அமைதி, பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்
பொறுப்பு ஆளும், எதிர் தரப்பினரையும் சாருமென நான்கு மகாநாயக்கர்கள் கூட்டாக வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு தாக்குதலுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை இல்லாமல் செய்து, நாட்டுக்குள் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை நாட்ட வேண்டியது ஆளும் தரப்பினரதும் எதிர்த்தரப்பினரதும் பொறுப்பாகும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் தெரிவித்துள்ளன.
சில தினங்களாக நாட்டின் சில பிரதேசங்களில் மூண்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவும் , அமைச்சர் ஒருவர் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அல்ல என தெரிவித்திருப்பது தொடர்பாகவும் பீடங்களின் மகாநாயக்கர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்கிரிய பீடத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர், அமரபுர பீடத்து மாநாயக்கர் கொடுகொட தம்மாவாச தேரர் மற்றும் ஸ்ரீலங்கா இராமாண்ய பீடத்து மாநாயக்கர் நாபால பிரேமசிறி தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,
அரசியல் தலைவர்கள் நாட்டை பற்றி சிந்திக்காது அவர்களின் வாக்குகளை பெருக்கிக் கொள்ளும் நோக்கிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் விளைவுகளையே இன்று நாடு அனுபவிக்கின்றது. நாட்டுக்குள் அமைதியை ஏற்படுத்துவது ஆளும் கட்சியினதும், எதிர்க்கட்சியினதும் பொறுப்பாகும். ஆனால் இவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக அந்த பொறுப்பிலிருந்து மீறி செயற்படுகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையில் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் இது சிங்கள பௌத்தர்களின் நாடல்ல என குறிப்பிட்டிருப்பது வன்முறையை ஊக்குவிக்க கூடும். இந்நிலைமை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.
நாட்டின் மகாநாயக்க தேரர்கள் என்ற வகையில் நாங்கள் பல ஆலோசனைகளை முன்வைத்தாலும், அவற்றை பொருட்படுத்தாமல் அரசியல் தலைவர்கள் செயற்படுவது கவலைக்குரியதாகும். இவ்வாறான நிலைமையிலே இந்த விடயங்கள் தொடர்பான கருத்துக்களை நாங்கள் மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டிய நிலமைகள் ஏற்படுகின்றது.
இந்த நெருக்கடியான நிலைமையில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயற்படுவதும் முக்கியமாகும். மீண்டும் நாட்டில் பாதுகாப்பை நிலை நாட்டுவதன் மூலம், மக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த நப்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.
-Vidivelli