதத்திலானதும் அச்சுறுத்தும் விதத்திலானதுமான குறியீடுகளும் காணப்பட்டதாக குடியேற்றத்திற்கு ஆதரவான புத்தாக்கம் மற்றும் நீதிக்கான கூட்டமைப்பின் தலைவரான ஹாலுக் இத்ரீஸ் தெரிவித்தார்.
அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களுள் ஒன்றில் நாம் எமது எல்லைகளைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடு ஜேர்மனியர்களுக்கு மட்டுமானது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்த அவர் புதிய நாஸி வன்முறைகள் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளமையினால் இந்த அச்சுறுத்தலை நாம் மிகப் பாரதூரமான விடயமாகப் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
எனினும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் எம்மை உற்சாகமிழக்கச் செய்ய மாட்டாது. எமது அரசியல் போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த குழுவினரால் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறிய கட்சியே புத்தாக்கம் மற்றும் நீதிக்கான கூட்டமைப்பாகும். அதன் முன்னணி வேட்பாளராக இத்ரிஸ் காணப்படுகின்றார்.
ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் முதன் முறையாக ஆசனமொன்றைக் கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இக் கட்சி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli