முஸ்லிம்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும் உச்ச பாதுகாப்பினை வழங்குமாறு முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அவசர வேண்டு கோளினை விடுத்துள்ளனர்.
அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் ஜனாதிபதி, பிரதமர், பதில் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடமே இவ் அவசர வேண்டுகோளினை விடுத்துள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை இந்தச் செய்தி எழுதும் வரை 7 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதுடன், முஸ்லிம்களின் வீடுகள், வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளமையையடுத்தே இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கினியம, ஹெட்டிபொல, கொட்டம்பிட்டிய, அனுக்கன ஆகிய பகுதிகளிலே பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்குள்ளாகியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் அமைச்சர்களின் வேண்டுகோளினையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபரை தொடர்புகொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் எந்தப் பிரதேசத்தில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கு பிரதி பொலிஸ் மா அதிபரும் அந்தந்த பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுமே வகை சொல்லவேண்டும். அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
vidivelli