இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு செல்ல முடியாத நிலை இருந்தால் அறிவிக்குக
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டு தங்கள் ஹஜ் பயணத்தை ஏற்கனவே உறுதிசெய்துள்ள ஹஜ் யாத்திரிகர்கள் அண்மையில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்டு அல்லது வேறு காரணங்களின் நிமித்தம் பயணத்தை மேற்கொள்ளாத நிலைமை உருவாகியிருந்தால் அவ்வாறானவர்கள் உடனடியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கும்படி வேண்டப்பட்டுள்ளனர். இவ்வருட ஹஜ் பயணத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஹஜ் பயணத்தை ஏதோ காரணங்களின் நிமித்தம் மேற்கொள்ள முடியாமலிருக்கும் ஹஜ் பயணிகள் எழுத்து மூலம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அறிவித்தாலே அவர்கள் அடுத்த வருட ஹஜ் கடமைக்குள் உள்வாங்கப்படுவார்கள் என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
மேலும் ஹஜ் கடமை மேற்கொள்ளவுள்ள ஹஜ் பயணிகள் பதிவுக் கட்டணமாக தலா 25 ஆயிரம் ரூபா முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குச் செலுத்தி பற்றுச்சீட்டுகளும் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
எனவே, ஹஜ் பயணிகள் தாம் பயணிக்கும் ஹஜ் முகவர் நிலையங்களுக்கு ஹஜ் கட்டணம் செலுத்தும்போது குறித்த கட்டணத்தொகையில் 25 ஆயிரம் ரூபாவை கழித்துவிட்டு வழங்குமாறு கோரப்படுகிறார்கள். ஹஜ் விண்ணப்பதாரிகளால் செலுத்தப்பட்டுள்ள பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபா ஹஜ் முகவர்களுக்கு திணைக்களத்தினால் கையளிக்கப்படும் என்றார்.
-Vidivelli