நாட்டில் பரவலாக முன்னெடுக்கப்படும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுவது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சோதனை நடவடிக்கைகளின்போது பள்ளிவாசல்கள், புனித அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கிரந்தங்கள் எனபனவற்றின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அத்துடன் பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகளிடமும் முஸ்லிம் சமூகத்தின் கவலைகள் குறித்து தெரியப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது இடம்பெறும் சோதனை நடவடிக்கைகளின் போது படையினர் நாகரிகமாக நடந்து கொள்வதாக அறிய முடிகின்றது. அத்துடன் பொது மக்களது வீடுகளில் சோதனை நடவடிக்கைகளுக்குச் செல்லும் போது ஊடகங்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இவை ஒருபுறமிருக்க ஹிஜாப் அணிந்து செல்லும் பெண்கள் பொது மற்றும் தனியார் கட்டிடங்களில் நுழைய முடியாதவாறு வெளியேற்றப்பட்ட சம்பவங்களும் பதிவாகின. இதனையடுத்து ஹிஜாப் மற்றம் நிகாப்,புர்கா தொடர்பான வரைபடங்களுடன் கூடிய விளக்க சுற்றுநிருபங்கள் அரச அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனினும் அவிசாவளை, புவக்பிட்டிய தமிழ் பாடசாலை ஒன்றில் கற்பித்த 10 முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட அப் பாடசாலையின் நிர்வாகமும் பெற்றோரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த ஆசிரியைகளுக்கு உடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடருமாயின் இது இலங்கையின் கல்வித் துறைக்கு பாரிய பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.
இதற்கப்பால் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. அதுதான் சோதனை நடவடிக்கைகளின்போது ஏராளமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை எத்தனைபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற சரியான புள்ளிவிபரங்களை பொலிசார் வெளியிடவில்லை. எனினும் கைது செய்யப்பட்டோரில் அதிகமானோர் பயங்கரவாத செயல்களுடன் எந்தவிதத்திலும் தொடர்பற்றவர்கள் என்றே நம்பப்படுகிறது.
குறிப்பாக கடந்த காலங்களில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக பகிரங்க தளத்தில் எழுதியும் செயற்பட்டும் வந்தவர்கள் கூட கைது செய்யப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும். இவ்வாறான செயற்பாட்டாளர்களுள் ஒருவரான புத்தளத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையானது முஸ்லிம்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோன்று தமது கையடக்க தொலைபேசியில் தீவிரவாதத்துடன் சம்பந்தப்படாத பயான்களை வைத்திருந்த உலமாக்கள், இளைஞர்கள் கூட கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான கைதுகள் முஸ்லிம் சமூகத்தை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதுடன் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது. இதுபோன்ற கைதுகள் மற்றும் சோதனைகள் எதிர்காலத்திலும் தொடரக் கூடும். சந்தேகம் என்ற போர்வையில் பலரும் கைதாகக் கூடும். கடந்த யுத்த காலத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏராளமான தமிழ் இளைஞர்கள் இன்றும் கூட சிறைகளிலேயே காலத்தைக் கடத்தி வருகின்றனர். இதே நிலை முஸ்லிம் இளைஞர்களுக்கும் ஏற்படாது என்று சொல்வதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
எனவேதான் படையினராலும் சரி ஏனைய தரப்புகளாலும் சரி அப்பாவி முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீறப்படும்போது அது தொடர்பில் உரத்துக் குரல் கொடுக்கவும் அவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவும் முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும். இதற்காக முஸ்லிம் சட்டத்தரணிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.
மாவட்டம் தோறும் இதற்காக விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்க வேண்டும். மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவாகும்போது உரிய தரப்புகளுடன் தொடர்புபடவும் அற்ப காரணங்களுக்காக கைது செய்யப்படும் அப்பாவி இளைஞர்களை விடுவிக்கவும் இக் குழுவினர் முன்னின்று செயற்பட வேண்டும். இது விடயமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இக் குழு விரைந்து செயற்பட்டு கைதாகியுள்ள அப்பாவிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
-Vidivelli