அசாதாரண நிலைமையை கட்டுப்படுத்த பாராளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக நியமிக்கவேண்டும்
ஜனாதிபதியுடன் இதுகுறித்து பேசவுள்ளோம் என்கிறார் கிரியெல்ல
பயங்கரவாத தாக்குதலையடுத்து நிலவும் அசாதாரண நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் உடனடியாக இதுகுறித்து ஆராய்வதாகவும் சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது குறித்து எவரும் யோசனையொன்று முன்வைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில தினங்களாக நாட்டில் சில பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அரசாங்கமாக இதனை கையாள என்ன செய்யப்போகின்றீர்கள் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விடயங்களை வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
அமைச்சர் ரிஷாதிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளதாக அதுரலியே ரதன தேரர் கூறியதாக ஊடகங்கள் செய்திகளை முன்வைத்து வருகின்றன. ஆனால் அவர் அவ்வாறு ஒரு முயற்சியை எடுக்கின்றாரா என்ற விடயம் எமக்குத் தெரியாது. சபையில் இன்னமும் அவ்வாறான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டதாக அறியவில்லை. அவ்வாறு ஏதேனும் தீர்மானங்கள் எடுப்பார்கள் என்றால் அப்போது அதுகுறித்து ஆராய முடியும். கட்சியாக நாமும் இது குறித்து ஆராயவில்லை. பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அனைவர் மீதும் குற்றம் சுமத்தி நாட்டின் நிலைமைகளை சீரழிக்க எவரும் முயற்சிக்கக்கூடாது.
அதேபோல் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயவும் அதன் பின்னரான சில தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயவும் உடனடியாக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றினை அமைக்க வேண்டும். அதற்கான யோசனையை நாம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முன்வைத்துள்ளோம், எனினும் ஜனாதிபதி நாட்டில் இல்லாத காரணத்தினால் அவர் நாடு திரும்பியவுடன் உடனடியாக இது குறித்து ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பாதுகாப்பு அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்புடன் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதாக வெளியாகியுள்ள காணொலிகள் குறித்தும் ஆராய வேண்டும். இது குறித்து பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தனவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் பாதுகாப்புத் தரப்பினரை கொண்டே நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli