முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் பிரதேச அரசியல்வாதிகள்
விசாரணைகளில் அம்பலம்; சுற்றித்திரிந்த 3 டிபண்டர்கள் குறித்தும் ஆராய்வு
வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து கடந்தவாரம் இடம்பெற்ற வன்முறைகளின் போது, குருணாகல் மாவட்டத்தில் சுற்றித் திரிந்ததாக கூறப்படும் சந்தேகத்துக்கு இடமான மூன்று டிபண்டர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைக் குழுக்களின் விசாரணைகளிலேயே இந்த டிபண்டர் வண்டிகள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையிலேயே அது தொடர்பில் விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந் நிலையில் இந்த வன்முறைகள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில், வன்முறையின் பின்னால் அரசியல் செல்வாக்கு உள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பிரதேச அரசியல்வாதிகள்வாதிகள் பலர் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் சில வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இந்த வன்முறைகள் குறித்து பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு தெற்குக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சில்வாவின் கீழ் இடம்பெறும் விசாரணைகளில், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் நேற்று முன் தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஒல்கொட் மாவத்தையில் உள்ள கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக கட்டிடத் தொகுதியில் உள்ள கொழும்பு தெற்கு பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது மூன்றரை மணி நேர வாக்கு மூலமொன்று தயாசிறி ஜயசேகரவினால் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் உன்மைத்தன்மை குறித்து உறுதி செய்ய சிறப்பு பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்கள் உறுதி செய்தன.
இதனிடையே வன்முறைகள் தொடர்பில் சிறப்பு பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவிடம் சி.ஐ.டி. தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. நாமல் குமாரவுக்கும் முன்னாள் உளவுத் துறை பிரதானி ஒருவருக்கும் இடையிலான சந்திப்பொன்றினை மையப்படுத்தியும், வன்முறைகள் இடம்பெற்ற சமயம் நாமல் குமார அவ்விடத்துக்கு சென்றமையை மையப்படுத்தியும் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும் தற்போது வன்முறை சூழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும் தொடர்ந்தும் வட மேல் மாகாணத்தில் பொலிஸ், முப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாராளுமன்ற உருப்பினருடன், ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தில் இருந்து அவரது வாகனத்தில் சந்தேக நபர்களை அழைத்துக்கொண்டு பிங்கிரிய பொலிஸ் நிலையத்துக்கு சென்றதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தொடர்பிலும் சிறப்பு பொலிஸ் குழு அவதானம் செலுத்தியுள்ளது.
விக்ரமசிங்க எனப்படும் குறித்த பொலிஸ் பரிசோதகரை விசாரிக்கவும், அப்போது பிராந்தியத்தின் உயர் அதிகாரிகளாக செயற்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சர், பொலிஸ் அத்தியட்சர் ஆகியோரின் விளக்கங்களைப் பெறவும் விசாரணையாளர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli