வேடிக்கை பார்ப்பதற்கு படையினர் தேவையா?
கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம் மக்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டு வருகிறார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. வீடுகள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு, எரியூட்டப்பட்டுள்ளன.
ஏப்ரல் 21 ஆம் திகதி நட்சத்திர ஹோட்டல்களையும், தேவாலயங்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்தே இந்த வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.
நீர்கொழும்பு– பலகத்துறை, பெரியமுல்லை பகுதிகளில் ஆரம்பமான வன்முறைச் சம்பவங்கள் அதனையடுத்து சிலாபம், குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டி மற்றும் நிக்கவரட்டிய பகுதிகளிலுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கும் வியாபித்தன. நேற்று முன்தினம் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை நகரையும் வன்முறையாளர்கள் விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ள தாக்குதல் சம்பவங்கள் பள்ளிவாசல்களையும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களையும் வீடுகளையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை 15 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிவாசல்களில் சில தினங்களாக தொழுகை நடாத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது. 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் இனவாதிகளுக்கு இரையாகியுள்ளன.
மினுவாங்கொடை நகரில் 27 கடைகள் தாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 12 கடைகள் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்கள் திட்டமிட்ட குழுவொன்றினாலே மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கண்டி–திகன வன்செயல்களின் பிரதான சூத்திரதாரியான மஹசொன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவங்களும் வன்முறைகளும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதே இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் பிரசன்னமாகியிருந்த போதே வன்முறையாளர்கள் தங்களது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், படையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையெனவும் மக்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் தெரிவித்துள்ளார்கள்.
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த நேரத்தில் வன்செயல்களைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்துக்குரியது. வன்முறையாளர்களுக்கு எதிராக உடனடியாக, கடுமையாக நடவடிக்கைகளை அதிகாரத்திலுள்ளோர் எடுக்கவேண்டும் என கோருகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்நாட்டில், தான் சுயமாக வாழ்வதற்கு போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் என இன்னும் ஒரு சமூகத்தையும் நினைக்கத் தூண்டாதீர்கள். கிறிஸ்தவ ஆலயங்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி, பள்ளிவாசல்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி, எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் இந்நாட்டில் இடமிருக்கக்கூடாதென அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சமாதானத்தைக் குலைக்க சில குழுக்கள் செயற்பட்டு வருகின்றன என்பதை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினருக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்புப் படையினர் தங்கள் அதிகாரங்களைப் பிரயோகிப்பதாகத் தெரியவில்லை.
வன்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அதனையும் மீறிச் செயற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியேற்படும். அதனால் காயம் அல்லது உயிர் ஆபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இன, மத, கட்சி, பதவி பாகுபாடுகளின்றி இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். படைத்தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுகளை படைவீரர்கள் கடுமையாக அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு உத்தரவுகள் அமுல்படுத்தப் பட்டாலே இன வன்முறையாளர்களின் பிடியிலிருந்து முஸ்லிம்களையும் நாட்டையும் காப்பாற்ற முடியும்.
vidivelli