இனவாத கும்பல்களினால் தாக்குதலுக்குள்ளான மற்றும் தாக்குதல் நடத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும் முஸ்லிம் கிராமங்களில் தொடர்ந்தும் அச்சமான நிலைமை காணப்படுகின்றது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தேவாலயங்கள் மற்றும் நடசத்திர ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல்தாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களையடுத்து நாட்டில் இயல்புநிலை மோசமடைந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்குள் நீர்கொழும்பு, கொட்டாரமுல்லை, சிலாபம், மினுவாங்கொடை மற்றும் குருநாகல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். இதனையடுத்து முஸ்லிம் கிராமங்களில் அச்சமானதொரு சூழ்நிலை தோன்றியுள்ளது.
கினியம பிரதேசம்
பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினியம பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பின்பு ஏதும் அசம்பாவிதங்கள் நிகழாவிட்டாலும் அப்பகுதிமக்கள் தொடர்ந்தும் பீதியில் வாழ்வதாக கினியம தக்வா ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம். சித்தீக் தெரிவித்தார்.
வன்முறைத் தாக்குதல்களின் பின்பு கினியம பிரதேசத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘இப்பகுதியில் தொடரும் அச்ச நிலை காரணமாக கடந்த 13 ஆம் திகதியும் சில குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இரவு நேரத்தை காடுகளிலே கழித்தார்கள். இப்பகுதியில் 3 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. அதனால் தொழுகை நடத்த முடியாமல் மூடி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக 6 விமானப் படை வீரர்கள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். பாதைகளில் முக்கிய இடங்களில் படை வீரர்கள் கடமையில் இருப்பதுடன் ரோந்துச் சேவையும் இடம்பெறுகிறது. பள்ளிவாசல்களைப் புனரமைப்பதற்கு பெருந்தொகைப் பணம் தேவைப்படுகிறது. இப்பகுதி மக்களில் 90 வீதமானோர் வறியவர்கள். எனவே பள்ளிவாசல்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு சமூகத்திலுள்ள வசதி படைத்தவர்கள் உதவி செய்ய வேண்டும்’ என்றார்.
நீர்கொழும்பு
நீர்கொழும்பு நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுவதுடன் நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் வர்த்தக நிலையங்களில் குறைவாகவே வியாபாரம் நடைபெறுகிறது.
அத்துடன், நகரில் இனந்தெரியாத குழுக்கள் இரவு வேளைகளில் முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக முஸ்லிம்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம்கள் வாழுகின்ற பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினர் காவலில் இருந்தபோதிலும் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர். ஊரடங்கு நடைமுறையில் இருந்த வேளையில் பாதுகாப்புப் படையினர் இருந்தபோதே தாங்களின் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதுதவிர நாடுமுழுவதும் முஸ்லிம் கிராமங்களில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பினும் மக்கள் தொடர்ந்தும் அச்சத்தில் வாழ்ந்துவருவதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
vidivelli