வன்செயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மினுவாங்கொடை நகருக்கு தொடர்ந்தும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும், பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ள மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலுக்குள்ளும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் மினுவாங்கொடை தாக்கப்படும் என வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால் நகரை அண்டிய கிராம மக்கள் தொடர்ந்தும் அச்ச நிலையில் இருப்பதாக மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் ஏ.டபிள்யூ. ரஷீத் தெரிவித்தார்.
இப்பகுதியைச் சேர்ந்த கோப்பிவத்த கிராமம் தாக்கப்படும் என நேற்று முன்தினம் வதந்திகள் பரப்பப்பட்டதால் அங்கு வாழும் சுமார் 250 முஸ்லிம் குடும்பங்கள் பதற்ற நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மினுவாங்கொடை பள்ளிவாசலுக்கும், நகருக்கும் தொடர்ந்தும் அரசியல்வாதிகள் விஜயம் செய்த வண்ணமுள்ளனர். நேற்று பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி என்போர் விஜயம் செய்தனர். நேற்று முன்தினம் அமைச்சர்களான எம்.எச்.ஏ. ஹலீம், ரிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், ஏ.எச்.எம். பௌஸி, ஹர்ஷ ராஜகருண ஆகியோர் விஜயம் செய்தனர்.
பள்ளிவாசலின் மேல் மாடியில் ஒருபகுதி சுத்தம் செய்யப்பட்டு தற்போது தொழுகை நடாத்தப்பட்டு வருவதாகவும் பள்ளிவாசல் செயலாளர் ரஷீத் கூறினார்.
-Vidivelli