நியாயமற்ற கைதுகள் குறித்து முஸ்லிம் பிரதிநிதிகள் இன்று பிரதமருடன் பேச்சு
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ள நியாயமற்ற கைதுகள், அபாயாவுக்கான எதிர்ப்புகள் மற்றும் இனவாதத்தைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்கள் என்பனவற்றை தடுத்து நிறுத்தக்கோரி இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் அமைச்சர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவுள்ளனர்.
இச்சந்திப்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புப் பிரிவின் உயரதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிறு சிறு குற்றங்களுக்காக நியாயமற்ற கைதுகளினால் முஸ்லிம்கள் பல அசௌகரியங்களுக்குள்ளாகி பீதியில் இருக்கிறார்கள். தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையொன்றினை அணிந்திருந்த குற்றச்சாட்டில் முஸ்லிம்பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மஹியங்கனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அவர் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் அடிப்படைவாதிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடலாம் என்பதை பிரதமரிடமும் பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரிகளிடமும் விளக்கவுள்ளோம் என அஞ்சல், அஞ்சல் சேவை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
பிரதமருடனான சந்திப்பின் பின்னர் விரைவில் ஜனாதிபதியையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
vidivelli