ஐ.எஸ் இலங்கையிலிருந்து 95 வீதம் அழிக்கப்பட்டுவிட்டது
எஞ்சியுள்ளோரும் கைதாவர் அல்லது கொல்லப்படுவர் என்கிறார் பயங்கரவாத எதிர்ப்பு நிபுனர் பேராசிரியர் ரொஹான் குணரத்ண
இஸ்லாமிய அரசுக்கு இலங்கையில் இனிமேலும் பெரியளவிலான தாக்குதலொன்றை நடத்தக்கூடிய ஆற்றல் இல்லை. நாட்டிலுள்ள அந்த இயக்கத்தின் வலையமைப்புக்களில் 95 சதவீதமானவை ஈஸ்டர் ஞாயிறு அனர்த்தத்திற்குப் பிறகு பாதுகாப்புப் படைகளினால் நிர்மூலம் செய்யப்பட்டுவிட்டது என்று பிரபல பயங்கரவாத எதிர்ப்பு விவகார நிபுணரான பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்திருக்கின்றார்.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள சங்ரிலா ஹோட்டலில் நடத்திய தாக்குதலில் போது இஸ்லாமிய அரசின் இலங்கைத் தொடர்பாளரான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவரென்று கூறப்படும் சஹ்ரான் ஹாசிம் பலியாகிவிட்டதை உறுதிப்படுத்திய பேராசிரியர் குணரத்ன, இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்ற உள்ளூர் – பாரம்பரிய இஸ்லாமிய மார்க்கத்தை ஆதரித்து உற்சாகப்படுத்துகின்ற அதேவேளை அரசாங்கம் சகல தௌஹீத் அமைப்புக்களினதும் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் நுணுக்கமாகப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் இருக்கும் பேராசிரியர் குணரத்ன செவ்வாய்கிழமை கொழும்பு ‘பைனான்ஸியல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் சிந்தனை அமைப்பான தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தை அமைப்பதற்கான வரைவுத்திட்டத்தை எழுதியவரான அவர், சர்வதேச பயங்கரவாதம் தொடர்பில் சான்று ஆதாரத்துடன் அபிப்பிராயங்களை வெளியிடுவதில் பெயரெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பேட்டியின் சுருக்கம் வருமாறு :
சஹ்ரான் உயிருடன் இல்லை
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று சங்ரிலா ஹோட்டல் தாக்குதலில் சஹ்ரான் ஹாசீம் கொல்லப்பட்டுவிட்டார். இஸ்லாமிய அரசின் இலங்கைக் கிளையின் தலைவரான அவர் மரணிப்பதற்கு முன்னதாக அபூபக்கர் அல் – பக்தாதிக்கும், அவரால் பிரகடனப்படுத்தப்பட்ட இராச்சியத்திற்கும் விசுவாசத்தைத் தெரிவிக்கும் வழக்கமான சத்தியப்பிரமாணத்தைச் செய்து கொண்டார். குண்டை வெடிக்க வைத்து சஹ்ரான் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து எவரும் மறுதலிக்கத் தேவையில்லை.
இலங்கையில் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய அரசின் தாக்குதலிலேயே சஹ்ரான் தற்கொலை செய்து கொண்டிருப்பாரா என்று கேள்விகள் எழத்தான் செய்கின்றன. இஸ்லாமிய அரசின் கோட்பாடு பிறரைக் கொலை செய்வதும், தாம் சாவதுமே. இஸ்லாத்தில் நம்பிக்கையற்ற ஒருவரைக் கொலை செய்துவிட்டு சாவதன் மூலம் சொர்க்கத்திற்குப் போகலாம் என்று நம்பக்கூடியதாக இஸ்லாமிய அரசு இயக்கத்தவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை இஸ்லாமிய அரசின் தலைவர் என்ற வகையில் சஹ்ரானின் கோட்பாடு முதல் சந்தர்ப்பத்திலேயே சாவதாகவே இருந்தது. மேற்கு நாட்டவர்களையும், முஸ்லிம் அல்லாதவர்களையும் சண்டையிட்டுக் கொலை செய்வதன் மூலம் அல்லாஹ்வின் வெகுமானத்தைப் பெறலாம் என்று சஹ்ரான் தனது எழுத்துக்கள், பிரசங்கங்கள் மூலம் முஸ்லிம்களுக்குப் போதித்திருக்கிறார்.
சஹ்ரானின் இலக்கு
முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையேயான பிணைப்புக்களை உடைத்தெறிந்து வேற்றுமைகளை வளர்த்து கலவரத்தை மூள வைப்பதே சஹ்ரானின் இலக்காகும். இஸ்லாமிய அரசு இயக்கம் முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவிவிட்ட நிலையில் பயங்கரவாதிகளின் கைகளுக்குள் முஸ்லிம் சமூகத்தைத் தள்ளிவிடாமல் அவர்களை வென்றெடுப்பதற்கு தேடுதல் நடவடிக்கைகளை மிகவும் அவதானமாக நடத்த வேண்டும்.
சிரியாவிலும், ஈராக்கிலும் பாரம்பரிய யுத்தமொன்றில் அதன் பிராந்தியங்களை இழந்துவிட்ட இஸ்லாமிய அரசு இயக்கம், அதன் தலைவர் அபூபக்கர் அல் – பக்தாதி, அவருடன் இணைந்த ஒவ்வொரு முக்கிய தலைவரும், போராளியும் கைது செய்யப்படும் வரை அல்லது கொல்லப்படும் வரை அதன் மையப்பிராந்தியங்களில் தோற்கடிக்கப்படாததாகவே தொடர்ந்திருக்கும். அந்த இயக்கம் அதன் மைய வலுவை இழந்துவிட்டது. ஆனால் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாகிவிடாது.
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் மத்திய கிழக்கில் ஈராக், சிரியா எல்லையோரத்தை மையப்பிராந்தியமாகக் கொண்டு செயற்பட்டு வந்த இஸ்லாமிய அரசு இயக்கம் அதற்கு அப்பால் பல்வேறு புற எல்லைப் பிராந்தியங்களிலும் வளர்ந்திருக்கின்றது என்பதையே வெளிக்காட்டுகின்றது.
ஏப்ரல் 30 ஆம் திகதி இஸ்லாமிய அரசு இயக்கத்தின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அல் – பக்தாதியின் வீடியோ, அந்த இயக்கம் அதன் மையக்களத்தில் சுருங்கிப்போய்விட்டது என்பதையே வெளிக்காட்டுகின்றது. ஈராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய அரசு இயக்கம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்கா செய்த பிரகடனம் அவசரப்பட்டுச் செய்த ஒன்றாகும். இலங்கையும் இலங்கையர்களும் ஒரு பாடத்தைப் படித்தாக வேண்டும். பயங்கரவாதிகளைப் பிடிப்பதோ அல்லது கொலை செய்வதோ போதுமானதல்ல. இஸ்லாமிய அரசு உறுப்பினர்களின் கோட்பாடுகளுக்கு எதிரான வலுவான நடவடிக்கை தேவை. இந்த இயக்கத்தின் தலைமைத்துவத்தை ஒழித்துக்கட்டிய பின்னர் அவர்களின் கோட்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளே இறுதியில் அவர்களுக்குத் தோல்வியைத் தரும்.
தெற்காசியாவில் இஸ்லாமிய அரசின் செயற்பாடுகள்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்கள் இந்தப் பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலைத் தோற்றுவிக்குமா? அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆசியப் பிராந்தியத்திற்கு நகர்த்தப்பட்டுவிட்டனவா? என்று பேராசிரியர் குணரத்னவிடம் நேர்காணலில் கேட்கப்பட்ட போது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
இஸ்லாமிய அரசு இயக்கத்தின் அச்சுறுத்தலில் மூன்று முக்கிய மையங்களில் ஆசியாவும் ஒன்றுதான். ஈராக்கிலும், சிரியாவிலும் அந்த இயக்கம் பிராந்தியங்களின் கட்டுப்பாட்டை இழந்த பிறகு அது கவனத்தைக் குவித்த நான்கு பிராந்தியங்களில் ஒன்றாக ஆசியா விளங்குகின்றது. உலக முஸ்லிம் சனத்தொகையில் 63 சதவீதமானோர் ஆசியாவில் வாழ்கின்ற நிலையில் அச்சுறுத்தல் ஆசியாவிற்கு நகர்த்தப்பட்டிருக்கின்றது. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் காக்கசஸ் மலைப் பிராந்திய நாடுகளில் இஸ்லாமிய அரசு இயக்கம் அதன் பிரசன்னத்தைப் பேணுகின்ற போதிலும் ஆசியா குறிப்பிடத்தக்கதொரு களமாக வெளிக்கிளம்பியிருக்கின்றது.
மத்திய ஆசியாவிலும், வடகிழக்கு ஆசியாவிலும் இஸ்லாமிய அரசின் அச்சுறுத்தல் மிகவும் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்ட அதேவேளை, ஆசியாவில் அச்சுறுத்தலின் ஈர்ப்பு மையமாக தெற்காசியாவும், தென்கிழக்காசியாவும் இருக்கின்றன. தெற்காசியாவில் ஆப்கானிஸ்தானிலும், தென்கிழக்காசியாவில் பிலிப்பைன்ஸிலும் இஸ்லாமிய அரசு இயக்கம் பிராந்தியங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. தெற்காசியாவில் இஸ்லாமிய அரசு இயக்கத்தை மையமாகக் கொண்ட அச்சுறுத்தல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் மிகவும் முனைப்பானதாக இருக்கின்றது. அதேபோன்று தென்கிழக்காசியாவில் அந்த இயக்கத்தை மையமாகக் கொண்ட அச்சுறுத்தல் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் முனைப்பானதாக இருக்கின்றது. ஈஸ்டர் ஞாயிறு இலங்கைத் தாக்குதல்கள் இலங்கையிலும், மாலைதீவிலும், தென்னிந்தியாவிலும் இஸ்லாமிய அரசு இயக்கம் அதன் மத்திய தலைமைத்துவத்துடன் தொடர்புபட்ட வகையில் வலையமைப்பு ஒன்றை இரகசியமாக அமைத்துவிட்டது என்பதையே காட்டுகின்றது.
பௌத்த தலங்கள் மீதான தாக்குதல் சாத்தியப்பாடு?
பௌத்த வணக்கத்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியம் குறித்து கடந்தவாரம் புலனாய்வு நிறுவனங்கள் எச்சரிக்கை செய்திருந்தன. உங்களது அவதானிப்பின்படி மற்றொரு ஒருங்கிணைந்த தாக்குதலுக்கான சாத்தியமுள்ளதா என்று பேராசிரியர் குணரத்னவிடம் கேட்கப்பட்ட போது அவரளித்த பதில் வருமாறு:
இலங்கை மண்ணில் பெரியளவிலான தாக்குதலொன்றை நடத்தக்கூடிய ஆற்றல் இஸ்லாமிய அரசிடம் இல்லை. இலங்கையில் இஸ்லாமிய அரசின் வலையமைப்பின் 95 சதவீதமானவை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கைப் பாதுகாப்புப் படைகளால் நிர்மூலம் செய்யப்பட்டுவிட்டன. எஞ்சியிருக்கக்கூடிய செயற்பாட்டாளர்களும், ஆதரவாளர்களும் பிடிக்கப்பட்டுவிடுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள். காலம் தாமதித்து என்றாலும் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தீர்க்கமானவையாக அமைந்திருந்தன. இதேவேகத்தில் சுறுசுறுப்புடன் அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடருமாக இருந்தால், இலங்கையில் தாக்குதலை நடத்தியதன் மூலம் தங்களுக்கு அழிவைத் தேடித்தரக்கூடிய படுமோசமான தவறொன்றைச் செய்துவிட்டதை இஸ்லாமிய அரசு இயக்கத்தின் தலைவர்கள் புரிந்துகொள்வார்கள். உறங்கிக் கொண்டிருந்த பூதமொன்றை இஸ்லாமிய அரசின் தாக்குதல்கள் தட்டியெழுப்பி விட்டன. ஈவிரக்கமற்ற ஒரு பயங்கரவாத சக்தியை இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தோற்கடித்ததை முழு உலகமும் அறியும்.
பிரத்தியேகமான முஸ்லிம் பகுதிகள் இருக்கக்கூடாது
எதிர்காலத்தில் படுமோசமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முகங்கொடுப்பதற்கு நீண்டகால அடிப்படையிலான விரிவான அணுகுமுறை ஒன்றை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் முக்கியமானது முஸ்லிம்களுக்கு என்றோ அல்லது எந்தவொரு சமூகத்திற்குமென்றோ பிரத்தியேகமான நிலப்பகுதிகள் என்று இருக்கக்கூடாது. இந்தப் பிரத்தியேக தன்மை தீவிரவாதத்திற்கு வழிவகுப்பதைத் தடுப்பதற்கு அரசாங்கம் அதன் படையினரையும், அவர்களின் குடும்பங்களையும் சகல சமூகங்களுடனும் ஒன்றிணைந்ததாக காத்தான்குடியிலும், அதேபோன்று கிராமங்கள், நகரங்களிலும் குடியமர்த்த வேண்டும். பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் தலைவர்களுடன் சேர்ந்து செயற்பட்டு அரசாங்கம் நிலையான சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு சகவாழ்வுத் தந்திரோபாயம் ஒன்றை மிகவும் அவதானமாக வகுக்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள்
இஸ்லாமிய அரசின் கோட்பாட்டைப் பிரசாரப்படுத்துவதற்கு தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பை அனுமதித்ததில் முஸ்லிம் தலைவர்களுக்குக் குற்றப்பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று நேர்காணலில் கேட்கப்பட்ட போது, ‘முஸ்லிம்களின் வாக்குகள் தீர்க்கமானவை என்ற காரணத்தினால் அரசாங்கத் தலைவர்கள் இலங்கைக்குப் பொருத்தமற்றதான மத்திய கிழக்குப் பாணி இஸ்லாம் மார்க்கத்தை வெளிநாட்டு நிதியுதவியுடன் அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை முஸ்லிம் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை அலட்சியம் செய்து வந்திருக்கின்றார்கள்.
உள்ளூர் மற்றும் பாரம்பரிய இஸ்லாத்தை வெளிநாட்டுப் பாணி இஸ்லாம் பதிலீடு செய்யும் போது இலங்கையின் சமூகக் கட்டுமானம் குறிப்பாக முஸ்லிம்களுக்கும், முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கும் இடையிலான உறவுகள் சேதமடைகின்றன. மத விவகாரங்களை ஒழுங்கமைப்பதில் இலங்கை இழைத்த தவறு நாட்டின் தேசிய ஐக்கியத்தை பாரதூரமாக சேதப்படுத்திவிட்டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இரவோடிரவாக நடந்த ஒன்றல்ல. பாதுகாப்பு விவகாரங்களை விளங்கிக்கொள்ளாத இலங்கை அரசியல்வாதிகளின் மெத்தனப்போக்கின் காரணமாகப் பொறுப்பற்ற முஸ்லிம் தலைவர்களால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளே குண்டுத் தாக்குதல்களுக்குக் காரணமாக அமைந்தன” என்று குறிப்பிட்டார்.
vidivelli