சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம் சமூகத்தை சந்தேகிக்கின்றனர்
அதனை நீக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்கிறார் ஹிஸ்புல்லாஹ்
ஏ.ஆர்.ஏ.பரீல், எம்.ஏ.எம்.அஹ்ஸன்
முஸ்லிம் சமூகத்தின் மீது பெரும்பான்மை சமூகமும், தமிழ் சமூகமும் பாரிய சந்தேகம் கொண்டுள்ளன. இந்தச் சந்தேகத்தை இல்லாமல் செய்வதற்கு நாம் திட்டங்கள் வகுக்க வேண்டும். முஸ்லிம் சமய விவகார அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஊடாக இதற்கென திட்டங்கள் வகுத்து செயற்படும் என நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நேற்று கொழும்பு மருதானை ஸாஹிரா கல்லூரி கபூர் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய மீலாத் விழா வைபவத்துக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முஸ்லிம்களுக்கும் ஏனைய சிங்கள, தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்து ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழ்வதற்கான திட்டங்களை முஸ்லிம் சமய விவகார அமைச்சு வகுத்து செயற்படவேண்டும். சிங்கள, தமிழ் மக்கள் ஏன் முஸ்லிம்கள் மீது சந்தேகம் கொண்டுள்ளார்கள் என்பதை கண்டறிந்து அச்சந்தேகங்கள் தவறானவை என்று நிரூபிக்க வேண்டும்.
முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக அரசாங்க அனுசரணையுடன் நாட்டில் தேசிய மீலாத் தின விழா நடத்தப்படுகின்றது. அவ்விழாவுடன் கூடிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை, முஸ்லிம்களின் வரலாறும் எழுதப்படுகின்றது. தேசிய மீலாத் விழா நடைபெறும் பிரதேச முஸ்லிம்களின் வரலாறு நூலுருப்பெறுகிறது.
மியன்மார் போன்ற நாடுகளில் முஸ்லிம்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டதனாலேயே அங்கு முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதனால் எமது நாட்டின் முஸ்லிம்களின் வரலாறு எழுதப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. இந்த அரசாங்கம் முஸ்லிம்களை கௌரவித்து மீலாத் விழாவினை ஓர் அங்கீகாரத்துடன் முன்னெடுத்து வருகின்றமையை நாம் பாராட்ட வேண்டும்.
இந்த ஏற்பாடுகளை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும். எதிர்வரும் காலத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சையும் திணைக்களத்தையும் மேலும் பலப்படுத்த வேண்டும்.
முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்துள்ளது. இந்தநிலைமையிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். ஆளணிகள் அதிகரிக்கப்பட வேண்டும். அரசியல் தலைமைத்துவங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் உலமாக்களும் புத்திஜீவிகளும் தஃவா அமைப்புகளும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும்.
ஹஜ் விவகாரம் மற்றும் பள்ளிவாசல்களின் விவகாரம் என்பவற்றுடன் மாத்திரமல்லாது ஏனைய விடயங்களிலும் திணைக்களத்தை பலப்படுத்த வேண்டும். நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களது போதனைகள், அவர்கள் ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழ்ந்த முறை என்பவற்றை நவீன தொடர்பாடல் சாதனங்கள் மூலம் ஏனைய சமூகத்திற்கு முன்வைக்க வேண்டும். இதன்மூலம் சிறுபான்மை சமூகமான எங்கள் மீது பொரும்பான்மை சமூகம் கொண்டுள்ள சந்தேகங்களை களைய முடியும்.
முஸ்லிம்கள் பற்றி பெரும்பான்மை சமூகங்கள் கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களை களைவதற்கான முயற்சிகளை முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும்.
நாம் கல்விப் பிரச்சினை, காணிப்பிரச்சினை, பள்ளிவாசல் பிரச்சினை மற்றும் மார்க்கப் பிரச்சினைகள் என்பவற்றை எதிர்நோக்குகின்றோம். எமது சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக வக்பு சட்டத்தில் மாற்றம், ஹஜ்ஜுக்கு என தனியானதொரு சட்டம், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் என பல கோரிக்கைகளை சமூகம் முன்வைத்துள்ளது.
முன்னோர்கள் எமக்கு உருவாக்கித் தந்த சட்டங்கள் எமது இன்றைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் திருத்தங்கள் அல்குர்ஆன், ஹதீஸுக்கு இணங்கியதாகவே மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு முரணாக சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது.
சில வல்லரசுகள் மற்றும் சிலரின் தேவைகளுக்கேற்ப சட்டத்தில் மாற்றத்தை செய்யும் அதிகாரம் அமைச்சுக்கு கிடையாது. திணைக்களத்திற்கும் கிடையாது. உலமாக்களுக்கும் கிடையாது. அல்குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றம் இல்லாமலேயே திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
போதைவஸ்து பாவனை முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தக்கலாசாரத்தை மாற்ற வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை பள்ளிவாசல்கள் நடாத்தவேண்டும். கொழும்பில் முஸ்லிம்களின் கல்விநிலை வீழ்ச்சியடைந்துள்ளது. நாம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறோம். கொழும்பில் முஸ்லிம் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இல்லையேல் புதிய பாடசாலைகளை உருவாக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்நாட்டு வெளிநாட்டு உதவிகளுடன் தீர்வுகளைக் காணவேண்டும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒரு சமூக நிலையமாக மாறவேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நிலையமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.
பாடசாலை மட்டத்திலான தேசிய மீலாத் விழா போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் இதன்போது பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர் பைஸர் முஸ்தபா, திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் டீ.ஜீ.எம்.வீ. ஹப்புஆராச்சி, பலஸ்தீன், பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
-Vidivelli