உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது அநாவசியமாக இடம்பெற்றுள்ள சந்தேகத்தின் பேரிலான கைதுகள் தொடர்பில் முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை ஒன்றாகச் சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளனர். அவ்வாறான கைதுகள் தொடர்பான பட்டியலொன்று ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கையளிக்கப்படவுள்ளன. சிறிய காரணங்களுக்காக இடம்பெற்றுள்ள அநாவசிய கைதுகள் தொடர்பான முறைப்பாடுகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலுக்கும் கிடைத்துள்ளன. கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரிலான அநாவசிய கைதுகளின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் தலைமையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி மற்றும் பாசில் பாரூக், மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், மௌலவி ரிழா, முர்சித் முழப்பர் ஆகியோரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் தலைமையிலான பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
சிறு சிறு சம்பவங்களுக்காக அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரிலே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாத சம்பவத்துடன் எந்தவகையிலும் தொடர்புபடாதவர்கள். இவர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்களினதும் அரசியல் தலைவர்களினதும் கடமையாகும் என கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது.
வடமேல் மாகாணம் உட்பட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. முதற்கட்டமாக வடமேல் மாகாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 1500 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளின் கோரிக்கைகளையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்பு உயரதிகாரிகளை நாளை செவ்வாய்க்கிழமை சந்தித்து அநாவசிய கைதுகள் தொடர்பில் கலந்துரையா டவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
-Vidivelli