அபாயாவை கழற்றி சொப்பிங் பேக்கில் போட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்
நீர்கொழும்பு வைத்தியசாலையில் சம்பவம்
நீர்கொழும்பு அரச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கலர் அபாயா அணிந்து கொண்டு சென்ற பெண்மணியொருவரை அபாயாவும் முந்தானையும் கழற்றப்பட்டு சொப்பிங் பேக்கில் போடப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன் அதன் பின்பு சிகிச்சைக்கு செல்லுமாறு வைத்தியசாலை பெண் பாதுகாப்பு ஊழியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பெரியமுல்லை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் கொழும்பு வடக்குக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் முறைப்பாடு செய்துள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது, நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கலர் அபாயா அணிந்து சிகிச்சைக்காகச் சென்ற முஸ்லிம் பெண்ணிடம் அபாயா அணிந்து வரக்கூடாது என்று கூறிய பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை அழைத்துச்சென்று அபாயாவையும் முந்தானையையும் கழற்றி சொப்பிங் பேக் ஒன்றிலிட்டு கொடுத்துள்ளார்.
அதன் பின்பே சிகிச்சைக்குச் செல்லுமாறு பணித்துள்ளார். குறிப்பிட்ட பெண் சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல் வீடு திரும்பி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலைகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்லலாம் என சுகாதார அமைச்சு ஏற்கனவே சுற்று நிருபம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vidivelli