அமித், நாமல் குமார, டான் பிர­சாதும் கைது

மொத்தமாக 81 பேர் கைது; விசாரணைக்கு சிறப்புக்குழு

0 578

ஊழல் எதிர்ப்பு இயக்­கத்தின் பணிப்­பாளர் நாமல் குமார மற்றும் மகசோன் பல­காய இயக்­கத்தின் தலைவர் அமித் வீர­சிங்க மற்றும் புதிய சிங்­கள தேசியம் அமைப்பின் முக்­கி­யஸ்தர் டான் பிரசாத் ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

வட மேல் மாகா­ணத்தில் குளி­யா­பிட்டி மற்றும் நிக்­க­வ­ரட்டி பகு­தி­களில் முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்து திட்­ட­மிட்ட குழு­வொன்று முன்­னெ­டுத்த தொடர் தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான பிர­தான விசா­ர­ணை­க­ளுக்­காக, மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இனங்­க­ளுக்கு இடையே வெறுப்­பு­ணர்­வு­களைத் தூண்டும் வகையில் ஏற்­க­னவே நடந்­து­கொண்­டுள்ள, கண்டி – திகன வன்­மு­றை­களின் பிர­தான சூத்­தி­ர­தாரி மகாசோன் பல­காய எனும் அமைப்பின் தலைவர் வித்­தா­ர­ண­பத்­தி­ர­ண­லாகே அமித் ஜீவன் வீர­சிங்­கவும் அவ­னுடன் மிக நெருங்­கிய தொடர்­பினைப் பேணிய மேலும் இரு­வ­ருமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அமித் வீர­சிங்­க­வுக்கு மேல­தி­க­மாக கைது செய்­யப்­பட்­டோரில், ஊழ­லுக்கு எதி­ரான படை­ய­ணியின் நட­வ­டிக்கை பணிப்­பா­ளரும், ஜனா­தி­பதி கொலை சதி ஒன்று தொடர்பில் வெளிப்­ப­டுத்­தி­ய­வ­ரு­மான அத்­த­நா­யக்க முதி­யன்­ச­லாகே நாமல் குமார மற்றும் புதிய சிங்­ஹலே அமைப்பின் தலை­வ­ரான லிய­னகே அபேகோன் சுரேஷ் பிரி­யஷாத் என­ப்படும் டான் பிரி­யஷாத் ஆகியோர் அடங்­கு­கின்­றனர்.

அமித் வீர­சிங்­கவை கொழும்பு பொலிஸ் தலை­மை­ய­கத்தில் இருந்து கண்டி -– தெல்­தெ­னிய பகு­திக்கு சென்ற, பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழான சிறப்பு விசா­ரணைக் குழு கைது செய்­த­துடன், வர­கா­பொல பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்­றினைச் செய்ய சென்ற போது நாமல் குமாரவை அக்­குழு கைது செய்­தது. இந் நிலையில் வெல்­லம்­பிட்­டியில் உள்ள டான் பிரி­ய­ஷாத்தின் வீட்­டுக்கு அவரைக் கைது செய்ய பொலிசார் சென்ற போதும் அவர் அங்கு இருக்­க­வில்லை. இந் நிலையில் பின்னர் நேற்று மாலை அவர் சட்­டத்­த­ரணி ஒருவர் ஊடாக சி.சி.டி. எனப்­படும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வுக்கு வந்து சர­ண­டைந்­ததை அடுத்து இந்த விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் வடமேல் மாகா­ணத்தில், குரு­ணாகல், வாரி­ய­பொல, நிக்­க­வ­ரட்­டிய, குளி­யா­பிட்­டிய, சிலாபம், பிங்­கி­ரிய, தும்­ம­ல­சூ­ரிய, நாத்­தாண்­டிய, தும்­மோ­தர உள்­ளிட்ட பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்த தாக்­கு­தல்கள் பல தொடர்பில் தடுத்து வைக்­கப்­பட்டு பொலிஸ் தலை­மை­ய­கத்தின் சிறப்பு பொலிஸ் குழு­வி­னரால் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.
இந் நிலையில் நேற்று இரவு 7.00 மணி­யுடன் நிறை­வ­டைந்த 72 மணி நேரத்தில் இடம்­பெற்ற பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள், முஸ்­லிம்­களின் கடைகள், வீடுகள் மீதான தாக்­கு­தல்கள் உள்­ளிட்ட வன்­மு­றைகள் தொடர்பில் 81 பேர் மொத்­த­மாக கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இதில் வடமேல் மாகா­ணத்தில் மட்டும் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் 64 பேர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும், மினு­வாங்­கொ­டையில் முஸ்­லிம்­களின் பள்­ளி­வாசல் மற்றும் கடை­களை கொழுத்தி சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் 14 பேர் கைது செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார்.

கீழ்த்­த­ர­மான நோக்­கங்­களைக் கொண்ட சந்­தர்ப்­ப­வா­திகள் சில­ரா­லேயே இந்த வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், தற்­போது வன்­மு­றைகள் கட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு சந்­தேக நபர்­களை வேட்­டை­யாடும் படலம் ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர மேலும் கூறினார்.

மினு­வாங்­கொடை சம்­பவம்:

மினு­வாங்­கொடை நகரில், கொழும்பு -– குரு­ணாகல் பிர­தான வீதியில் அமைந்­துள்ள சுமார் 10 முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் ஜும்ஆ பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடாத்­தப்­பட்­டி­ருந்­தது. சம்­பவம் இடம்­பெற்ற நேற்று முன்­தினம் மாலையே மேல் மாகா­ணத்தின் வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­ன­கோனின் கீழ் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில், அன்­றைய தினம் இர­வோ­டி­ர­வாக 9 பேரும் நேற்று 5 பேரு­மாக 14 பேர் கைது செய்­யப்­பட்­டனர். அவர்கள் அனை­வரும் நேற்று மினு­வாங்­கொடை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு எதிர்­வரும் 29 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஐ.சி.சி.பி.ஆர். இன் கீழ் குற்­றச்­சாட்டு:

இவ்­வாறு வெறுக்­கத்­தக்க வன்­மு­றைகள் தொடர்பில் கைது செய்­யப்­படும் அனைத்து சந்­தேக நபர்­களும் அவ­சர கால சட்ட விதி­களின் கீழும், சிவில் மற்றும் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்ட விதி­களின் கீழும் மன்றில் ஆஜர் செய்­யப்­ப­டு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார். அவ்­வாறு ஆஜர் செய்­யப்­படும் போது அவர்­களால் நீதிவான் நீதி­மன்றில் பிணை பெற முடி­யாது எனவும் கண்­டிப்­பாக பிணை பெற மேல் நீதி­மன்றை நாட வேண்டும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பொலிஸ் சான்­றி­தழில் விஷேட குறிப்பு:

அத்­துடன் அவ்­வாறு கைது செய்­யப்­படும் எந்த நபரும் தொழில் நிமித்­தமோ, வேறு அலு­வல்­க­ளுக்கோ வெளி­நாடு செல்­லவோ பொலிஸ் சான்­றி­தழை பெற முற்­பட்டால் அவ்­வா­றான சான்­றி­தழில் கண்­டிப்­பாக, இன வன்­மு­றை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்­டவர் எனும் பதம் சேர்க்­கப்­பட்டு சான்­றிதழ் கொடுக்­க­ப்படும் என பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர சுட்­டிக்­க­ட­டினார்.

வடமேல் வன்­மு­றைகள்:

இதே­வேளை வடமேல் மாகா­ணத்தில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் மொத்­த­மாக 64 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் 9 பேர் நேர­டி­யாக வன்­மு­றை­களில் பங்­கேற்ற முக்­கி­ய­மா­ன­வர்­க­ளாவர். அந்த 9 பேரும் நேற்று ஹெட்­டி­பொலை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்பட்­டனர். இதன்­போது அவர்கள் எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இதே­வேளை குளி­யா­பிட்­டிய வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டைய 10 பேரும் நேற்று கைது செய்­யப்­பட்டு குளி­யா­பிட்டி நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இதன்­போது அவர்­களை எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­தர­வி­டப்­பட்­டது.

இத­னை­விட நாத்­தாண்­டிய பகு­தியில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் 18 பேர் கைது செய்­யப்­பட்டு மார­வில நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்பட்­டனர். அவர்­க­ளையும் எதிர்­வரும் 28 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க மார­வில நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­ட­வர்கள் மார­வில, நாத்­தாண்­டிய, ஹத்­தி­னிய மற்றும் தல­வில பகு­தி­களைச் சேர்ந்­தவர்­க­ளாவர்.

விஷேட பொலிஸ் குழு­வுக்கு  மேல­தி­க­மான விசா­ர­ணை­யா­ளர்கள்:

இத­னி­டையே இந்த வன்­மு­றைகள் தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழ் முன்­னெ­டுக்­கப்­படும் விஷேட விசா­ர­ணை­க­ளுக்கு மேல­தி­க­மாக ஒவ்­வொரு விஷேட பகு­தி­க­ளுக்கும் பொலிஸ் மா அதி­பரால் சிறப்பு விசா­ர­ணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ரமரத்ன இந்த மேல­திக விசா­ர­ணை­யா­ளர்­களை நிய­மித்­துள்ளார். இரு பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள் மற்றும் 8 பொலிஸ் அத்­தி­யட்­சர்கள், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர்கள் இவ்­வாறு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­னவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

அவரின் கீழ் பொலிஸ் சட்டப் பிரிவு மற்றும் குற்றம் திட்­ட­மிட்ட குற்­றங்­களை தடுக்கும் பொலிஸ் பிரி­வு­க­ளுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வாவின் கீழ் பிர­தான விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. குளி­யா­பிட்டி மற்றும் ஹெட்­டி­பொல பகு­தி­களில் இடம்­பெற்ற விரும்­பத்­த­காத சம்­ப­வங்கள் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வாவின் கீழ் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

அத்­துடன், நிக்­க­வ­ரட்டி பொலிஸ் பிரிவில் பதி­வா­கி­யுள்ள வன்­மு­றைகள் தொடர்பில் விசா­ரிக்கும் பொறுப்பு கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் உதய ஹேமந்­த­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. கட்­டு­பொத்த பொலிஸ் பிரிவில் பதி­வான சம்­ப­வங்கள் தொடர்பில் சமூக பொலிஸ் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் டி.வி.பி. அஜித்தின் கீழும், தும்­ம­ல­சூ­ரிய பொலிஸ் பிரிவில் பதி­வ­ாகி­யுள்ள சம்­ப­வங்கள் தொடர்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கொடி­சிங்­கவின் கீழும் விஷேட விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

இத­னை­விட கொபேய்­கனே பொலிஸ் பிரிவில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சம­ர­கோனும், வாரிய பொலிஸ் பிரிவின் சம்­ப­வங்கள் தொடர்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சமந்த திஸா­நா­யக்­கவின் கீழும் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

கொஸ்­வந்த பொலிஸ் பிரிவில் இடம்­பெற்ற கொலை உள்­ளிட்ட சம­்ப­வங்கள் தொடர்பில் விசா­ரிக்கும் பொறுப்பு சிலாபம் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கீர்த்தி பண்­டா­ர­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

சிலாபம் பொலிஸ் பிரிவில் இடம்­பெற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­லக பிர­தான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொ­டியின் கீழ் தனி­யான விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­துடன் மார­வில பொலிஸ் பிரிவில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சுஜீவ விஜே­சிங்க தலைமையில் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. வென்­னப்­புவ பகு­தியில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் பொலிஸ் அத்­தி­யட்சர் பேர்னாட் பெரே­ராவின் கீழ் விசா­ரிக்­கப்பட்­டு­ வ­ரு­கின்­றது.

பிர­தான விசா­ர­ணை­களில் எழுந்­துள்ள சந்­தேகம்:

இந் நிலையில் முஸ்­லிம்­களின் சொத்­துக்­க­ளையும் உயிர்­க­ளையும் இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்­டுள்ள கொடூர தாக்­கு­தல்கள் தொடர்பில் பிர­தான விசா­ர­ணை­களைக் கையாளும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் சிறப்பு பொலிஸ் குழு அது தொடர்பில் பல தக­வல்­களை வெளி­ப்ப­டுத்­திக்­கொண்­டுள்­ளது. இந் நிலையில் மிகக் கீழ்த்­தர­மான அர­சியல் உள் நோக்­க­மொன்று இந்த வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் இருக்க வேண்டும் என விசா­ர­ணை­யா­ளர்கள் விசா­ர­ணை­களில் வெளி­ப்ப­டுத்­தப்­பட்ட விடயங்­களை வைத்து சந்­தே­கிப்­ப­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கூறினார். இந் நிலையில் அவற்றை வெளிப்­ப­டுத்த மேல­திக விசா­ர­ணைகள் இடம் பெறு­வ­தா­கவும், வன்­மு­றை­களில் பங்­கேற்­ற­வர்­களை பிடிக்க, பதில் பொலிஸ் மா அதிபர் அமைத்­துள்ள வெவ்­வேறு சிறப்பு விசா­ரணை அதி­கா­ரி­களின் கீழ் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

பிர­தான சந்­தேக நபர்கள் குறித்த வெளிப்­ப­டுத்­தல்கள்:

இதனிடையே இந்த வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர்களாக கருதப்படும் மூன்று சந்தேக நபர்களும் ஏற்கனவே இனவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதில் பிரதானமாக மகாசோன் பலகாய எனும் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க , கண்டி திகன வன்முறைகளின் பிரதான சூத்திரதாரியாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டவராவார். அது தொடர்பில் 7 மாதங்கள் விளக்கமறியலில் இருந்த அவர் கடந்த 2018 ஒக்டோபர் 31 ஆம் திகதி அரசியல் குழப்ப நிலையின்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

டான் பிரசாத் எனும் சந்தேக நபரும், கல்கிசை பகுதியில் இடம்பெற்ற ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத போராட்டத்தின் போது பிரதான சந்தேக நபராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஏற்கனவே கைதாகி தற்போது அது தொடர்பில் பிணையில் உள்ளவராவார்.
நாமல் குமார எனும் நபர் இவ்விரு இனவாதிகளுடனும் மிக நெருக்கமாக பழகியதுடன், அவர் ஊடாகவே பொலிசார் முன்னர் இனவாதிகள் குறித்த தகவல்களைப் பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.