- எம்.எம்.ஏ. ஸமட்
ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற நாள் முதல் இத்தாக்குதல்களுக்கெதிராக இந்நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களிடம் மாத்திரமின்றி இந்நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்ட வண்ணமுள்ளனர். அத்துடன், தாக்குதல்களில் காயப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனப் பிரார்த்தித்தவாறும், அம்மக்களின் துயரங்களிலும், துன்பங்களிலும் பங்கு கொண்டவர்களாகவும் அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தவாறும் இத்தாக்குதலுடன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தொடர்புபடுத்த வேண்டாமெனக் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், சில தமிழ், சிங்கள அரசியல் தலைவர்கள் உட்பட மனித நேயத்தையும், மனிதாபிமானத்தையும் முதன்மைப்படுத்தி இந்நாட்டை நேசிக்கின்றவர்கள் இத்தாக்குதல்களை காரணமாகக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களை நோக்கி உங்களது விரல்களை நீட்ட வேண்டாம், அவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டாம், பயங்கரவாதத்திற்குள் அவர்களைத் தள்ள வேண்டாமென அவரவர் சமூகங்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து வந்த போதிலும், அவ்வேண்டுகோள்களை கவனத்திற்கொள்ளாது, ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற மூன்று வாரங்களின் பின்னர் பாரிய வன்முறைகள் வடமேல் மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.
நீர்கொழும்பு, சிலாபம் எனத் தொடங்கிய வன்முறைகள் குருநாகல் மாவட்டத்தின் பல முஸ்லிம் பிரதேசங்களிலும் கோரத் தாண்டவமாடியிருப்பதை ஏற்பட்டுள்ள சேதங்களைக் கொண்டு கணிக்க முடிகிறது. இந்த வன்முறைத் தாக்குதல்களுக்கு பள்ளிவாசல்கள், கடைகள், வீடுகள், வாகனங்கள் இலக்காக்கப்பட்டு சொத்தழிவுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஏப்ரல் 21 தாக்குதல்கள் மேற்கொண்டவர்கள், அத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குரிய தண்டனைகளை வழங்குவதற்கு பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இதனை பாதுகாப்புத் தரப்பினர் பல இடங்களில் கூறி வருகின்றனர். “பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதே பொலிசாரின் கடமையாகும். தீவிரவாதச் சக்தியை அழிப்பதற்கு உதவிய முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன்” என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர அண்மையில் கல்முனை பொலிஸ் தலைமையகம் ஏற்பாடு செய்திருந்த பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் ஒன்றுகூடலின்போது தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பொலிசாருடனும், பாதுகாப்புப் படையினருடனும் எந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்பது புலனாகிறது.
இச்சூழலில் முஸ்லிம் பிரதேசங்களில் அமைதியைச் சீர்குலைத்து சகவாழ்வைச் சகதிக்குள் தள்ளுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைத்தாக்குதல்கள் முஸ்லிம்களுக்கு பல அழிவுகளை ஏற்படுத்தியிருத்தாலும், இத்தாக்குதல் சம்பவங்கள் தேசிய நல்லிணக்கத்திற்கும், சமூக ஒருமைப்பாட்டுக்கும், சகவாழ்வுக்கும், சமாதானத்திற்கும், அமைதிக்கும் சாவுமணி அடித்திருக்கிறது என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறது. ஏனெனில், அப்பிரதேசங்களில் முஸ்லிம்கள் ஏனைய இன மக்களுடன் மிக அந்நியோன்யமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சில பிரதேசங்களில் முஸ்லிம்களோடு இணைந்து சிங்கள மக்களும் பிரதேசங்களின் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு நல்ல உதாரணமாகும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல்களும் தொடர்பற்ற முஸ்லிம்களும்
ஏப்ரல் 21 தாக்குதல் இலங்கையின் பொருளாதாரத்தை குறிப்பாக சுற்றுலாத்துறையை வெகுவாகப் பாதித்திருக்கிறது. பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை மாத்திரமின்றி மக்களின் இயல்பு வாழ்வையும் ஸ்தம்பிதமடையச்செய்திருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுமையாக வழமைக்குத் திரும்பச் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வரும் சந்தர்ப்பத்தில் ஆட்சியைக் கைப்பற்றுதல், ஆட்சியை மாற்றுதல், ஆட்சியைத் தக்க வைத்தல் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தேசிய அரசியல் அரங்கில் அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்படுகின்ற எதிர்மறைக் கருத்துக்கள் மக்களை அச்சத்திலிருந்து அகல முடியாத நிலைக்குத் தள்ளியிருப்பதைக் காண முடிகிறது.
கடந்த 13ஆம் திகதி தாக்குதல்கள் நடைபெறும் என்று அரசியல்வாதிகள் குறிப்பிட்டிருந்தபோதிலும் அதனை பாதுகாப்பு தரப்பு கவனத்தில் எடுத்துக்கொண்டு, முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அத்தினத்தில் மேற்கொண்டிருந்ததைக் காணக் கூடியதாகவிருந்தது.
இந்நிலையில்தான், முஸ்லிம் பிரதேசங்கள் இலக்குவைக்கப்பட்டு வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்றன. அப்பாவி முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டு அவர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலையை வன்முறையாளர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இவர்களுக்கெதிரான சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. காலம் காலமாக ஏனைய சமூகத்தோடு சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களின் சகவாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ள ஏப்ரல் 21 தாக்குதல்களும், அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைத் தாக்குதல்களும் நாட்டில் மேலும் அமைதியின்மையைத் தோற்றுவித்திருக்கிறது.
இந்த வன்முறையாளர்களுக்கு எதிராக சட்டம் அதன் கடமையை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் சகல தரப்புக்களிலுமிருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய வன்முறைகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மக்கள் அமைதி காக்க வேண்டும், நிதானத்துடன் செயற்பட வேண்டுமென்ற வேண்டுதல்களும் மக்களிடம் சர்வமதத் தலைவர்கள் உட்பட நாட்டுப்பற்றுள்ள பலரினால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஏறக்குறைய மூவாயிரம் வருட வரலாற்றைக் கொண்ட இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறும் பழமை வாய்ந்தது. இலங்கையின் ஏறக்குறைய 2 கோடி 20 இலட்சம் மக்கள் தொகையில் 9.7 வீதம் முஸ்லிம்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வாழும் முஸ்லிம்கள் அன்றும் இன்றும் மண்ணுக்கு விசுவாசமாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நாட்டின் அத்தனை வளர்ச்சியிலும் முஸ்லிம்கள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இம்மண்ணுக்காக உயிர்த்தியாகமும் புரிந்திருக்கிறார்கள். அவ்வாறு தேசப்பற்றோடு வாழும் முஸ்லிம்களை வந்தேறு குடிகள் எனக் கொச்சைப்படுத்துகிறார்கள். இந்நாட்டில் வாழ முடிந்தால் வாழுங்கள் இல்லையேல் இந்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என அறைகூவல் விடுக்கிறார்கள். இவ்வாறு அறைகூவல் விடுகின்றவர்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப்பற்றியும் அவர்களால் இந்நாட்டுக்காக புரியப்பட்ட தியாகங்கள் குறித்தும் நிதானத்துடன் தெளிவுபடுத்துவது அவசியமாகும். அதற்கான வழிகளை ஆரம்பிப்பது சகவாழ்வை நேசிக்கின்ற பெரும்பான்மை மக்களிடம் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான பதிவுகளை ஏற்படுத்த வேண்டும்.
இந்நாடு எல்லோருக்கும் சொந்தம் என்ற மனப்பாங்கு எல்லோரிட
முமில்லை. இந்நாட்டில் பெரும்பான்மையாக பௌத்த சிங்கள மக்களே வாழ்கின்றனர் என்பது புள்ளிவிபரங்களின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதற்காக ஏனைய இனத்தவர்கள் வந்தேறு குடிகளல்ல. அந்நியர்களிடமிருந்து இந்நாட்டை மீட்பதற்காக சிங்களத் தலைவர்களுடன் இணைந்து தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களின் தலைவர்களும் போராடியிருக்கிறார்கள்.
அதனால், இந்நாட்டுப் பிரஜைகள் என எவரெவரெல்லாம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்நாட்டின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனை உரிமைகளையும் பெற்று சுதந்திரமாகவும், நிம்மதியாகவும், ஏனைய சமூகங்களுடன் சமூக ஒருமைப்பாட்டுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கு வழிவிடப்பட வேண்டியது அவசியமாகும்.
இருப்பினும், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கும், சகவாழ்வு நிலைபெறுவதற்கும் இந்நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனவாதம் தடைக்கல்லாக இருந்து வருகிறது. இலங்கை சமூகங்களின் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து இலங்கையை இனவாத சகதிக்குள் புதைக்க எத்தனிக்கும் சக்திகள் அடையாளம் காணப்பட்டு அச்சக்திகளுக்கு எதிராக உடனடியாக சட்டநடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பென பல கோணங்களிலும் வலியுறுத்தப்பட்டுக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இதற்கேற்ப இனவன்முறைக்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் முக்கிய நபர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் பதிவிட வேண்டும்.
தெற்கில் ஆண்டாண்டு காலம் நல்லிணக்கத்துடன், சகவாழ்வுடனும் வாழும் சிங்கள. தமிழ், கிறிஸ்தவ – முஸ்லிம் மக்களின் சகவாழ்வைச் சீர்குலைத்து இனமுறுகலை ஏற்படுத்தும் கைங்கரியங்களை வங்குரோத்து அரசியல்வாதிகளும், அவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்ற சிலரும்; ஒன்றிணைந்து முன்னெடுத்திருப்பதை வரலாற்று நெடுகிலும் காணமுடிகிறது. இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை மதத் தலைவர்கள் தற்போது முன்வைத்து வருகின்றனர்.
தொடர் சம்பவங்களும் வாழ்வுரிமை மீதான பேரிடியும் முஸ்லிம்களின் வளர்ச்சி பேரினவாதத்தின் கழுகுக்கண்களை சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் தொட்டுக் குத்திக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சியை அழிப்பதே இத்தாக்குதல்களின் இலக்கு என்பதை 1915ஆம் ஆண்டு இடம்பெற்ற கம்பளைக் கலவரம் முதல் குருநகால் மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் அரங்கேற்றப்பட்டுள்ள வன்முறைகள் வரை நன்கு புலப்படுத்தியுள்ளன. ஏப்ரல் 21 தாக்குதல் இதற்கு மேலும் உரமூட்டியிருப்பதாகவே கருதப்படுகிறது. தொடர்ச்சியான தாக்குதல்கள் சம்பவங்கள் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், வாழ்வுரிமை மீதான பேரிடியாகவும் நோக்கப்படுகிறது.
ஒருவரும் எதிர்பாராத ஏப்ரல் 21 தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது வீண்பழிகளைச் சுமத்துவதற்கு காரணமாயிற்று என்றே கருதப்படுகிறது. முஸ்லிம்கள் குறித்தான நம்பிக்கையீனத்தையும், தப்பபிப்பிராயங்களையும் ஏனைய மக்கள் மத்தியில் பரப்புவதற்கும் இன வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கும் ஏதுவாக அமைந்து விட்டது. பிற மத மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பிரசாரங்கள் முஸ்லிம் மக்களை பொருளாதார ரீதியாக வெகுவாகப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வப்போது ஏற்படுகின்ற இன முறுகலின்போது முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்யக்கூடாது போன்ற பல பிரசாரங்கள் பிற சமூகத்தினருடனான முஸ்லிம் சகவாழ்வை வெகுவாகப் பாதித்திருக்கிறது. ஓர் உளவியல் தாக்குதல் கருவியாகக் கூட இந்தப் பிரசாரங்கள் மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களின் இத்தகைய பிரசாரங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம் சமூகத்திலிருந்து உருவான சிறு குழுவினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான கொடூரத் தாக்குதல்கள் முஸ்லிம்களை மிக மோசமான நிலைக்குத் தள்ளியிருப்பதுடன், ஏனை சமூகத்தினருடனான சகவாழ்வையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
இருப்பினும், ஏவிவிடப்பட்ட பிசாசு போன்றவர்கள் மேற்கொண்ட தாக்குதல்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிராக சட்டத்தைக் கையில் எடுத்து செயற்பட வன்முறையாளர்கள் முன்வந்திருக்கிறார்கள். எவரின் ஆசிர்வாதத்துடன் இவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்து அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகிறார்கள் என்ற கேள்விக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு நீதி பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பென வலியுறுத்தப்பட்டு வருவதையும் பதிவிட வேண்டியுள்ளது.
அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தும் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்த போதிலும், வன்முறையாளர்களினால் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள், வாகனங்கள் தாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கட்டமைப்புக் கூறுகள் அழித்தொழிக்கப்பட்டிருப்பது வாழ்வுரிமையில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே உணரப்படுகிறது.
சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக இனவாதத்தின் இன அழிப்பு நடவடிக்கையாக 1915இல் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமும் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஜுலைக் கலவரமும் வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. அவ்வாறானதொரு வரலாற்றுப் பதிவு இந்நாட்டில் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை இந்நாட்டை நேசிக்கின்ற பலர் எடுத்துரைத்து வருகின்றனர்.
அழிவுகள் பலவற்றை எதிர்கொள்ளச் செய்த இவ்விரு ஆண்டுகளிலும் இடம்பெற்ற இவ்வினக்கலவரங்கள் அக்காலங்களிலிருந்த அரச இயந்திரங்களின் ஆசிர்வாதங்க ளுடனேயே நடைபெற்றிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வா றானதொரு நிலைமை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளதுடன், இந் நிலைமை உருவாகாமல் நிதானத்திற்கு முதலிடம் வழங்கி செயற்படுவது சமகாலத்தில் ஒவ்வொரு முஸ்லிமை யும் சார்ந்தது. இந்நாட்டின் சட்டத்தின் மீது இறுதி வரை நம்பிக்கை வைத்து சட்டத்தினூடாக நமது இருப்பையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை முன்னெடுப்பது ஒவ்வொரு துறைசார்ந்தோரின் பொறுப்பாகவுள்ளது.
மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் சமூகம் முன்னெடுத்து வரும் சூழலில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயற்பட்டு சட்டத்தின் முன் குறித்த வன்முறையாளர்களை நிறுத்தவும், நீதியைப் பெற்றுக்கொள்ளவும், தீவிரவாதத்தை இந்த இலங்கை மண்ணிலிருந்து பூண்டோடு அழிக்கவும் வழங்கி வரும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் அரசாங்கத்திற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் வழங்கவும் முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.
அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூகத் தலைமைத் துவக் கோரிக்கைகளுக்கு கட்டுப்பட்டு, அவர்களின் வழிநடத்தல்களைப் பின்பற்றி, இந்நாட்களில் எவ்வாறு நமது பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று குர்ஆனும் நபி வழியும் வலியுறுத்தியி ருக்கிறதோ அவ்வழியை நிதானமாக மேற்கொண்டு நமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு புனித நோன்பையும் நோன்பு கால வணக்கங்களையும் அச்சமின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கு வல்ல இறைவன் நமக்கு பாதுகாப்பு அளிப்பானாக!
-Vidivelli