ஜும்ஆ பிரசங்க ஒலிப்பதிவை திணைக்களத்திற்கு அனுப்பவும்
முஸ்லிம் சமய விவகார அமைச்சர் பள்ளிகளுக்கு பணிப்பு
நாட்டிலுள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் வாராந்தம் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அவை தொடர்பில் ஆராய்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கும் அனுப்பி வைத்துள்ள அறிவுறுத்தல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
*நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு ஒரு சில தீவிரவாதிகளே காரணம். பள்ளிவாசல்களில் எந்தவோர் அடிப்படைவாத பிரசாரத்துக்கும் இடமளிக்கக் கூடாது.
*சமூகத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
*சட்ட விரோதமான தீவிரவாதத்துக்கு ஆதரவாக எந்தவொரு செயற்பாடுகளும் பள்ளிவாசல்களுக்குள் இடம்பெறக்கூடாது. இடமளிக்கவும் கூடாது.
*தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்கள் அச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள். இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாட்டினைக் கொண்டவர்கள். அவர்கள் முஸ்லிம்கள் அல்ல.
ஒரு அப்பாவியைக் கொலை செய்தால் அவர் முழு சமூகத்தையும் கொலை செய்ததற்கு பொறுப்பாவார் என இஸ்லாம் தெரிவித்துள்ளது என்பதை ஒவ்வொருவரும் நினைவிற் கொள்ள வேண்டும்.
*-பள்ளிவாசல் நிர்வாகிகள் ஏனைய இன மக்களுடன் நல்லிணக்கத்தைப் பேணவும், நல்லுறவினைப் பலப்படுத்தவும் திட்டங்களை வடிவமைத்து செயற்படுத்த வேண்டும். இது நிர்வாகத்தின் பொறுப்பாகும். சமூகங்களுக்கிடையில் பொதுவான கருத்துகளை பரிமாறிக் கொள்வதுடன் உறவினைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனைய மதத்தினரை பள்ளிவாசலுக்கு அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli