ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் “டெய்லி மிரர்” ஆங்கில பத்திரிகைக்கு (07.05.2019) அளித்த நேர்காணலின் தமிழாக்கம்.
Q இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் அண்மைக்கால சம்பவங்கள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
மூர்க்கத்தனமான, கொடிய, ஆழங்காணவியலாத நாசகார சக்திகள் முஸ்லிம்கள் மத்தியில் ஒருவிதமான தீவிரவாதத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த எத்தனித்ததாக யூகங்கள் உள்ளன. அவர்கள் அறவே உணர்வுபூர்வமற்ற பாரிய கொடுமைகளை இழைத்திருக்கின்றார்கள். அவ்வாறான மிருகங்கள் எங்கள் மத்தியில் இருந்ததை எங்களால் இன்னும் நம்பவே முடியவில்லை. முஸ்லிம்கள் எப்பொழுதுமே சந்தேகக் கண்ணோடு பார்க்கப்பட்டதைப் பற்றி அவ்வப்போது கவலையடைந்திருந்தார்கள். அவர்களின் சந்தேகங்களில் நம்பகத்தன்மை இருப்பது இப்போது புலப்படுகின்றது. நல்ல மனம் கொண்ட முஸ்லிம் அல்லாதவர்கள் கூட எமது சமூகத்தை சந்தேகத்தோடு நோக்கத் தொடங்கி விட்டனர். இது மிகவும் துரதிஷ்டமானது. தீவிரவாதத்தின் மீதான எந்தவிதமான அறிகுறி தென்பட்டாலும் அதன் மீது ஒன்றுபட்டு கவனக்குவிப்பை ஏற்படுத்தினால் இந்த பிரச்சினையைத் தாண்டுவதற்கு எங்களால் முடியும்.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை எங்கள் மத்தியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட போக்கைக் கொண்டவர்களை மையப்படுத்தி நாங்கள் சுயவிசாரணை செய்ய வேண்டிய அவசியமிருக்கின்றது.
Q பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, முஸ்லிம்களை தீவிரவாதத்திலிருந்து களைய வேண்டுமென்று கேட்டிருக்கின்றார். இதனோடு நீங்கள் உடன்படுகின்றீர்களா?
ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் சம்பிக்க இந்த விடயத்தில் ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து எதனை விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால், இஸ்லாத்தின் போதனைகளுக்கு தவறான அர்த்தத்தைக் கற்பிக்க முயற்சித்த புத்தி பேதலித்த சிலரின் முயற்சியின் பெறுபேறாகத்தான் இந்த தீவிரவாதம் தலைதூக்கியிருக்கின்றது. கடந்த பல வருடங்களாக இந்த விவகாரத்தில் எங்களது சமூகத்துக்குள் சுயவிசாரணையில் ஈடுபாடு கட்டப்பட்டு வந்துள்ளது. இந்த விடயத்தில் நாங்கள் பட்ட கஷ்டம் போதும். நடுநிலையான பாதையிலிருந்து சற்றேனும் பிறழ்ந்து செல்லும் பேர்வழிகள் எங்கு அடியெடுத்து வைக்கின்றார்கள் என்பதை அறிந்து அவர்களை வெளிப்படையாகவே எடுத்துக் காட்டுவதற்கு நாம் சுயமாகவே முன்வந்திருந்தோம். சமூகம் எப்பொழுதுமே விழிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது தேவையாக இருந்தது. அவ்வாறான விடயங்களை நாம் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவோரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம். மனப்பூர்வமாக கூறுவதானால் ஒவ்வொருவருக்கும் குற்ற உணர்வு ஏற்படத்தான் செய்கின்றது.
நாங்கள் கூட்டாக முயற்சித்தால் இதனை வேரோடு கிள்ளி எறியலாம். இந்த பித்துப்பிடித்த, புத்திபேதலித்த கும்பலை எந்த ஒரு நபராவது ஆதரிக்கப்போவதில்லை.
Q நீங்கள் இந்த கேள்வியை சமூகத்தின் மத்தியில் எழுப்பியதாக கூறுகின்றீர்கள். உங்களது பேச்சைக் கேட்காமல் சமூகத்தினால் கைவிடப்பட்டுவிட்டீர்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
வெளியிலிருந்து விமர்சனங்கள் வரும் பொழுது காரணமில்லாமல் இலக்கு வைக்கப்படுவதாக யூகிக்க முற்படுகின்றோம். பின்னர் எங்களது சமய நடைமுறைகளுக்கான உண்மையான காரண காரியங்கள் பிழையாக விளங்கிக் கொள்ளப்படுகின்றன. சில உண்மையிலேயே சமயம் சார்ந்தவை அல்ல, அவை கலாசாரம் சார்ந்தவை. துரதிஷ்டவசமாக சில அந்நிய கலாசார மரபுகள் இறுக்கமான சமய சித்தாந்தமென்ற வகையில் தழுவப்பட்டது.
Q எவை எனக் கூறமுடியுமா?
பல்லின சூழலில் வாழ்கின்ற பொழுது, மற்றவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். கலாசார ரீதியாக நாங்கள் மன்னிப்புக்கோரத் தேவையில்லை. இஸ்லாம் பெண்களுக்கு மிகவும் கண்ணியமான இடத்தை அளித்துள்ளது. இதை நாங்கள் மேலாதிக்கம் செலுத்துவதாகவும் அவர்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் கொள்பவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இது அவர்களின் சொந்த விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது.
எனது உம்மம்மாவும், தாயாரும் ஆடை அணிந்த விதம் வேறு. காலப்போக்கில் கலாசார அம்சங்களோடு வெளியில் இருந்து வந்த சில பழக்க வழக்கங்கள் ஆடை ஆணிகளிலும் இடம்பிடித்துக் கொண்டன. அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தங்களுக்கு தேவையான வகையில் இவற்றை யாரும் திணிக்க முடியாது. நாங்கள் மிக முக்கியமான சுயவிசாரணையை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் சுயமாக தீர்மானிக்க வேண்டும். எவரும் சமூகத்தின் மீது கருத்துக்களை வலிந்து திணிக்கக் கூடாது. மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களுக்கு மாற்றமில்லாமலிருந்தால் பொருத்தமான வகையில் ஆடைகள் அணிவதில் நிர்ப்பந்தமில்லை. சிலர் அதன் உச்சத்திற்கே செல்கின்றனர். சந்தேகங்களும் அச்சமும் அநேகரை பாதிக்கின்றன. ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதாக சுயமாகவே தீர்மானித்து ஏற்றுக் கொள்ளத்தக்க சில மாற்றங்களை செய்து கொள்வது நல்லது.
Q பொதுவாக முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதம் பற்றி பாராளுமன்றத்திலும், வெளியிலும் கேள்வி எழுந்தபொழுது அரசாங்கம் அதனை பாரதூரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
சமயத்தின் பெயரால் ஏதாவது செய்யப்படும் பொழுது எந்த அரசாங்கமும் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன்வருவதில்லை. ஆட்சியாளர் சமய சுதந்திரத்தில் தலையிடாமல் எச்சரிக்கையாக நடந்து கொள்கிறார்கள். பிரான்ஸில் புர்கா தடை செய்யப்பட்டபோது ஐ.நா சபை கூட அதனை மனித உரிமை மீறல் என்றது. அது முஸ்லிம் பெண்களுக்கான ஒரு விருப்பத் தெரிவு. ஆனால் பிரஞ்சு அரசாங்கம் அதனை வேறு விதமாக எண்ணியது. இஸ்லாமோபோபியா என்ற பீதி மனப்பான்மைச் சித்தாந்தம் உலகளாவிய ரீதியில் இருந்து வருகின்றது. அதனை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறார்கள். பயமென்பது அற்புதமானது. ஏனையவர்களுக்கு தேவைப்படுகின்றது என்பதற்காக எங்களது சமய போதனைகளில் நாங்கள் சமரசத்திற்கு இணங்கிவிட முடியாது. வெளியிலிருந்து நோக்கும் பொழுது நாங்கள் ஓரளவு நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருக்கவும் வேண்டும். சிறிய மாற்றங்களை செய்து கொள்ள வேண்டிய அவசியத்தை நாங்கள் புரிய வைக்க முயற்சிக்கவும் வேண்டும்.
எங்களில் பெரும்பாலானவர்கள் நடுநிலையாகச் சிந்திப்பவர்கள். தீவிரப் போக்குடையவர்கள் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டால் அவற்றை எதிர்த்து நிற்பார்கள். நீண்டகால வாழ்க்கை ஓட்டத்தில் நடை, உடை பாவனைகளில் புதிய தோற்றப்பாடுகள் உட்புகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
Q நீங்கள் எதைச் சொன்ன போதிலும் பொதுத்தளங்களில் இந்தக் கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் முஸ்லிம் அமைப்புக்கள் தீவிரவாத சக்திகள் இல்லையென்றே கூறிவருகின்றன. சமூகம்தான் இத்தகைய அமைப்புகளை சரிவர இனங்காண்பதற்கான தன்மையை கொண்டுள்ளன. ஏன் அவ்வாறு நடந்து கொள்கின்றன?
மறுத்துக்கொண்டே காலத்தைக் கடத்த வேண்டுமென்ற நோக்கம் கிடையாது. தெரிந்து கொண்டே மறுப்பது யாருக்கும் உதவாது. மூர்க்கத்தனத்தை நம்பி நடுக்கம் எடுத்திருக்கின்றது. மனிதாபிமானமற்ற ஒரு தீவிரவாதக் கும்பல் சமயத்தின் பெயரை பயன்படுத்தி கொடூரமான குற்றங்களை இழைப்பதற்கு முன்வந்தது வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தி பேதலித்த சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் ஞானமும் கிடையாது. அவர்களைப் பின்பற்ற எவருமே முன்வர மாட்டார்கள். துளியளவும் ஆதரவின்றி வெற்றிடமொன்றில் அவர்களால் சீவிக்க முடியாது. ஐ.எஸ்.ஐ.எஸ் கூட இந்த செயலுக்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை.
Q தீவிரவாதம் முற்றிப்போய் எடுத்த மாத்திரத்திலேயே தற்கொலை செய்து வீணாக உயிரை மாய்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் நீண்ட காலமாக திட்டம் தீட்டியே அவ்வாறு செய்துள்ளனர். அவர்களுக்கு வெவ்வேறு தளங்களில் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க அதனைக் கண்டுபிடிக்க புலனாய்வுத்துறை தவறியிருப்பதாக உணர்கிறீர்களா?
இவர்களுக்கு உள்நாட்டில் பயிற்சி முகாம்கள் இருந்ததாக நான் முதல் தடவையாக கேள்விப்படுகின்றேன். எனக்கு அது ஓர் ஆச்சரியமான செய்தியாகும். அவ்வாறானால் பாரிய தவறு நேர்ந்திருக்கின்றது. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
Q உளவுத்துறையை பலவீனப்படுத்தியதாக அரசாங்கத்தை நீங்கள் குற்றம் சாட்டுகின்றீர்களா?
ஒரு கட்டத்தில் உளவுத்துறை 500 பேருக்கு மேற்பட்டவர்களை கூட்டாகக் கொண்டிருந்தது. அவர்களுக்கு மத்தியில் சில கூழ்முட்டைகள் இருந்திருக்கலாம். அவர்கள் தங்களது அதிகாரத்தையும் ஆற்றலையும் பயன்படுத்தியும் இருக்கலாம். அவசரகால அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தக்கூடாது. உளவுத்துறையில் சரியான கண்காணிப்பு இல்லாவிட்டால் சிலர் எல்லைக் கோட்டை தாண்டிவிடுவார்கள். அவ்வாறான நிலைமையில் அவர்கள் விபரீதமான காரியங்களைப் புரிவார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையின் உளவுத்துறை முஸ்லிம் சமூகத்தின் சில உன்னதமான அதிகாரிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகம் சிறந்த புலனாய்வாளர்களை தாய் நாட்டிற்கு ஈன்றளித்திருக்கின்றது. அவர்களில் அநேகர் தங்களது இன்னுயிர்களையே தியாகம் செய்திருக்கின்றார்கள் என்றால் மிகையாகாது. அது மறக்க முடியாது. தேசத்திற்கு நாங்கள் செய்துள்ள தியாகம் ஏனையவர்கள் செய்ததை விட இரண்டாந்தரமானதல்ல. நிச்சயமாக மீளவும் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறாமல் நாங்கள் தடுக்க வேண்டும். முஸ்லிம்கள் இப்பொழுது மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்கின்றனர். இந்த விடயத்தை கையாள்வதில் பேராயர் மல்கம் ரஞ்ஜித் நடந்து கொண்ட விதத்தையிட்டு நாங்கள் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
Q விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தோடு தமிழ் சமூகம் சில கஷ்டங்களை சந்திக்க நேர்ந்தது. அந்த மக்கள் தொடர்ச்சியான தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதே கதி முஸ்லிம்களுக்கும் நேருமென நீங்கள் அஞ்சுகின்றீர்களா?
இதில் ஓரளவு சிக்கலிருக்கின்றது. எங்களது அன்றாட வாழ்வில் இவ்வாறான அச்ச உணர்வு மேலிடுவதற்கு நாங்கள் இடமளிக்கலாகாது. இதில் மிகவும் பொறுப்பு வாய்ந்த விதத்தில் நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு பாதுகாப்புத் தரப்பினருக்கும் இருக்கின்றது. அவசரகால அதிகாரங்கள் நேர்சீராக கையாளப்பட வேண்டும். துப்புத்துலக்கும் விடயத்தில் அது மிகவும் அவசியமானது.
Q சில முஸ்லிம் நாடுகளிலிருந்து இந்தத் தீவிரவாத சக்திகளுக்கு நிதி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
வெளிநாட்டு நிதி முஸ்லிகளுக்கு மட்டுமல்லாது ஏனைய சமயத்தினருக்கும் கிடைக்கின்றது. எல்லா சமயத்தினரும் இவ்வாறான நிதியைப் பெறுகின்றனர். இவ்வாறான நிதி தீவிரவாத கருத்தோட்டம் உடையவர்களை சென்றடைகின்றதா என்பது தான் இங்கு முக்கியமானது. ஒவ்வொரு நாடும் நுண்ணோக்கியினூடாக உற்று நோக்கப்படுகின்றது. பயங்கரவாதத்துக்கான நிதி விவகாரம் பற்றிய சர்வதேச சாசனங்களும் சட்டவரைபுகளும் உள்ளன. முறையான வங்கி வலைப்பின்னலின் மேற்பார்வையும் உள்ளது. நாங்கள் கண்மூடித்தனமாக வேறு நாடுகளை குற்றம் சாட்ட முடியாது. நன்கொடை தர்ம நிறுவனங்களின் மீது கூட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
vidivelli