நாட்டில் யுத்த பீதி கொண்டுள்ளமை ஒரு துர்ப்பாக்கியமே
வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தொகுப்பு:
30 வருட யுத்தம் நிறைவடைந்து 10 வருட அமைதியை அனுபவித்த நிலையில் மீண்டும் யுத்தபீதி நாட்டில் நிலைகொண்டுள்ளமை ஒரு துர்ப்பாக்கியமான விடயமாகும். ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், குறித்த தீவிரவாத நடவடிக்கை மூலம் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடனும், அதேபோல உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுடனும், பொதுவாகவே அனைத்து இலங்கை மக்களுடன் நான் ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
மன்னிப்புக் கோருதல், மற்றையவர்களைக் குறைகூறுதல், இனவாத்தைக்கக்குதல், அர்த்தமின்றி விமர்சித்தல், பிணங்களுக்கு மேலே இருந்து அரசில் இலாபம் தேடுதல், அல்லது ஒன்றுமே பேசாது ஒதுங்கியிருத்தல் எனும் எந்தவொரு நடவடிக்கையும் எமது நாட்டில் நிலையான அமைதியைக் கொண்டுவராது.
மாறாக, அர்த்தமற்ற விமர்சனங்களும், இனவாதக் கருத்துக்களும் இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இன மக்களுக்கிடையிலான வெறுப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்து நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும்.
ஆகவே, அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள வகையில் பௌத்த மதத்துக்கு முதன்மை ஸ்தானத்தை வழங்குவதுடன் தொல்கால வரலாற்றைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளான இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மத மற்றும் ஏனைய இனக்குழுக்களுக்கும் உரிய கௌரவத்தையும், மத உரிமையையும், பாதுகாப்பையும் வழங்குவதன் மூலமே எமது நாடு ஆசியாவில் அமைதியான வளமிக்க நாடாக மாறும் என்று இந்த சபையில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
07 ஆம் திகதி இந்த சபையில் உரையாற்றிய, ஜனாதிபதி, இந்த யதார்த்தத்தை மிகத் தெளிவான முறையில் எடுத்துக் கூறினார். இந்த தீவிரவாதக் கும்பலை பூண்டோடு அழிப்பதில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் வழங்கிவரும் பங்களிப்பை தெளிவுபடுத்தினார். இந்த தீவிரவாத, நாசகார நடவடிக்கைகளுடன் அனைத்து முஸ்லிம்களையும் தொடர்புபடுத்த வேண்டாம் என்று அவர் உறுதியாகவே வேண்டிக் கொண்டார்.
அதேபோல, 30 வருட யுத்தத்தின் போது அப்பாவி தமிழ் பொதுமக்கள் அனுபவித்த இன்னல்களை கண்கூடாகக் கண்ட வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்வைத்த கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. குறிப்பாக, பா .உ. ஸ்ரீதரன் முஸ்லிம்களை மனிதாபிமானம் அற்றவகையில் நடாத்த வேண்டாம் என்றும் துன்புறுத்த வேண்டாம் என்றும் வேண்டிக்கொண்டார். இலங்கை முஸ்லிம்கள் சார்பாக அவருக்கும் நான் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.
ஆனால், யதார்த்தத்துக்குப் புறம்பான முறையில் சில ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் குறிவைத்து தொடர்ந்தும் தாக்கிவருவது மிகவும் கவலைக்கிடமானதாகும். இன்றைய இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்ட திறந்தவெளிக் கைதிகளாக முஸ்லிம்கள் பீதியுடன் வாழ்ந்துவருகின்றனர். இன்று முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நாடாக இலங்கை மாறிவருகிறது. முஸ்லிம்கள் பாடசாலைகளிலும், அரச அலுவலகங்களிலும், அரச வைத்தியசாலைகளிலும், அனைத்து அரச நிறுவனங்களிலும் புறக்கணிப்பட்டும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர். நாம் இதனை இந்த ஜனநாயக நாட்டில் எதிர்பார்க்கவில்லை. மேற்கத்தேய சதிவலையில் சிக்கிய 50 அலல்து 100 பேரைக் காரணங்காட்டி 20 இலட்சம் முஸ்லிம்களையும் பலிக்கடாவாக்கும் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும்.
உண்மை அறியப்படாமல் எந்தவகையான நிலையான தீர்வையும் அடைய முடியாது.
– 21 ஆம் திகதி குண்டுவெடித்தது, உடனடியாக நிகாப் தடைசெய்யப்படுகிறது. ஆனால் எந்தவொரு தற்கொலை குண்டுதாரியும் முகத்தை மறைத்துக் கொண்டு இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை.
– 21 ஆம் திகதி குண்டுவெடித்தது, மறுநாள் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்லுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆனால் பள்ளிவாசல்கள் அனைத்தும் இந்தத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கின்றன.
– 21 ஆம் திகதி குண்டுவெடித்தது, மஸ்ஜித் பதிவுகள் தடைசெய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.
– 21 ஆம் திகதி குண்டுவெடித்தது, மறுநாள் அரபு மத்ரஸாக்கள் தடைசெய்யபட வேண்டும் என்று கூறுகின்றனர்.
– 21 ஆம் திகதி குண்டுவெடித்தது, மறுநாள் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்கின்றனர்.
– 21 ஆம் திகதி குண்டுவெடித்தது, மறுநாள் சிறுபான்மைக் கட்சிகள் தடைசெய்யப்பட வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.
– 21 ஆம் திகதி குண்டுவெடித்தது, மறுநாள் இது பௌத்த நாடு முஸ்லிம்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கர்ச்சிக்கின்றனர்.
– 21 ஆம் திகதி குண்டுவெடித்தது, மறுநாள் இது இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பெயர் நாமம் சூட்டுகின்றனர்.
– 21 ஆம் திகதி குண்டுவெடித்தது, மறுநாள் அனைத்து மஸ்ஜித்களும், மத்ரஸாக்களும், முஸ்லிம் வீடுகளும் ஆயுதக் கிடங்குகளாக சித்திரிக்கப்பட்டன
இவை அனைத்தும் ஆழமாக பதிந்துள்ள இனவாத்தின் வெளிப்பாடே அன்றி யதார்த்தபூர்வமானதோ அல்லது புத்திசாதுரியமான கருத்துக்களோ, பிரசார நடவடிக்கைகளோ அல்ல.
உலக முஸ்லிம்களின் அமைதிக்கு எதிராக மேற்கத்தேய சக்திகளால் உருவாக்கப்பட்ட ஒரு தீய சக்தியே இந்த ISIS. இதனை ஒரு இஸ்லாமிய அமைப்பு என்று கூறுபவர்களுக்கும் இந்த ISIS ஐ பின்தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டவர்களுக்கும் இடையே எவ்வித வித்தியாசமும் இல்லை. இந்த இரு தரப்பினரும் சதிகாரர்களேயன்றி வேறுயாருமல்ல.
யார் இந்த ISIS?
மேற்கத்தேய நாடுகளால் பயிற்சியளிக்கப்பட்ட யூத இனத்தைச்சேர்ந்த ஒருவனே இந்த அபுபக்ர் அல்பக்தாதி. அறபு மொழியில் புலமை பெற்ற இவன் ஒரு முஸ்லிமல்ல. ஆகவே இந்த ISIS தாக்குதலை இஸ்லாமிய பயங்கரவாதம் என்று முத்திரைகுத்த யாரும் முயற்சித்தால் அது அவர்களின் அறியாமையாகும்.
யார் இந்த வஹாபிகள்?
மேற்கத்தேய ஊடுருவலிலிருந்தும், கலாசார ஆக்கிரமிப்பிலிருந்தும் சவுதி அரசை விடுதலை செய்ய 18 ஆம் நூற்றாண்டில் போராடி வெற்றிபெற்ற ஒருவரே இந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹாப். இவர் ஒரு விடுதலைப் போராளியும், சீர்திருத்தவாதியுமாவார். இவருடனான ஒப்பந்தத்திற்கு இணங்கவே புனித இஸ்லாமிய சமயம் சவுதி அரேபியாவில் அரச மார்க்கமாக இன்றும் பேணப்பட்டுவருகிறது.
சுமார் 1400 வருடங்களாக இந்தியாவின் மேற்குக்கரை கடல் வர்த்தகவழி ஊடாக இலங்கைக்கு இஸ்லாம் சமயம் வந்துசேர்ந்தாலும், அதில் பொதுவாகவே கலாசாரக் கலப்பு காணப்பட்டது. இந்து கலாசாரத்தின் தாக்கம் காணப்பட்டது. அதன் காரணமாகவே அன்றைய முஸ்லிம் பெண்கள் சேலை கட்டி அதே துணியினால் தலையையும் முகத்தையும் மறைத்தனர். சேலை இலங்கையின் தேசிய கலாசார ஆடையல்ல. அது இந்தியாவின் கலாசாரம். ஆனால் அன்றைய முஸ்லிம் பெண்கள் நீளமான சட்டைகளை உடுத்தே அதன் மேலால் சேலை கட்டினார்கள். அது அப்போதும் தேசிய ஆடைக் கலாசாரத்திலிந்து வேறுபட்ட அந்நியமான ஓர் ஒழுக்கமான ஆடையாகக் காணப்பட்டது என்பதை இந்த சபையில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இருப்பினும் 1977 திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் கலாசாரக் கலப்பற்ற தூய இஸ்லாம் பின்பற்றப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளுடனான தொடர்புத்தன்மை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சமய மறுமலர்ச்சியை வெறுமனே ஒரு தௌஹீத்வாத ஊடுருவல் என்று குறிப்பிடுவது பொருத்தமற்றது. மாறாக, இன்று இலங்கை வாழ் 90 வீதமான முஸ்லிம்கள் இந்த சமய மறுமலர்ச்சியின் பங்காளர்கள், தூய இஸ்லாத்தை பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது ஏகத்துவக் கொள்கையை முதன்மைப்படுத்தியவர்கள் என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும்.
அதாவது, முன்னர் இந்தியாவின் சேலை கட்டிய இலங்கை இஸ்லாமிய பெண்கள் தற்போது இஸ்லாமிய நாடுகளிலும் மேற்கற்தேய நாடுகளிலும் இஸ்லாமிய பெண்கள் பொதுவாக அணியும் ஆடைகளைத் தெரிவுசெய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை ஒரு நவீனத்துவம் அல்லது FASHION என்றும் குறிப்பிடலாம். இதனை அடிப்படைவாதமாக அல்லது கறுப்பு அபாயாவை தீவிரவாதத்தின் அடையாளமாகச் சித்திரிக்க முயற்சிப்பது ஒரு அறிவுபூர்வமான விடயமல்ல. இதனை முஸ்லிம்களின் சமய மறுமலர்ச்சியைச் சகிக்க முடியாத பெரும்பான்மையின் நச்சரிப்பாகவும் குறிப்பிட முடியும்.
பௌத்த, இந்து, கிறிஸ்தவ சமயத்தவர்கள் ஆடை அணிவது போல, அவர்களது உணவுப் பழக்கம், மதுப் பாவனை, அவர்களது சமூக தொடர்புகள், விவாக – மரண சம்பிரதாயங்களும் முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென யாராவது எதிர்பார்த்தால் அது அப்பட்டமான ஓர் இனவாத நடவடிக்கையாகும். சர்வதேச மனித உரிமை மீறலாகும்.
இதனைக் கலாசாரத் திணிப்பு என்றும் கூறலாம். ஒவ்வொரு சமயக் குழுக்களுக்கும் தனித்துவமான பண்புகளும் விழுமியங்கழும் உள்ளதை நாம் பொதுவாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவே நாகரிகம், இதுவே கலாசார முதிர்ச்சி என்பதை மற்றைய சமயங்களும் உணர வேண்டும். வேறுவார்த்தையில் குறிப்பிடின், இதனைப் பன்மைத்துவவாதம் “Pluralism” என்றும் குறிப்பிடலாம்.
பன்மைத்துவவாதம் இன்று நாகரிக முதிர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகளான கனடா, நியுஸிலாந்து, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய பல நாடுகளில் மிகச் சிறந்தமுறையில் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இருப்பினும் இந்த நாடுகளிலிலும் சில மதவாத அடிப்படைவாதிகளின் நாசகாரச் செயல்கள் இல்லாமல் இல்லை. ஆனால் குறிந்த நாடுகளின் பாராளுமன்றங்கள் மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் நாகரிகமான முறையிலும் நடந்து கொள்கின்றன.
கிறிஸ்ட் சேர்ச் தாக்குதலின் பின்னர் நியுஸிலாந்து பிரதமர் நடந்துகொண்ட விதம் மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், இலங்கைப் பாராளுமன்றத்தில் எல்லைமீறிய இனவாதக் கருத்துப்பரிமாறல்கள் எமது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிக்காட்டுவதையிட்டு நான் இந்த நாட்டில் சமாதானத்தை விரும்பும் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
இறுதியாக, பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மக்களின் தாய்நாடான எமது தாய்நாட்டில் மீண்டும் சமாதானமும் அமைதியும் நிலவி வேகமாகவும் நிலையானதுமான அபிவிருத்தியை அடைவதில் இந்தப் பாராளுமன்றம் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இந்த வகையில், 2009இன் பின்னர் இந்த நாட்டில் நிலையான சமாதானத்தை அடைவதில் அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும், குறித்த 10 வருடகாலத்தில் இடம்பெற்ற வெறுப்புணர்வை தீவிரப்படுத்திய விடயங்கள் குறித்தும் மீளாய்வுக்கு உட்படுத்துவதுடன், குறித்த தறகொலைத் தாக்குதலுக்கு ஏதுவாக அமைந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை கண்டறிந்து தேசிய சமாதானத்தையும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்புவதற்கானதொரு பொறிமுறையை உருவாக்குவதற்கானதொரு தெரிவுக்குழு அல்லது ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன்.
vidivelli