மாவனெல்லை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு தேரரால் அச்சுறுத்தல்
நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கபீர் கடிதம்
அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து மக்களின் மனநிலையினை சாதக மாகக்கொண்டு சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் சமயத்தினை அடிப்படையாகக் கொண்ட சில குழுக்கள் தங்கள் நலனுக்காக வன்செயல்களைத் தூண்டும் செயற் பாடுகளில் இறங்கியுள்ளன. இதற்காக சமூக வலைத்தளங்கள் மற்றும் வழிகளைக் கையாண்டு தகவல்களைப் பரப்புகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் மாவனெல்லை நகர் மற்றும் சூழவுள்ள பகுதிகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி யுள்ளது. எனவே மாவனெல்லை நகரிலும் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வேண்டிக்கொள்கிறேன் என நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் கபீர் ஹாசிம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘எனது தொகுதியான மாவனெல்லையில் பல்வேறுபட்ட இன மற்றும் மத நம்பிக்கை கொண்ட மக்கள் சமாதானமாக வாழ்கிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்த தெவனகல ஸ்ரீ ரஜமகா விகாரையின் அதிபதி மெதிரிகிரியே புன்னியசார தேரர் முகநூல் பதிவினூடாக சமூக வலைத்தளத்தில் மே மாதம் 19 ஆம் திகதி மாவனெல்லையில் பாரியளவில் ஒன்று கூடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பாரியளவிலான ஒன்றுகூடல் பிரச்சினைகளை உருவாக்கலாம்.
மதகுருவினால் பரப்பப்பட்டு வரும் இவ்வாறான தகவல்கள் வெறுப்பு உணர்வினைத் தூண்டும் என்பது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே கேகாலை மாவட்டத்திலுள்ள மாவனெல்லை நகர் மற்றும் சூழவுள்ள பகுதிகளுக்கு இராணுவ பாதுகாப்பினை வழங்கி வன்செயல்கள் நிகழாவண்ணம் தடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli