நாட்டில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், இதன் காரணமாக முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலுள்ள முஸ்லிம் வியாபார நிலையங்களைப் பகிஷ்கரிக்குமாறும் முஸ்லிம்களுடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் பகிரங்க பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக ”இந்த விற்பனை நிலையத்தில் இதன் பின்னர் எந்த முஸ்லிம் நிறுவனத்திற்கும் உரிய பொருட்கள் விற்பனை செய்யப்படமாட்டாது” என்றும் ”எந்த முஸ்லிம் நிறுவனத்தையும் சேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் எவரும் அவர்களின் பொருட்களை எடுத்து வர வேண்டாம்” என்றும் எழுதப்பட்ட அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இந்த அறிவித்தல் எந்தப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளது என்பது தெரியவரவில்லை.
இதற்கிடையில் வெளியூர்களில் வர்த்தக நிலையங்களை நடாத்தும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களும் பலத்த அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. வெளியூர்களில் வாடகைக்கு கடைகளைப் பெற்று வர்த்தகத்தில் ஈடுபடும் காத்தான்குடி வர்த்தகர்களை, குறித்த கடைகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அதன் உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் காத்தான்குடியைச் சேர்ந்த சுமார் 200 அங்காடி வியாபாரிகள் வழமைபோன்று வெளியூர்களுக்குச் சென்று வியாபாரத்தில் ஈடுபட முடியாதுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுடன் வர்த்தக தொடர்புகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் முஸ்லிம் பகுதிகளுக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் ஒரு குழுவினர் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கி அறிவித்தல் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கப்பால் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சாரதிகளுக்குச் சொந்தமான முச்சக்கர வண்டிகளில் ஏறுவதற்கு பெரும்பான்மை இன மக்கள் மறுப்பதாகவும் ஏலவே வழங்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஓடர்களை இரத்துச் செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள பிரபல முஸ்லிம் கேக் தயாரிப்பு நிபுணர் ஒருவரிடம் நிகழ்வு ஒன்றுக்காக முன்கூட்டியே ஓடர் செய்யப்பட்ட 500 கேக் துண்டுகளுக்கான கேள்வியை அவை தயாரிக்கப்பட்ட பின்னர் வாடிக்கை யாளர் இரத்துச் செய்துள்ளதாக குறித்த பெண் கேக் தயாரிப்பு நிபுணர் தனது டுவிட்டர் கணக்கில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vidivelli