- எம்.எம்.ஏ.ஸமட்
வசந்த காலத்தின் வாயிற்படிதான் நோன்பு. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மா மருந்தே நோன்பாகும். நோன்பின் மகத்துவத்தினால், எமது அத்தனை உறுப்புக்களும் அதன் செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டதான ஒழுங்கு முறைக்கு உள்ளாகின்றன. அதன் பயனாக உடலும் உள்ளமும் சுத்தம் செய்யப்படுகிறது. ஆக, ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்றதொரு மாதமாக புனித ரமழான் மாதம் நோக்கப்படுகிறது.
இத்தகைய நோன்பின் மகத்துவம் விளங்காது, இம்மாதத்தின் புனிதம் தெரியாது, நம்மில் பலர் அறிந்தும் அறியாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் சில இளைஞர்கள் இவ்வாறு ரமழான் மாதத்தின் தத்துவம் புரியாது அல்லது புரிந்தும் புரியாததுபோல் செயற்படுவதே மன வேதனைக்குரியது. கேள்வியும் அதற்கான பதிலும் நம் கரங்களில் கிடைத்தும் கூட விடையளிக்கத் தெரியாதவர்களாக நாம் இருப்பதை என்னவென்று சொல்வது.
உண்மையில் நோன்பின் பண்பு அது. மனிதனின் அடிப்படையான அங்கீகரிக்கப்பட்ட இச்சை, உணவு மற்றும் பானம் என்பவற்றுடன் சம்பந்தப்பட்டது.
இம்மூன்றையும் குறிப்பிட்ட மணித்தியாலயங்களுக்குத் தவிர்த்திருப்பதே நோன்பாகும். அதிலும் குறித்த நேரகாலத்தில் ஆசைகளைத் தவிர்த்திருப்பது அவசியமாகும். ஆனால், அடிப்படையான ஆசைகளைத் தவிர்த்திருப்பது இலகுவான காரியமல்ல.
இருப்பினும், அது மிகப் பெரிய மனப்போராட்டத்துடன் சம்பந்தப்பட்டது. ஆசைகளை அடக்கி நோன்பின் புனிதத்தைப் பாதுகாப்போருக்கு வல்ல இறைவன் பல கூலிகளை வைத்திருக்கிறான். அவற்றை அடைய வேண்டுமாயின் ஆசைகளை அடக்கித்தானாக வேண்டும். “நோன்பு எனக்குரியது அதற்குரிய கூலியை நானே வழங்குவேன். அவன் தனது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகின்றான்” என வல்ல இறைவன் வாக்களிக்கின்றான்.
உணர்வுகளும் இளைஞர்களும்
உணர்வைக் கட்டுப்படுத்தி உடலையும், உள்ளத்தையும் ஆற்றுப்படுத்தும் நோன்பின் மாண்பைப் பாதுகாக்கும் பொறுப்பை சுமந்த ஒவ்வொரு முஸ்லிமிலும் இளைஞர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். ஏனெனில், இளைஞர்களது இயல்புகள் உணர்வுகளாலும், ஆசைகளாலும் புடம்போடப்படுகின்றன.
ஆசைகளுக்கும், உணர்வுகளுக்கும் ஆட்படும் ஒரு சிலரின் ஈனச் செயல்கள், சமூகவிரோதச் செயற்பாடுகள், தாக்குதல்கள் ஒரு சமூகத்தை மாத்திரமின்றி ஒரு நாட்டையே பாதிக்கும் என்பதை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் உணர்த்தி நிற்கிறது. ஆதலால், உணர்வுகளை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தும் நோன்பை நோன்பாக நோற்க வேண்டியவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும்.
ஆசைகளுக்கு அடிமைப்பட்டு அவசரமாக செயற்படுவதை இலட்சியமாகவும், இலக்காகவும், அதை நாகரிகமாகவும் கருதுகின்றவர்கள் அவற்றை அடைந்துகொள்ள முனைவது அவர்களை அதலபாதாளத்தில் தள்ளிவிடும் என்பதை உணர்ந்துகொள்வது அவசியமாகும். உணர்வுகளுக்கும் ஆசைகளுக்கும் கட்டுப்பட்டு வாழும் ஆற்றுப்படுத்தலை வழங்கும் நோன்பை மகத்துவத்துடன் பேணுவது முக்கியமாகும்.
படைத்த இறைவனின் நினைப்போடும், இஸ்லாமிய நேரான உணர்வோடும் நமது வாழ்நாளை கடைப்பிடித்து வாழும் இளைஞர்களுக்கு இறைவனின் அருள் நிச்சயமுண்டு. ரமழான் மாதத்தில் உணர்வுகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்தும் பலத்தை ரமழானின் பின்னரான காலங்களிலும் கட்டுப்படுத்தி வாழும்போது வழிதவறிய வாழ்க்கையிலிருந்து நேரான வாழ்வை ஏற்படுத்தி வாழ வழிவகுக்கும். அந்த வாழ்க்கையே நாட்டுக்கும் சமூகத்திற்கும் பயன்மிக்க இளைஞர் சமுதாயத்தின் வாழ்க்கையாகவும் அமையும்.
ஆசைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்தி ஆற்றுப்படுத்தும் நோன்பானது உடல் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. உணவுக்கட்டுப்பாடும் உணவுகளிலுள்ள பேராசையையும் தவிர்ப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் பேணும் மா மருந்தாகவும் நோன்பு அமைகிறது. இந்நிலையில், பணம், பட்டம் பதவி என்று அதைத்தேடி ஓடுவதற்காக புனித ரமழான் மாதத்தையும் மகத்துவமிக்க நோன்பையும் விட்டுவிடும் நம் சகோதர சகோதரிகளை எவ்வாறு நோக்குவது. அல்லாஹ் அவர்களுக்கு நல்வழி காட்டுவானாக!
புனித நோன்பின் தாற்பரியம் பற்றியும் அது கொண்டுள்ள விஞ்ஞான, மருத்துவ மற்றும் உளவியல் தன்மைபற்றியும் அன்று முதல் இன்று வரை பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் உலகளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பயனாக நோன்பின் பல மருத்துவ குணங்கள் மருத்துவ ஆய்வாளர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
நோன்பின் ஆரோக்கியம்
உலகளாவிய ரீதியில் இடம்பெறும் இறப்புக்களுக்கு மிக முக்கியமாக இருப்பது தொற்றா நோய்களெனக் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலும் தொற்றா நோய்களினால் ஏற்படும் இறப்புக்களே அதிகம் எனவும் கூறப்படுகிறது. இதற்கான காரணங்களில் ஒன்றாக நமது உணவுப் பழக்க முறை காணப்படுகிறது. நோன்பு நோற்பதற்காக நாம் உண்ணும் நேரங்கள் அந்த நேரங்களில் உணவு உட்கொள்ளும்போது உடலில் ஏற்படும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆய்வுகள் பல உண்மைகளை வெளியிட்டுள்ளன. அவற்றை நோக்குகின்றபோது நோன்பின் பண்புகளை அறியமுடிகிறது.
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் அதிகாலை 3–-5 மணி வரையுள்ள 2 மணித்தியால நேரமாகும். நுரையீரலானது தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும்போது சிறப்பாக இயங்குவதாக மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் அதிகாலை நேரத்தில் (ஸஹர் நேரத்தில்) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயற்படுகின்றது.
இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் அதிகாலை நேரத்தைத்தான் வல்ல இறைவன் நமக்கு நோன்பு நோற்பதற்கான நேரமாக ஆக்கித் தந்திருக்கிறான். இருப்பினும் இப்பெறுமதி விளங்காத நம்மில் பலர் இந்த நேரத்தை நோன்பு காலத்திலேனும் அடையாமல் இருக்கிறார்கள். அடைந்தும் வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்
அத்துடன், காலை, மதியம், இரவு என மூன்று வேளை சாப்பிட்டுப் பழகிப்போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை ரமழானின் ஒரு மாத காலத்தில் நாம் உண்ணும் நேர காலத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அதிகாலையில் (ஸஹர் நேரத்தில்) நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறைகளில் ஓய்வு கிடைத்து வழக்கத்துக்கு மாறாக அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் நலமாகின்றன என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ஸஹர் நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சுய உணர்வுடன் நன்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுவது ஆரோக்கியமானது. அவ்வாறு சாப்பிடுகின்றபோது அதிகமாகச் சாப்பிட வேண்டுமென்ற ஆசை குறைந்து நன்றாகச் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். ஆனால் சிலர் பகல் முழுதும் பட்டினி கிடக்கப்போகிறோம் என்றெண்ணி அளவுக்கதிகமாக உண்டு அவஸ்தைப்படுவதையும் அறியாமலில்லை.
வழமையான நாட்களில் நாம் உண்ணும், குடிக்கும் உணவுகளும் பானங்களும் நமது உடல் சுகாதாரத்துக்கு தீங்கிழைக்கின்றபோதிலும் நோன்பு காலத்தின் பகற்பொழுதில் அவை தவிர்க்கப்படுவதால் அவை உடல் நலிவடைவதிலிருந்து காப்பாற்றி உடலை சீராக இயங்க உதவியளிக்கிறது. இந்நேரத்தில்தான் உடலின் கொழுப்புக்கள் கரைக்கப்படுவதுடன் உடலிலுள்ள கழிவுகள் நீக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு மாத கால நோன்பு உடற்கழிவுகளை நீக்கி, இரைப்பை, குடல் முதலியவற்றைப் புதுப்பிக்கிறது. அவற்றின் பணிகள் சிறக்க உதவுகின்றன. உடல் பருமன் குறைவதற்கு வழியேற்பட்டு இரத்தக் கொதிப்பு, இதய நோய்கள் போன்றவற்றிலிருந்து உடலை நோன்பு காக்கிறது.
உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு மனிதனுள் காணப்படும் ‘இட்’ எனும் மிருக உணர்வு அடைக்கப்படுகிறது. உணவு உண்பதிலும் பானம் அருந்துவதிலும், உறங்கும் முறையிலும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் தோற்றுவிக்கிறது.
பசித்திருப்பதும் பசித்த பின்பே உண்ணுவதும் நலம் தரும் செயல்களாகும். இந்த வகையில் நோன்பானது உடலுக்கு மிகுந்த நலனை வழங்குகிறது. உள்ளத்துக்கும் அமைதியைக் கொடுக்கிறது
அது மாத்திரமின்றி, இரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு போன்ற நோய்களுக்கான நிவாரணி நோன்பென அமெரிக்கர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். நோன்பு உடல் கழிவுகளை நீக்க உதவுகிறது. தசைகளுக்கு வலுவூட்டுகிறது. உடலியக் கத்த்தை சமநிலைப்படுத்துகிறது.
ஏறக்குறைய 14 மணித்தியாலம் பசித்திருப்பதன் மூலம் உடற் கலங்கள் புத்துணர்வு பெறுகின்றன, சிதைவுகள் சீர் செய்யப்படுகின்றன. இந்தவகையில் நோன்பானது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்குகிறது.
‘நோயுற்றவரிடமிருந்து உணவை நீக்கி விடுங்கள். அப்போது பட்டினி கிடப்பது நோயுற்றவரல்ல அவரது நோயே’ என அமெரிக்க மருத்துவர் டியூவே கூறியுள்ளார்.
மற்றுமொரு அமெரிக்க மருத்துவரான ஹாஸ் கூறுகையில், “நோன்பு மிகச் சிறந்த இயற்கை மருத்துவம். மிகத் தொன்மையான உலகளாவிய நோய் நிவாரணி, என் வாழ்வில் ஒரு சமயம் நான் நோயுற்ற வேளையில் உணவைத் தவிர்ந்திருந்ததனால் என் உடல் நலமடைந்தது. புதிய சக்தி உடலில் பாய்வதை உணர்ந்தேன். உடலியக்கத்தில் ஓர் உத்வேகம் பளிச்சிடுவதையும் உணர்ந்து கொண்டேன். ஆரோக்கியம் தரும் நோன்பு பல நோய்களைத் தடுக்கிறது என்று அவர் அனுபவத்தின் வாயிலாக நம் மீது கட்டாயமாகக் கடமையாக்கப்பட்ட நோன்பின் மருத்துவப் பண்புகள் பற்றி எடுத்துரைத்துள்ளார்.
இவ்வாறு பல விஞ்ஞான மருத்துவ, உளவியல் பண்புகளைக் கொண்ட புனித ரமழான் மாதம் நம்மை அடைந்தும் அதன் மகத்துவம் புரியாமல் அழிந்து போகும் இந்த உலகத்துக்காகவும் மரணத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் இவ்வாழ்க்கைக்காகவும் நாம் எத்தனையோ தியாகங்களை புரிகின்றோம். ஆனால், நமது உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் நோன்பு வைத்திருக்கிறது. அதன் மகத்துவத்தைப் பேண, அதன் மருத்துவத்தை அடைந்துகொள்ள நம்மில் பலர் மறந்துள்ள நிலையில் அதன் உண்மைத்தன்மை ஏற்றுக்கொள்ள, அறிந்துகொள்ள விரும்பாத நிலையில் பிற மதத்தவர்கள் அதன் மகத்துவம் பற்றிப் பேசுவதை கண்டு நாம் வெட்கித் தலைகுனிவதா அல்லது இம்மாதத்தின் பலாபலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு நம்மை தியாகித்துக்கொள்வதா? என்ற கேள்வி ஒவ்வொரு முஸ்லிமும் தங்களுக்குள் எழுப்பி அதற்கான விடைகாண வேண்டிய காலமாக இந்த ரமழான் மாதம் விளங்குகிறது.
-Vidivelli