ஏப்ரல் 21 ஆம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களினால் உயிர்களை இழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொருட்டு முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களும் பொது அமைப்புகளும் நிதியுதவிகளை வழங்கியுள்ளன. குறித்த நிதியுதவிகள் அனைத்தும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ‘பெஷன் பக்’ ஆடை விற்பனை நிலையம் தமது நிறுவனத்தின் முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஒருநாள் சம்பளத் தொகையான 15 இலட்சம் ரூபாவை சேகரித்து வழங்கியுள்ளனர். நிறுவனத்தின் உயரதிகாரிகள், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து இந்த உதவியை கையளித்தனர்.
அதேபோன்று ‘கூல் பிளானட்’ நிறுவனம் 16 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. இந் நிதியை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிஸ்வி தாஹா தலைமையிலான குழுவினர் பேராயரிடம் கையளித்தனர்.
மேலும் செரண்டிப் மா ஆலை நிறுவனமும் ஒரு தொகை நிதியுதவியை வழங்கியுள்ளது. இதன் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹமட் ரியாழ் தலைமையிலான குழுவினர், பேராயர் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து இந் நிதி உதவியை கையளித்தனர். குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைக்கவும் இந் நிதியுதவி வழங்கப்பட்டதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று முஸ்லிம் மகளிர் கல்வி வட்டம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் மகளிர் பேரவை ஆகியனவும் ஒரு தொகை நிதியுதவியை வழங்கியுள்ளன. இவ்விரு மகளிர் அமைப்புகளினதும் பிரதிநிதிகள் நேற்றைய தினம் பேராயரைச் சந்தித்து நிதியுதவிகளை நேரில் கையளித்தனர்.
இதற்கு முன்னராக பைரஹா நிறுவனமும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 15 இலட்சம் ரூபா நிதி உதவியை வழங்கியிருந்தது.
இதற்கிடையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வேண்டுகோளின் பேரில் நாடளாவிய ரீதியில் ஜும்ஆப் பள்ளிவாசல்களில் நிதிசேகரிப்பு இடம்பெற்று வருகின்றது. நாடெங்கிலுமுள்ள ஜும்ஆ பள்ளிவாசல்களில் இரு ஜும்ஆ தினங்களில் சேகரிக்கப்படும் நிதியை சேகரித்து வழங்க உலமா சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
vidivelli