மத்ரஸா மற்றும் அரபுக் கல்லூரிகளின் நிர்வாக நடவடிக்கைகளை தனியான சபையொன்றிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது உடன் நிறுத்தப்பட வேண்டும். அரபு பாடசாலைகள் அனைத்தையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபிததேரர் தெரிவித்தார்.
மத்ரஸா பாடசாலைகள் மற்றும் அரபுக் கல்லூரிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே ஓமல்பே சோபிததேரர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; “மத்ரஸா மற்றும் அரபுக் கல்லூரிகளின் நிர்வாக நடவடிக்கைகளுக்கும், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் தனியான சபையொன்றினை நிறுவுவதற்கு தனியான சட்டமொன்று இயற்றிக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தனியான சபையொன்றினை நிறுவி வாத, விவாதங்கள் நடத்தி அவற்றின் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை.
அரசியல் யாப்புக்கமைய இந்நாட்டு மக்களின் கல்வி நடவடிக்கைகள் கல்வி அமைச்சின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் அரபுப் பாடசாலைகள் கல்வியமைச்சின் கீழ் கொண்டு வரப்படவேண்டும். எமது நாட்டின் ஏனைய கல்வி நிறுவனங்கள் இயங்குவது போன்று கல்வியமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைய மத்ரஸா மற்றும் அரபுக் கல்லூரிகள் இயங்கவேண்டும். அதனால் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கண்காணிப்புக்குள் இந்தப் பாடசாலைகளை உள்ளீர்ப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் குழுவொன்று நியமிக்கத் தேவையில்லை. தனியான சட்டமொன்றும் தேவையில்லை. மத்ரஸா மற்றும் அரபுக் கல்லூரிகள் அனைத்தும் கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்” என்றார்.
-Vidivelli