தமிழில்: எம்.ஏ.எம். அஹ்ஸன்
பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் யெமன் போன்ற நாடுகளில் இடம்பெறும் வன்முறைகள் காரணமாக அங்கிருந்து இலங்கைக்குத் தப்பிவந்த டசின் கணக்கான அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்போது மூன்று வாரங்களுக்கும் மேலாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தனிமைப்படுத்தப்பட்டு வேதனையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாகவே இவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.
சாதாரண மக்களான இந்த அகதிகளும் புகலிட கோரிக்கையாளர்களும் கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். ஆயிரக்கணக்கான மைல் தூரம் கொண்ட பாலைவனம் மற்றும் கடல் கடந்து வந்த அவர்களுடைய பயணம் சாதாரணமானது அல்ல. பல அகதிகள் தத்தமது நாடுகளில் உடைமைகளை விட்டுவிட்டு தப்பிவந்த கொடிய அனுபவங்களைக் கொண்டுள்ளனர். தமது குடும்ப உறுப்பினர்களையும் துறந்து தற்போது அமைதி வாழ்வைத்தேடி அலைகிறார்கள். இன்று தமக்கென்று தற்காலிகமாகப் பெற்றிருந்த இடங்களையும் இழந்து விட்டு இன்னொரு முகாமுக்காகக் காத்திருக்கிறார்கள்.
நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய, சென் செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுடைய உடல்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற ஏப்ரல் 22 ஆம் திகதி , ஐக்கிய நாடுகள் அகதி முகவரகத்தின் மேற்பார்வையின் கீழ் அப் பகுதியில் தங்கியிருந்த அகதிகளை ஒரு குழு அங்கிருந்து வெளியேறுமாறு வலுக்கட்டாயமாகப் பணித்தது. பெரும்பாலான அகதிகள் சிறுபான்மை அகமதியா பிரிவையும் ஷியா முஸ்லிம் பிரிவையும் கிறிஸ்தவ சமயத்தையும் சேர்ந்தவர்களாவர். தற்போது அவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய கராஜ் உட்பட பல்வேறு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய கராஜில் 158 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அத்தனை பேருக்கும் பாவிக்க அங்கு இருப்பது ஒரே ஒரு மலசல கூடம்தான். மேலும் நீர்கொழும்பு பள்ளிவாசல் ஒன்றில் 296 பேரும் பஸ்யாலவில் 609 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 325 பேர் சிறார்களாவர்.
அகதிகளுடைய நெருக்கடி ஒரு பார்வை
உலகில் கடந்த 10 வருட காலத்திலேயே அதிகளவான மக்கள் அகதிகளாக மாறியிருக்கிறார்கள். இதற்கமைய இறுதியாக எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் படி 68.5 மில்லியன் மக்கள் உலகளவில் அகதிகளாக உள்ளார்கள்.
அகதிகளுக்கான ஐ.நா. முகவரகத்தின் கணிப்பின்படி 2015 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மாத்திரம் 5.2 மில்லியன் மக்கள் புதிதாக இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அத்துடன் 20.2 மில்லியன் மக்கள் அகதிகளாகவுள்ளதுடன் 3.2 மில்லியன் பேர் புகலிடக் கோரிக்கையாளர்களாகவும் பதிவாகியுள்ளார்கள்.
என்னவாக இருந்த போதிலும் இலங்கையானது அகதிகள் மற்றும் புகலிட கோரிக்கையாளர்களை மனமுவந்து ஏற்குமளவு பெரிய பிரதேசம் அல்ல. இங்கே ஏற்கனவே பல அகதிகள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் உயிர்வாழ்கிறார்கள். ஐ.நா அறிக்கையின் படி இலங்கையில் தற்போது 844 வெளிநாட்டு அகதிகளும் 826 வெளிநாட்டு புகலிட கோரிக்கையாளர்களும் வாழ்ந்து வருகின்றார்கள்.
சட்ட ரீதியாக இலங்கைக்கு பொறுப்பேற்க முடியாத நிலை
ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் 1951 அல்லது 1967 ஆகிய அகதிகள் தொடர்பான சட்ட நெறிமுறைகளில் இலங்கை கைச்சாத்திடாததால் சட்டரீதியாக அகதிகளை இலங்கை பொறுப்பேற்க முடியாத நிலையில் உள்ளதாக அகதிகள் சார்பான சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் 2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்துடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டது. அரசாங்கத்துடன் ஐக்கிய நாடுகள் அகதி முகவரகம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி குறித்த அகதிகள் மற்றும் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வேறு நாடுகளில் தஞ்சம் வழங்கும்வரை ஒன்றரை வருடங்கள் முதல் 2 வருட காலப் பகுதியில் நாட்டில் வசிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு அரசாங்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
என்னவாக இருந்த போதிலும், இலங்கை ஐ.நா.விடமிருந்து பாரியளவில் உதவிகளைப் பெறும் நாடு என்ற வகையில், ஏனைய நாடுகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டிய தார்மீகக் கடப்பாடு இருக்கிறது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் புகலிடம் கோருவோர்
இந்த அகதிகள் சட்ட ரீதியான அடையாளம் எதுவும் இன்றி இலங்கையில் தங்கியிருக்கும் நிலையில் அவர்களால் ஒரு தொழிலைக் கூட பெற்றுக்கொள்ள முடியாது. அவர்களுள் ‘அகதி’ அந்தஸ்த்தை பெற்றவர்கள் மாத்திரம் ஐக்கிய நாடுகள் அகதி முகவரகத்தில் இருந்து குறிப்பிட்டளவு தொகையை தமது அடிப்படைத் தேவைகளுக்காக மாதாந்தம் பெறுவர். இருந்தபோதிலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் துணையின்றி புகலிடக் கோரிக்கையாளர்களால் தமது தேவைகளைப் பூரணமாக நிறைவேற்றிக்கொள்ள முடியாது.
அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களின் பிள்ளைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கல்வியே வழங்கப்படுகிறது. தனியார் பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்பவேண்டும் என்றால் அதற்கான பணம் அவர்களிடம் கிடையாது. என்.ஜி.ஓ. வின் நிதியுதவி அல்லது நன்கொடை கிடைத்தால் மாத்திரமே அவர்களால் தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கமுடியும். தொழில் ஒன்றைப் பெறுவதாக இருந்தாலும் இருப்புக்களின் அடிப்படையில் அல்லது தம்மிடம் இருப்பதை விற்றுத்தான் பெறவேண்டும். அகதிகள் மீண்டும் அகதிகளாகின்றனர்.
இடம்பெயர்ந்துள்ள அகதிகளை தாக்குதல்களின் பாதிப்பில் இருந்து பாதுகாத்து பிறிதொரு இடத்தில் தங்கவைக்க ஐக்கிய நாடுகள் முகவரகம் முயற்சி செய்து வரும் அதேவேளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்ற சர்வதேச உதவிகளை நாடியுள்ளார்.
கடந்த வாரம் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளை அழைத்துப் பேசிய ஜனாதிபதி, நாட்டில் நிலவுகின்ற தற்போதைய நிலைமையினால் குறித்த அகதிகளுக்கும் புகலிட கோரிக்கையாளர்களுக்கும் தன்னால் பாதுகாப்பு வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.
“அவர்கள் பல வருடங்களாக இங்கு இருக்கிறார்கள். ஐ.நா அவர்களது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. அவர்களுடைய தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ள ஐ.நா அவர்களுடைய பாதுகாப்பு பற்றி எங்களுக்குத் தகவல் தந்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலையில் பாதுகாப்புக் காரணங்களால் அந்த மக்கள் தொடர்பில் எங்களால் கவனம் செலுத்த முடியாதுள்ளது” என ஜனாதிபதி தெரிவித்ததாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.
சுமார் 250 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுகொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கோபமடைந்த மக்கள், தென்னாசியாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களை அச்சுறுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் 21, ஏப்ரல் அன்றே தெரிவித்திருந்தமையானது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
இலங்கையில் உள்ள புகலிட கோரிக்கையாளர்களின் கதைகளையே இனி நாம் பார்க்கப்போகிறோம். ஒவ்வொருவருடைய கதையும் வித்தியாசமாக உள்ள அதேவேளை அவர்களுடைய வேதனைகள் அதில் அடங்கியுள்ளன. தாம் அடைந்த அச்சுறுத்தல்களை தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக மாத்திரம் பகிரவில்லை. சிதைந்து போன தமது உயிரை மீண்டும் நிலை நிறுத்த விடா முயற்சியுடன் பகிர்கிறார்கள்.
ஐதா பனாஹி–ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானின் பதற்ற நிலைமையின் போது அவரது பெற்றோர் அங்கிருந்து தப்பி வரும் போது ஐதா பனாஹி அவரது தாயுடைய வயிற்றில் இருந்தார். அவருடைய தாய் கருவுற்ற நிலையிலேயே அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.
“நான் ஈரானில் பிறந்தேன். இப்போது 9 வருடங்களாக எனது பெற்றோர் புகலிடம் கோருகின்றார்கள். ஈரான் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் பாடசாலைக்கு செல்வதில்லை ஏன் என்றால் நாங்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. ஈரானை விட்டு வெளியேறும் போது எனக்கு 9 வயது தான் இருக்கும். ஈரானில் இறுதியாக என்னை எனது தாய் எங்களது இடத்தில் இருந்து எனது பாட்டியுடைய இடத்துக்கு ஒரேயொரு பையுடன் கொண்டுவந்து விட்டதுதான் எனக்கு நினைவில் இருக்கிறது. எங்களது பல உடைமைகளை அங்குவிட்டுவிட்டு வந்தோம். ஈரானில் இருந்து மங்கிய எதிர்பார்ப்புகளுடன் தான் 2015 இல் ஸ்ரீலங்காவுக்கு வந்தோம். நான் இங்கு வருவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா என்ற நாடு பற்றி கேள்விப்பட்டதேயில்லை. 4 வருடங்களாக இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் வாழ்கிறோம். எனக்கு இங்கு பல நண்பர்கள் கூட கிடைத்திருக்கிறார்கள். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பலர் இறந்து போனதை கேள்விப்பட்டு நானும் அதிர்ச்சியடைந்தேன். பயங்கரவாதத்திற்கு பயந்த நிலைமையில் நாங்கள் இருக்கிறோம். என்ன நடக்கப் போகிறது என்பதை என்னால் ஓரளவு புரிந்து கொள்ளமுடிகிறது.
இப்போது இரண்டு வாரங்களுக்கு மேலாக நாங்கள் இந்தப் பொலிஸ் நிலையத்தின் கராஜில் இருக்கிறோம். நாங்கள் இங்கேயே சாப்பிட்டுவிட்டு இங்கேயே தூங்குகிறோம். நாங்கள் பொலிஸ் நிலைய குளியலறை மற்றும் மலசல கூடங்களைத் தான் பயன்படுத்துகின்றோம். இந்த கஷ்டமான நிலையைப் பார்க்கும்போது நாங்கள் இவ்வாறு நடத்தப்படுவதற்கு என்ன பிழை செய்தோம் என்று கேட்கத்தோன்றுகிறது. அகதிகளாகிய எங்களுக்கு எதையாவது ஆசைப்பட மட்டும்தான் முடியும். ஒருபோதும் அதை அடைய முடியாது.
எனக்கு என்னுடைய எதிர்காலம் பற்றி நிறைய கனவுகள் உள்ளன. ஆனால் எனது வாழ்நாள் முழுவதும் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணம் செய்வதிலேயே கடந்து விடுமோ என பயமாக இருக்கிறது.
னென்றால் எந்த ஒரு நாடும் எங்களை வரவேற்பதில்லை. எனக்கு எனது மக்களை அபாயத்தில் இருந்து பாதுகாக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் நாட்டைப் பெருமைப்படுத்தும் ஒருவராக இருக்கவேண்டும். நான் எனது வாழ்க்கையை மீளமைத்து எனது கனவுகளை மெய்ப்பிக்க வேண்டும்” என ஐதா தெரிவித்தார்.
தனது பயணத்தைப் பற்றி ஐதா பேசும் போது மிகவும் கஷ்டப்பட்டார். தனது முகத்தை பலமுறை துடைத்த படியே பெருமூச்சு விட்டார். இப்போது தனது கனவுகளிலும் எதிர்பார்ப்புகளிலும் நிச்சயமற்ற தன்மை உருவாகி விட்டதாக அவர் தெரிவித்தார்.
ராஜா கம்ரன் – காஷ்மீர்
ஒரு அஹமதியாவாக தனது சமூகத்துக்குத் தொண்டுசெய்த ஒரு இளைஞர் அணியின் தலைவரான ராஜா கம்ரன் என்பவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த காரணத்தால் காஷ்மீர் – அஸாட்டில் இருந்து 22.01.2018 அன்று தனது உடைமைகளை விட்டு தப்பிவந்தார். திரும்பிச்செல்லும் வசதி கொண்ட 30 நாள் சுற்றுலா வீஸாவில் தனது மனைவியுடன் வந்தார். அதிலிருந்து இப்போதுவரை புகலிட கோரிக்கை விடுத்து வருகிறார்.
“நான் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்காக பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டேன். நான் ஜிஹாதை எதிர்ப்பதால் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத அமைப்புகளினால் அச்சுறுத்தப்பட்டேன். எனது வாழ்க்கையில் கடந்த 3 வருடங்களும் பல கஷ்டங்களை அனுபவித்தேன். ஏனென்றால் அதிகாரிகளால் பலவாறு துன்புறுத்தப்பட்டேன். அவர்களிடம் இருந்து தப்பி வருவதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை. எங்களது சமூகத்தில் ஏற்கனவே பல அகமதிகள் மிருகத்தனமாக துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுமுள்ளனர். இதனால் எனது மனைவி அவர்களிடம் உயிர்பிச்சை கேட்டு கெஞ்சினார். துன்புறுத்தல்களில் இருந்து எனது குடும்பத்தையும் என்னுடைய மனைவியையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இலங்கையில் “அகதி” அந்தஸ்த்து பெற முயல்கிறோம்.
ஏப்ரல் 21 வரை நீர்கொழும்பில் ஒரு வாடகை வீட்டில் நான் எனது மனைவி மற்றும் எங்களது 4 வயது மகனும் மிக சந்தோஷமாக இருந்தோம். பின்னர் எங்களை அந்த வீட்டை விட்டு வெளியேற வெறும் 20 நிமிடம் கால அவகாசத்தை தந்தவர்கள் கற்களை வீசி எங்களைத் தாக்கினார்கள். இலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. அதற்காக எல்லா முஸ்லிம்களும் ஏன் துன்பப்பட வேண்டும்” என ராஜா கேட்கிறார்.
இலங்கையில் தங்கியிருக்கும் அகதிகள் அவர்களுடைய தேவைகளுக்காக வேண்டி குறிப்பிட்டளவு தொகையை ஐ.நா அகதி முகவரகத்திடம் இருந்து பெறுகிறார்கள். ஆனால் ராஜாவைப் போன்ற புகலிட கோரிக்கையாளர்கள் ஐ.நா விடம் இருந்து எந்தவிதமான நிதியையும் பெறுவதில்லை. அவர்கள் நன்கொடையாளர்களின் நன்கொடைகளை வைத்தே தம்மைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள்.
ஸாதியா பாகிர்-– பாகிஸ்தான்
ஜனவரி 2018 இல் அவசரமாக ஸாதியாவுக்கு பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. முஸ்லிம் பெண்ணான ஸாதியா பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவரை காதலித்ததன் விளைவால் அவரது குடும்பத்தினர் ஆத்திரமுற்றனர்.
“என்னுடைய நாட்டை விட்டு வெளியேறுவது எனது தெரிவல்ல. எனது பிள்ளைகள் பாதுகாப்பான நாட்டில் வாழ வேண்டும். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைவதோடு எங்களுடைய உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது தேவை. எனக்கு இங்கு குழந்தை பிறந்த போது ஐ.நா விடம் இருந்து 6 மாதங்களுக்கு தலா 5000 ரூபாய் பெற்றேன். இந்தத் தொகை இலங்கையில் உணவுக்கும் இருப்பிடத்துக்குமே போதாது. புகலிட கோரிக்கையாளர்களான எங்களுக்கு ஐ.நா விடம் இருந்து நிதி எதுவும் கிடைப்பதில்லை. இங்கு எங்களை நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைமைதான் உள்ளது. ஒரு சில சமயக்குழுக்கள் மற்றும் என்.ஜி.ஓ என்பன எங்களுக்கு உதவுகின்றன. ஆனால் எங்களுக்கு அதிலும் குறைபாடு உள்ளது.
எங்களுக்கு சட்ட ரீதியாக தொழில் ஒன்றைப் பெறமுடியாதுள்ளது. கட்டணம் செலுத்தியே அறைகளில் தங்கவேண்டும். உணவைச் சுயமாகப் பெற்றுக் கொள்ளவோ பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பவோ எங்களால் முடியாது” என ஸாதியா தெரிவிக்கிறார்.
அகதிகள் யாரும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் இன்று பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளார்கள். கோபம் மற்றும் உணர்வு ரீதியாக பாதிப்படைந்த குழுவொன்று அந்த மக்கள் மீது முறைகேடாக நடந்துள்ளது. ஆனால் நீர்கொழும்பில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த செயற்பாட்டை அனுமதிக்க வில்லை. இது போன்ற வன்முறைத் தாக்குதல்களை இலங்கையர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.
உலகின் பல்வேறு நாடுகளில் இலங்கையைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வாழ்கின்றனர். என்னவாக இருந்த போதும் இலங்கை பல சமூக, பொருளாதார, அரசியல் இன்னல்களைச் சந்தித்து வரும் நாடுதான். அண்மையில் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைத் தொடர்ந்து இலங்கையர்களுடைய பாதுகாப்பே மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நன்றி: டெய்லி மிரர்.